என் மலர்tooltip icon

    செய்திகள்

    தாய் மீது மோசடி புகார்: என்ஜினீயரிங் மாணவி காரில் கடத்தல்
    X

    தாய் மீது மோசடி புகார்: என்ஜினீயரிங் மாணவி காரில் கடத்தல்

    கூடுவாஞ்சேரி அருகே என்ஜினீயரிங் மாணவியை காரில் கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தாம்பரம்:

    கூடுவாஞ்சேரியை அடுத்த ஊரப்பாக்கம் செல்வராஜ் நகரில் வசித்து வருபவர் சாந்தி. இவரது மகள் பிரியங்கா (20). மணிமங்கலத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    நேற்று காலை சாந்தியின் வீட்டுக்கு 4 பேர் கும்பல் காரில் வந்தனர். அவர்கள் சாந்தியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திடீரென அவர்கள் மாணவி பிரியங்காவை காரில் கடத்தி சென்றனர்.

    இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் தெரிவித்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    இதற்கிடையே கடத்தப்பட்ட மாணவியை சிங்க பெருமாள் கோவில் அருகே செட்டிபுண்ணியத்தில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைத்திருந்தது தெரிந்தது. போலீசார் விரைந்து சென்று பிரியங்காவை மீட்டனர். அங்கிருந்த கடத்தல்காரர்கள் 4 பேரையும் கைது செய்தனர்.

    அவர்கள் படப்பையை சேர்ந்த சேகர், வாலாஜாபாத்தை சேர்ந்த ஞானமூர்த்தி, தண்டபாணி, ராஜ் என்பது தெரியவந்தது. அவர்களிடம் போலீசார் விசாரணை செய்தபோது திடுக்கிடும் தகவல் கிடைத்தது.

    கடத்தப்பட்ட மாணவி பிரியங்காவும், அவரது தாய் சாந்தியும் கடந்த மாதம் வரை மதுரவாயலில் வசித்து வந்துள்ளனர். அங்கு குடிசை மாற்று வாரியத்தில் வீடு வாங்கி தருவதாக ஏராளமானவர்களிடம் சாந்தி பணம் வாங்கி இருந்தார். ஆனால் அவர் வீடு வாங்கி கொடுக்கவில்லை.

    இதுதொடர்பான மோசடி புகாரில் ஏற்கனவே சாந்தியை போலீசார் கைது செய்து உள்ளனர். ஜாமீனில் வெளியே வந்த அவர் குடும்பத்துடன் ஊரப்பாக்கத்துக்கு இடம் மாறி வந்துள்ளார்.

    இதனை அறிந்த பணம் கொடுத்து ஏமாந்த சேகர் உள்பட 4 பேரும் சாந்தியை மிரட்டி பணம் கேட்பதற்காக அவரது மகள் பிரியங்காவை கடத்தி சென்றது தெரியவந்தது. இது தொடர்பாக கைதான 4 பேரிடமும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

    கடத்தப்பட்ட 5 மணி நேரத்துக்குள் மாணவி மீட்கப்பட்டுள்ளார். இதில் சிறப்பாக செயல்பட்ட போலீசாரை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.
    Next Story
    ×