என் மலர்
செய்திகள்

வாக்களிக்க 11 ஆவணத்தில் ஒன்று கட்டாயம் தேவை: திருவண்ணாமலை கலெக்டர் தகவல்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை கலெக்டர் பூஜா குல்கர்னி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:– தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடக்கிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் தேர்தல் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. வாக்களிக்கும் நேரம் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை ஆகும். இந்த தேர்தலில் 100 சதவீதம் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
இதனால் அனைத்து வாக்காளர்களும் வாக்காளர் அடையாள அட்டையை கண்டிப்பாக எடுத்துவர வேண்டும். வாக்காளர் அடையாள அட்டை இல்லாத வாக்காளர்கள் பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ், மத்திய மற்றும் மாநில அரசு பணியாளருக்கான புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, வங்கி அல்லது தபால் அலுவலகங்களில் அளிக்கப்படும் புகைப்படத்துடன் கூடிய பாஸ் புத்தகத்தை காட்டி வாக்களிக்கலாம்.
அதுவும் இல்லையெனில், பான்கார்டு, ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் வழங்கும் பணிக்கான அடையாள அட்டை, மத்திய தொழிலாளர் நலத்துறையால் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு அட்டை, புகைப்படத்துடன் கூடிய பென்சன் புத்தகம், தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட பூத் சிலிப், நாடாளுமன்ற அல்லது சட்டமன்ற உறுப்பினருக்கு வழங்கப்பட்ட அலுவலக அடையாள அட்டை போன்றவற்றை கொண்டு வாக்களிக்கலாம்.
குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டை ஆகியவை அடையாள அட்டை ஆவணமாக ஏற்க முடியாது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






