என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீர்காழியில் பெட்ரோல் ஊற்றி வியாபாரியை கொல்ல முயற்சி
    X

    சீர்காழியில் பெட்ரோல் ஊற்றி வியாபாரியை கொல்ல முயற்சி

    பெட்ரோல் ஊற்றி பிளாஸ்டிக் வியாபாரியை கொல்ல முயன்ற சம்பவம் சீர்காழியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    சீர்காழி:

    நாகை மாவட்டம் சீர்காழி பழைய பஸ் நிலையம் அருகில் ரெங்கராஜ் என்பவருக்கு சொந்தமான வணிக வளாகம் உள்ளது. இதில் 10–க்கும் மேற்பட்ட கடைகள் இருக்கிறது.

    இங்கு சீர்காழி ரெட்டை காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த திருஞான அமுதன் பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பைகள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.

    நேற்று இரவு இவர் கடையை உள்பக்கம் தாழ் போட்டு படுத்து தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவு 1.30 மணியளவில் அங்கு வந்த மர்ம ஆசாமிகள் கடைக்குள் பெட்ரோல் ஊற்றினார்கள். பின்னர் தீ வைத்தனர். தீ மளமளவென்று எரிய தொடங்கியது. இதனால் விழித்து கொண்ட திருஞான அமுதன் கடையை திறந்து வெளியே வந்தார். அப்போது கடைக்கு முன் ஒரு லோடு ஜல்லி கற்கள் கொட்டப்பட்டு கிடந்தது.

    அவர் கடையை திறந்து வெளியே வர முடியாத அளவிற்கு ஜல்லிகளை கொட்டியதாக கூறப்படுகிறது. கடைக்கு தீ வைக்கப்பட்டது குறித்து சீர்காழி போலீசுக்கும் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் கொடுத்தார்.

    நிலைய தீயணைப்பு அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆனாலும் கடையில் இருந்த கம்ப்யூட்டர், பிளாஸ்டிக் சேர், மேஜை உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தது. இதன் மதிப்பு ரூ. 30 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது. கை தீப்பிடிக்க தொடங்கியதும் திருஞான அமுதன் எழுந்து வெளியே ஓடி வந்ததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

    மேலும் தீயணைப்பு வீரர்களும் சரியான நேரத்தில் வந்து தீயை அணைத்ததால் அருகில் இருந்த எலக்ட்ரிக்கல், ஒர்க்ஷாப், ஆயில் கடைகள் உள்ளிட்டவைகள் தப்பியது.

    முன் விரோதம் காரணமாக கடைக்கு தீ வைக்கப்பட்டதா? அல்லது தொழில் போட்டி காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கடைக்காரரரை தீ வைத்து கொல்ல முயன்ற சம்பவம் சீர்காழியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×