என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஞ்சீபுரத்தில் நள்ளிரவில் லாரியில் இருந்து குதித்து ரோட்டில் ஓடிய யானை
    X

    காஞ்சீபுரத்தில் நள்ளிரவில் லாரியில் இருந்து குதித்து ரோட்டில் ஓடிய யானை

    காஞ்சீபுரத்தில் சிகிச்சை அளிக்க அழைத்து செல்லப்பட்ட யானை லாரியில் ஏறாமல் முரண்டு பிடித்ததால் வேறு வழியின்றி அதனை மீண்டும் காமாட்சியம்மன் கோவிலுக்கே கொண்டு சென்றனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் சங்கர மடத்திற்கு சொந்தமான சந்தியா என்கிற காமாட்சி, இந்து என்கிற அப்பு, ஜெயந்தி ஆகிய 3 யானைகள் காஞ்சீபுரம் காமாட்சியம்மன் கோவிலில் வைத்து பராமரிக்கப்பட்டு வந்தன.

    கோவிலில் தினமும் நடைபெறும் கஜபூஜை மற்றும் இக்கோவிலின் திருவிழாக்களில் இந்த யானைகள் பங்கேற்கும். மேலும் சங்கர மடத்தில் தினந்தோறும் நடைபெறும் சந்திரமெளலீஸ்வரர் பூஜையின் போது இந்த யானைகள் சாமரம் வீசும்.

    இந்நிலையில் 2 யானைகளுக்கு உடலில் புண் வந்ததால் அவற்றிற்கு சிகிச்சை அளிக்க ட்ரீ பவுண்டேசன் என்ற தனியார் நிறுவனத்தின் பொறுப்பில் யானைகளை ஒப்படைக்க சங்கரமடம் முடிவு செய்தது. இதையடுத்து நேற்று நள்ளிரவு 3 யானைகளையும் தனித்தனியாக 3 லாரிகளில் கொண்டு சென்றனர்.

    அப்போது சந்தியா என்கிற காமாட்சி யானை லாரியில் ஏற முரண்டு பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நீண்ட நேர போராட்டத்திற்கு பின் லாரியில் அந்த யானை ஏற்றப்பட்டது.

    இன்று அதிகாலை காஞ்சீபுரம் காமராஜர் சாலை வழியாக யானைகள் ஏற்றப்பட்ட லாரி சென்று கொண்டு இருந்தது. காஞ்சீபுரம் தாலுகா அலுவலகம் எதிரே சென்றபோது திடீரென யானை லாரியில் இருந்து கீழே குதித்து கோவில் இருக்கும் திசையை நோக்கி ஓட ஆரம்பித்தது. உடனடியாக பாகன்கள் யானையை கட்டுக்குள் கொண்டு வந்து மீண்டும் லாரியில் ஏற்ற முயற்சித்தனர்.

    ஆனால் லாரியில் ஏறாமல் யானை முரண்டு பிடித்ததால் வேறு வழியின்றி அதனை மீண்டும் காமாட்சியம்மன் கோவிலுக்கே கொண்டு சென்றனர். காஞ்சீபுரம் நகரின் பரபரப்பான காமராஜர் சாலை பகுதியில் பஸ் நிலையம் மற்றும் அதிக அளவிலான பேருந்த நிறுத்தங்கள் உள்ளன. ஏராளமானோர் நடைபயிற்சி மேற்கொண்டு வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    யானை கீழே குதித்து ஓடியபோது அப்பகுதியில் மக்கள் நடமாட்டம் இல்லாததால் அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை.
    Next Story
    ×