என் மலர்tooltip icon

    ஐ.பி.எல்.(IPL)

    திருப்போரூர் தொகுதி
    X
    திருப்போரூர் தொகுதி

    பா.ம.க.- விடுதலை சிறுத்தைகள் நேருக்குநேர் பலப்பரீட்சை நடத்தும் திருப்போரூர் தொகுதி கண்ணோட்டம்

    தமிழக அரசியலில் எதிரெதிர் துருவமாக இருக்கும் பாமக- விடுதலை சிறுத்தைகள் கட்சி நேருக்குநேர் பலப்பரீட்சை நடத்துகின்றன.
    செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் திருப்போரூர் சட்டமன்ற தொகுதியும் ஒன்று. இந்த தொகுதியில் சிறந்த சுற்றுலா தலமான மாமல்லபுரம், புகழ்பெற்ற அருள்மிகு கந்தசுவாமி திருக்கோவில் மற்றும் வேதகிரீஸ்வரர் திருக்கோவில், திருவிடந்தை ஆதிவராக பெருமாள், மாமல்லபுரம் தலசயண பெருமாள் உள்ளிட்ட புகழ்பெற்ற ஆலயங்கள் உள்ளன.

    வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் ஓ.எம்.ஆர்., இ.சி.ஆர். பகுதிகளும் இந்த தொகுதியில்தான் உள்ளன. 

    திருப்போரூர் தொகுதியில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 93 ஆயிரத்து 251. இதில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 43 ஆயிரத்து 556 பேர். பெண் வாக் காளர்கள் 1 லட்சத்து 49 ஆயிரத்து 658 பேர், மூன்றாம் பாலினத்தவர் 37 பேர். தொகுதியில் பெண் வாக்காளர்கள் அதிகம்.

    தொகுதியில் திருப்போரூர் ஊராட்சி ஒன்றியத்தில் அடங்கிய 50 கிராம ஊராட்சிகளும், திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தில் அடங்கிய 34 கிராம ஊராட்சிகளும், திருப்போரூர், திருக்கழுக்குன்றம், மாமல்லபுரம் பேரூராட்சிகளும் உள்ளன.

    இங்கு ஆதிதிராவிடர்கள், வன்னியர்கள் சம அளவிலும் முதலியார்கள், மீனவர்கள், யாதவர்கள், நாயுடு, ரெட்டியார், இஸ்லாமியர், என பல தரப்பட்ட மக்களும் உள்ளனர். விவசாயம் முக்கியத் தொழிலாக உள்ளது. கிழக்கு கடற்கரை சாலையில் 15 மீனவ குப்பங்களில் மீன்பிடித்தொழில் முக்கிய தொழிலாக உள்ளது.

    திருப்போரூர் 1967-ல் தனி தொகுதியாக உருவாக்கப்பட்டது. பிரிக்கப்பட்டதும் முதன் முறையாக 1967-ல் தேர்தல் நடைபெற்றது. இதில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட முனுஆதி வெற்றிபெற்றார். இதுவரை இங்கு நடைபெற்ற 13 தேர்தல்களில் 7 முறை தி.மு.க.வும், 5 முறை அ.தி.மு.க.வும், 1 முறை பா.ம.க.வும் வெற்றி பெற்றுள்ளன.

    இதில் கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த கோதண்டபாணி வெற்றிபெற்றார். பின்னர் சபாநாயகரால் தகுதிநீக்கம் செய்யப்பட்டதை அடுத்து கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் தி.மு.க.வைச்சேர்ந்த செந்தில் (எ) இதயவர்மன் வெற்றி பெற்றார்.

    கோரிக்கைகள்

    சர்வதேச சுற்றுலாதலமாக மாமல்லபுரத்தை மேம்படுத்த வேண்டும் என அப்பகுதிமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர். பல்லவர் கால சிற்பங்கள் கடற்கரை கோயில், பல்லவர் கால வரலாற்றுச் சிறப்புகள் ஆகியவற்றை காண உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் இங்கு வருகின்றனர். இங்கு பெரிய அளவில் பஸ் நிலையம் மற்றும் அதற்கான அடிப்படை வசதிகள் ஏதும் இல்லை.

    சர்வதேச சுற்றுலா தலமாக மாற்றி அதற்கான பல்வேறு சிறப்பு அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும். மேலும் இங்கு சிற்பத்தொழில் முக்கியதொழிலாக உள்ளது. சிற்ப பூங்கா அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இதுவரை அத்திட்டம் நிறைவேற்றப்படவில்லை.

    கிழக்கு கடற்கரைசாலையில் உள்ள மீனவ குப்பங்கள் கடல்சீற்றம், புயல், மழை, கடல் அரிப்பால் பாதிக்கப்படு கின்றன. இப்பகுதி யில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டி மீனவ பகுதிமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர். மேலும் மீன்பதப்படுத்தும் கூடங்கள் அமைக்கவும் கோரிக்கை விடுக்கின்றனர்.

    தொகுதியில் விவசாயம் முக்கியத் தொழிலாக உள்ளதால் விவசாயத்தை மேம்படுத்தவும், விவசாயிகளுக்கு உதவ அரசு பல்வேறு திட்டங்களையும் கொண்டு வர வேண்டும். காய்கறிகளை பதப்படுத்த கிடங்கு மற்றும் நெல் கொள்முதல் நிலை யம் அமைக்க வேண்டும். ஏரி, குளங்களை தூர்வாரி தண்ணீர் வீணாகாமல் தடுத்து நடவடிக்கை மேற்கொண்டு விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் கிடைக்க வழி செய்ய வேண்டும் என்பதும் முக்கிய கோரிக்கையாக இருக்கின்றன.

    திருப்போரூர் பகுதியில் நீதிமன்றம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு செயல்படுத்தப்படாமல் கிடப்பில் உள்ளது. மேலும் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்றும் மக்கள் எதிர் பார்ப்பில் உள்ளனர்.

    அதிமுக கூட்டணியில் திருப்போரூர் தொகுதி பா.ம.க-வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அக்கட்சி சார்பில் திருக்கச்சூர் கி.ஆறுமுகம் போட்டியிடுகிறார். திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

    2019 இடைத்தேர்தல்

    இதயவர்மன் (தி.மு.க.)- 1,03,248 
    ஆறுமுகம் (அ.தி.மு.க.)- 82,235 
    கோதண்டபாணி (அ.ம.மு.க.)-11,936 
    மோகனசுந்தரி (நாம் தமிழர்)- 9,910 
    மக்கள் நீதி மய்யம்- 6,039 
    நோட்டா- 2243

    இதுவரை வெற்றி பெற்றவர்கள் விவரம்:

    1967- முனுஆதி (தி.மு.க.)
    1971- முனுஆதி (தி.மு.க.) 
    1977- சொக்கலிங்கம் (தி.மு.க.)
    1980- சொக்கலிங்கம் (தி.மு.க.)
    1984- தமிழ்மணி (அ.தி.மு.க.)
    1989- டாக்டர். திருமூர்த்தி (தி.மு.க.)
    1991- தனபால் (அ.தி.மு.க.)
    1996- சொக்கலிங்கம் (தி.மு.க.)
    2001- கணிதாசம்பத் (அ.தி.மு.க.)
    2006- மூர்த்தி (பா.ம.க)
    2011- தண்டரை மனோகரன் (அ.தி.மு.க.)
    2016- கோதண்டபாணி (அ.தி.மு.க.)
    2019- செந்தில் (எ) இதயவர்மன் (தி.மு.க.) (இடைத்தேர்தல்)
    Next Story
    ×