என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஹரித்துவாரில் நிறுவப்படும் திருவள்ளுவர் சிலை முக்கிய நகரங்களுக்கு கொண்டு செல்லப்படும்: தருண்விஜய் எம்.பி.
    X

    ஹரித்துவாரில் நிறுவப்படும் திருவள்ளுவர் சிலை முக்கிய நகரங்களுக்கு கொண்டு செல்லப்படும்: தருண்விஜய் எம்.பி.

    ஹரித்துவாரில் நிறுவப்பட இருக்கும் திருவள்ளுவர் சிலை தமிழகத்தில் முக்கிய நகரங்களுக்கு கொண்டு செல்லப்படும் என்று தருண் விஜய் எம்.பி. கூறினார்.
    ஆலந்தூர்:

    பா.ஜனதா கட்சியின் உத்தரகாண்ட் மாநில எம்.பி. தருண் விஜய், நேற்று டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் கங்கை ஆற்றின் கரையில் வருகிற 26-ந் தேதி 4½ டன் எடை கொண்ட 12 அடி உயர திருவள்ளுவர் சிலை நிறுவப்படுகிறது. இந்த சிலையை உத்தரகாண்ட் மாநில முதல்-மந்திரி திறந்து வைக்கிறார். இதில் உத்தரகாண்ட் மாநில கவர்னர் மற்றும் பிற மாநில கவர்னர்கள் கலந்துகொள்கின்றனர்.

    இதற்காக திருவள்ளுவர் சிலை பயணம் தமிழகத்தில் 22-ந் தேதி வரை நடைபெறும். இந்த பயணம் கன்னியாகுமரியில் தொடங்கப்படும். அங்கிருந்து மதுரை, ஈரோடு, கரூர், கோவை, காஞ்சீபுரம் போன்ற முக்கிய நகரங்களுக்கு சென்றுவிட்டு 22-ந் தேதி சென்னைக்கு வந்தடையும்.

    திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவுக்கு வருமாறு தமிழக கவர்னர், முதல்-அமைச்சர் மற்றும் தமிழக தலைவர்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்படும். உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் கங்கை ஆற்றின் கரையில் திருவள்ளுவர் சிலையை திறப்பதன் மூலம் வடமாநிலங்களில் திருக்குறள் பரவும்.

    இதன் மூலம் உலகம் முழுவதிலும் இருந்து ஹரித்துவார் வரும் மக்கள், திருவள்ளுவரின் புகழ் பற்றி அறிந்து கொள்வார்கள். இதன் மூலம் திருவள்ளுவருக்கு பெருமை சேர்க்கப்படும். பிரதமர் மோடியின் நல்லாசியுடன் திருவள்ளுவர் சிலை திறக்கப்படும்.

    இந்த விழாவில் தமிழக தலைவர்கள், தமிழ் அமைப்பினர் கலந்து கொள்வார்கள். இந்தியா முழுவதும் திருவள்ளுவரின் புகழை கொண்டு சேர்க்கும் பணி செய்வேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது அவரிடம், “மத்திய அரசு சமஸ்கிருதத்தை திணிப்பதாக தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறி உள்ளாரே?” என நிருபர்கள் கேட்டதற்கு “நான் திருவள்ளுவர் சிலை தொடர்பான பணிகள் செய்ய வந்து உள்ளேன். அரசியல் பேச விரும்பவில்லை” என்றார்.

    Next Story
    ×