என் மலர்tooltip icon

    செய்திகள்

    பறக்கும் படையினர் வாகன சோதனை: புதுச்சேரியில் இருந்து சென்னை வந்த மினிவேனில் ரூ.4 கோடி சிக்கியது
    X

    பறக்கும் படையினர் வாகன சோதனை: புதுச்சேரியில் இருந்து சென்னை வந்த மினிவேனில் ரூ.4 கோடி சிக்கியது

    புதுச்சேரியில் இருந்து சென்னை வந்த மினிவேனில் இருந்த ரூ.4 கோடியே 3 லட்சத்தை பறக்கும் படையினர் கைப்பற்றினர். அதற்கான உரிய ஆவணங்களை காட்டியதால் அந்த பணத்தை வங்கி மேலாளரிடம் ஒப்படைத்தனர்.
    திருப்போரூர்:

    காஞ்சீபுரம் மாவட்டம் திருப்போரூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் அதிகாரி கோவிந்தராசு தலைமையில் 3 பறக்கும் படையினர், திருப்போரூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    திருப்போரூர் ஒன்றியம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வெங்கம்பாக்கம் பகுதியில் தாசில்தார் விமல்குமார் தலைமையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோதண்டன் உள்பட 5 பேர் கொண்ட பறக்கும் படையினர் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி வந்த ஒரு மினி வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த வேனில் 5 இரும்பு பெட்டிகள் இருந்தன.

    இதுபற்றி மினிவேன் டிரைவரிடம் கேட்டபோது, “இது ஆக்ஸிஸ் வங்கியின் பணம். சென்னையில் உள்ள அந்த வங்கியின் கிளைக்கு கொண்டு செல்வதாக” கூறினார்.

    அதற்கான ஆவணங்களை காட்டும்படி தாசில்தார் விமல்குமார் கேட்டார். ஆனால் அவரிடம் அந்த பணத்துக்கு உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை.

    இதையடுத்து பறக்கும் படையினர் அந்த பணம் மற்றும் மினிவேனில் வந்த வங்கி அலுவலர், டிரைவர் ஆகியோரை திருப்போரூர் தேர்தல் அதிகாரி கோவிந்தராசுவிடம் ஒப்படைத்தனர். அவர், வங்கி அலுவலரிடம் விசாரித்த போது அந்த இரும்பு பெட்டியில் ரூ.31½ லட்சம் இருக்கிறது. இதற்கான ஆவணங்களை மறுநாள் காலை காண்பிக்கிறோம் என்றனர்.

    ஆனால் உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த பணத்தை பறிமுதல் செய்யும்படி தேர்தல் அதிகாரி கோவிந்தராசு உத்தரவிட்டார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கோதண்டன் அந்த பணத்தை பறிமுதல் செய்து தாசில்தார் அலுவலகத்துக்கு கொண்டு சென்றார்.

    அங்கு 5 இரும்பு பெட்டிகளில் இருந்த பணத்தை திருப்போரூர் தேர்தல் அதிகாரி கோவிந்தராசு முன்னிலையில் தாசில்தார் விமல்குமார், திருப்போரூர் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் கோதண்டன் மற்றும் போலீசார் எண்ணி பார்த்தனர்.

    ஆனால் இரும்பு பெட்டிகளில் கோடிக்கணக்கில் பணம் இருப்பது தெரியவந்தது. இதுபற்றி புதுச்சேரியில் உள்ள ஆக்ஸிஸ் வங்கி மேலாளர் நாராயணகவுசிங் என்பவரை அழைத்து விசாரித்த போது அவர், ரூ.4 கோடியே 3 லட்சம் பணம் இருப்பதாக கூறினார்.

    இதையடுத்து அந்த பணத்துக்கு உரிய ஆவணங்களை திருப்போரூர் தேர்தல் அதிகாரி கோவிந்தராசுவிடம் ஒப்படைத்தார். அதைத்தொடர்ந்து திருப்போரூர் தாசில்தார் அலுவலகத்தில் இருந்த பணத்தை நள்ளிரவு 1 மணியளவில் வங்கி மேலாளரிடம் ஒப்படைத்தனர். பின்னர் அங்கிருந்து சென்னையில் உள்ள அந்த வங்கியின் கிளைக்கு கொண்டு செல்லப்பட்டது.

    Next Story
    ×