என் மலர்
செய்திகள்

அறந்தாங்கி அருகே ஓட்டல் ஊழியர் கொலையில் மகன்கள் கைது
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே உள்ள களபம் பகுதியை சேர்ந்தவர் சங்கிலி (வயது 49). இவரது மனைவி வெள்ளையம்மாள் (45). இருவரும் காதல் திருமணம் செய்தவர்கள். இவர்களுக்கு தினேஷ்குமார் (21), தினகரன் (20) என்ற 2 மகன்களும், பாண்டீஸ்வரி (18) என்ற மகளும் உள்ளனர்.
சங்கிலி விருதுநகரில் உள்ள ஓட்டலில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஊருக்கு வந்த அவர், அதன்பிறகு வேலைக்கு செல்லவில்லை. மேலும் குடிபழக்கத்திற்கு அடிமையான அவர் தினமும் மது குடித்து விட்டு வந்து, வீட்டில் தகராறு செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த வெள்ளையம்மாள், உருட்டு கட்டையால், சங்கிலியை தாக்கி கொலை செய்தார்.
இது குறித்து புதுக்கோட்டை மாவட்டம் கரூர் போலீசார் விசாரணை நடத்தி வெள்ளையம்மாளை கைது செய்தனர். இந்நிலையில் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக வெள்ளையம்மாளின் மகன்கள் தினேஷ்குமார், தினகரன் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.






