என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிருஷ்ணகிரி அருகே கிணற்றில் மூழ்கி 4 பேர் பலி
    X

    கிருஷ்ணகிரி அருகே கிணற்றில் மூழ்கி 4 பேர் பலி

    கிருஷ்ணகிரி அருகே 40 அடி ஆழம் கொண்ட கிணற்றில் மூழ்கி 4 பேர் இறந்துள்ளனர்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தாலுகா கந்திக்குப்பம் போலீஸ் சரகத்துக்கு உட்பட்டது சூலமலை ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட பகுதி தான் பாரபள்ளம் கிராமம். இந்த கிராமத்தில் முருகேசன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தில் 40 அடி ஆழம் கொண்ட கிணறு அமைக்கப்பட்டுள்ளது. 15 அடி ஆழத்தில் தற்போது அந்த கிணற்றில் தண்ணீர் உள்ளது.

    இந்த நிலையில் இன்று விடுமுறை என்பதால் முருகேசன் என்பவருடைய மகன் நந்தகுமார் (வயது 11), ஜமுனா(வயது 10), கனகவேல் மற்றும் அவருடைய உறவினர்களுடைய மகன் தமிழரசன் (வயது 18), ஜோதிகா(வயது 14) ஆகிய 5 பேரும் இன்று காலை சுமார் 11.45 மணியளவில் அந்த விவசாய கிணற்றில் குளிக்க சென்றனர்.

    இவர்களுக்கு சரிவர நீச்சல் தெரியாது என கூறப்படுகிறது. நீச்சல் தெரியாததால் அவர்கள் ஒருவருக்கொருவர் நீரில் மூழ்க தொடங்கினர். இதில் தமிழரசன், ஜமுனா, ஜோதிகா ஆகிய 3 பேரும் வரிசையாக நீரில் மூழ்கினார்கள். நந்தகுமார் மட்டும் நீரில் தத்தளித்தவாறு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

    இதனை பார்த்த சிறுவன் கனகவேல் (வயது 9). ஊருக்குள் சென்று இந்த சம்பவத்தை அக்கம் பக்கத்தில் வசிக்கும் பொதுமக்களிடம் தெரிவித்தான். உடனே பொதுமக்கள் அங்கு ஓடி வந்தனர். அவர்கள் கிணற்றில் மூழ்கிய 4 பேரையும் காப்பாற்ற முயற்சி செய்தனர்.

    ஆனால் அதற்குள் அவர்கள் 3 பேர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்து விட்டனர். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சிறுவன் நந்தகுமாரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சிறுவன் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தான்.

    இதையடுத்து கிணற்றில் இருந்து குழந்தைகளின் உடல்களை மீட்டு கரைக்கு கொண்டு வரப்பட்டது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் கிராம மக்கள் கிணற்றின் கரையில் கூடினார்கள். பலியான தங்களது குழந்தைகளின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். இது அங்கிருந்த அனைவரையும் கண்கலங்க செய்தது.

    இன்று 4 குழந்தைகள் பலியான சம்பவம் அந்த கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

    Next Story
    ×