என் மலர்
செய்திகள்

ராசிபுரம் அருகே கூலி தொழிலாளி அடித்துக்கொலை
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள வெண்ணந்தூர் பேரூராட்சி சர்கார் தோப்பு பகுதியில் வசித்து வருபவர் கோவிந்த கவுண்டர் மகன் மெய்யழகன்(வயது 60). இவருக்கு மல்லிகா என்ற மனைவியும், முருகன் என்ற மகனும் உள்ளனர்.
மகன் முருகனுக்கு திருமணம் ஆகி விட்டது. திருமணம் ஆன பிறகும் மகன் குடும்பத்தினரும், மெய்யழகன் குடும்பத்தினரும் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்கள்.
மெய்யழகன் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் ரிக் வண்டி தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு சமையல் செய்து, கொடுக்கும் கூலி தொழில் செய்து வந்தார். மேலும், அவ்வப்போது தறி கூடங்களுக்கு சென்று தறி தொழிலிலும் ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில் நேற்றிரவு வீட்டில் இருந்த மனைவி மல்லிகாவிடம் மது அருந்த பணம் கேட்டதாக கூறப்படுகிறது. அவர் பணம் கொடுக்க மறுத்து விட்டார்.
இந்த நிலையில் இன்று காலை சுமார் 8.30 மணியளவில் வெண்ணந்தூர்– ஆட்டையாம் பட்டி சாலையில் உள்ள வெண்ணந்தூர் ஏரியில் அடித்துக்கொலை செய்யப்பட்ட நிலையில் மெய்யழகன் கிடப்பதாக அவரது மகன் முருகனுக்கு அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்தனர்.
உடனே மகன் முருகன் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தார். மேலும் வெண்ணந்தூர் போலீசாருக்கும் இந்த சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து ராசிபுரம் டி.எஸ்.பி.ராஜூவ், வெண்ணந்தூர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சசிகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
போலீசார் விசாரணையில், மெய்யழகன் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. அவர் பிணமாக கிடந்த இடத்தில் ரத்தம் படிந்த நிலையில் கற்கள் கிடந்தன.
மேலும், மெய்யழகன் நெஞ்சு, முகம், கை போன்ற பகுதிகளில் கற்களால் தாக்கப்பட்டதற்கான அடையாளங்கள் காணப்பட்டன. உடல் கிடந்த இடத்தில் மதுபாட்டில், தீப்பெட்டி, மணி பர்சு ஆகியவை கிடந்தது. இவற்றை போலீசார் கைப்பற்றினார்கள்.
கொலை செய்யப்பட்ட மெய்யழகன் அ.தி.மு.க. கரை வேட்டி அணிந்திருந்தார். எனவே, அவர் அ.தி.மு.க.பிரமுகராக இருந்திருக்கலாம் என தெரிகிறது.
பின்னர் சம்பவ இடத்திற்கு துப்பறியும் மோப்பநாய் பொய்கை வரவழைக்கப்பட்டது. மோப்பநாய், வெண்ணந்தூர் ஏரி பகுதியில் இருந்து ஆட்டையம்பட்டி பகுதியில் உள்ள நாச்சிப்பட்டி பகுதி வரை ஓடியது. பின்னர் அங்கிருந்து வெண்ணந்தூரில் உள்ள மின்னக்கல் பிரிவு சாலை வரை ஓடியது. அந்த இடத்தை சுற்றியவாறு மோப்பநாய் மோப்பம் பிடித்தப்படி அங்கும் இங்குமாக சுற்றி ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.