என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரூர் அருகே மாட்டுக்கொட்டகை, வைக்கோல் போர்களுக்கு தீவைப்பு: போலீசார் விசாரணை
    X

    அரூர் அருகே மாட்டுக்கொட்டகை, வைக்கோல் போர்களுக்கு தீவைப்பு: போலீசார் விசாரணை

    அரூர் அருகே மாட்டுக்கொட்டகை மற்றும் 3 பேரின் வைக்கோல் போர்களுக்கு மர்ம நபர்கள் தீவைத்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அரூர்:

    தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள கூத்தாடிப்பட்டியை சேர்ந்தவர் சிவலிங்கம். விவசாயி. இவருக்கு சொந்தமான மாட்டுக்கொட்டகை நேற்று முன்தினம் இரவு திடீரென தீப்பற்றி எரிந்தது. இதையறிந்து அதிர்ச்சி அடைந்த சிவலிங்கம் மற்றும் அவருடைய குடும்பத்தினர் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அவர்களால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை.

    இதுகுறித்து அரூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில் மாட்டுக்கொட்டகையில் வைக்கப்பட்டு இருந்த 10 மூட்டை மஞ்சள், ஒரு மோட்டார் சைக்கிள், ஒரு சைக்கிள் மற்றும் அதில் இருந்த பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தது. இதன் மதிப்பு ரூ.2 லட்சம் இருக்கும் என தீயணைப்புத்துறையினர் தெரிவித்தனர்.

    இதுதொடர்பாக சிவலிங்கம் அரூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.3 வைக்கோல் போர்கள் இதேபோன்று அதேபகுதியை சேர்ந்த குமார், ராமராஜன், கதிர்வேல் ஆகிய 3 பேரின் தோட்டத்தில் உள்ள வைக்கோல் போர்களுக்கு நேற்று முன்தினம் மர்ம நபர்கள் தீ வைத்து விட்டு சென்று விட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று 3 பேரின் வைக்கோல்போர்களில் பிடித்த தீயை அணைத்தனர். இதுதொடர்பாக அரூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வைக்கோல்களுக்கு தீவைத்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தீ விபத்தில் எரிந்து சேதமடைந்த 3 வைக்கோல் போர்களின் மதிப்பு ரூ.50 ஆயிரம் ஆகும். கூத்தாடிப்பட்டி கிராமத்தில் ஒரே நாளில் மாட்டுக்கொட்டகை மற்றும் 3 வைக்கோல் போர்களுக்கு மர்ம நபர்கள் தீவைத்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×