என் மலர்
செய்திகள்

சேலம் அருகே விவசாய கிணற்றில் மூதாட்டி பிணம்: கொலை செய்யப்பட்டாரா? போலீஸ் விசாரணை
சேலம்:
சேலம் மணக்காடு தனியார் கல்லூரி அருகில் அம்மன் நகர் அமைந்துள்ளது. இந்த நகரில் பஸ் உரிமையாளர் ஒருவருக்கு சொந்தமான விவசாய தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் உள்ள சுமார் 40 அடி ஆழம் கொண்ட விவசாய கிணற்றில் இன்று காலை மூதாட்டி ஒருவர் பிணமாக மிதந்தார். இந்த தகவல் அந்த பகுதியில் காட்டு தீ போல் பரவியது.
கிணற்றில் மூதாட்டி பிணமாக மிதக்கும் தகவலை கேள்விப்பட்டதும் ஊர் மக்கள் அந்த கிணற்றின் கரையில் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
உடனே இது பற்றி கன்னங்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரபாண்டியன், சப்–இன்ஸ்பெக்டர் உலகநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விவசாய கிணற்றை பார்வையிட்டனர்.
விவசாய கிணறு சுமார் 40 அடி ஆழம் கொண்டதால், கரையில் கூடி நின்ற பொதுமக்கள் உதவியுடன், போலீசார் கிணற்றுக்குள் இறங்கி கயிற்றை கட்டி பெண் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
இந்த மூதாட்டிக்கு சுமார் 65 வயது இருக்கும் என்று தெரிகிறது. ராமர் கலர் சேலை மற்றும் வெள்ளை கலர் ஜாக்கெட் அணிந்திருந்தார்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பே அந்த மூதாட்டி இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது அந்த மூதாட்டி யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அவரது உறவினர்கள் யாராவது இந்த பகுதியில் உள்ளார்களா? என்பது குறித்து உடனடியாக கண்டுபிடிக்க முடியவில்லை.
கொலை செய்து, இங்கு கொண்டு வந்து கிணற்றில் வீசினார்களா? அல்லது குடும்பத்தில் ஏதேனும் ஏற்பட்ட தகராறில் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? என்பது போன்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும், பஸ் உரிமையாளரிடமும் இந்த சம்பவம் பற்றி விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மூதாட்டி ஒருவர் கிணற்றில் பிணமாக மிதந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.






