search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாசுதேவநல்லூர் தொகுதி
    X
    வாசுதேவநல்லூர் தொகுதி

    வாசுதேவநல்லூர் தொகுதி கண்ணோட்டம்

    இயற்கை எழில் கொஞ்சும் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ளது வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதி குறித்து ஓர் பார்வை.
    கேரள எல்லையில் அமைந்துள்ள இந்த தொகுதி சிவகிரி தாலுகா, சங்கரன்கோவில் தாலுகாவில் ஒரு பகுதி மற்றும் 22 ஊராட்சிகளை உள்ளடக்கியது.

    கேரள எல்லையையொட்டிய மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உற்பத்தியாகும் தலையணை அருவி மற்றும் கோட்டைமலையாறு உள்ளிட்டவை இப்பகுதியில் உள்ளன. இந்த தொகுதியில் உள்ள பெரும்பாலான மக்களின் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது.

    வாசுதேவநல்லூர் தொகுதி

    தமிழகத்தின் மிகப்பெரிய எலுமிச்சை சந்தையான புளியங்குடி எலுமிச்சை சந்தை இந்த தொகுதியில்தான் இருக்கிறது. தினமும் 100 டன் முதல் 500 டன் வரையில் இங்குள்ள சந்தைக்கு எலுமிச்சை வருகிறது.

    இந்த சந்தையில் தரம் பிரிக்கப்பட்டு கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு தரத்திற்கேற்ப எலுமிச்சை அனுப்பி வைக்கப்படுகின்றன. நெல்லை, தென்காசி மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான வியாபாரிகள் மொத்தமாக வந்து வாங்கி செல்வார்கள்.

    வாசுதேவநல்லூர் தொகுதி

    இந்த தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 40 ஆயிரத்து 367 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 227 பேர். பெண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 101 பேர். இது தவிர 3-ம் பாலினத்தவர்கள் 39 பேர் உள்ளனர்.

    இந்த தொகுதி தாழ்த்தப்பட்டவர்களுக்கு என ஒதுக்கப்பட்ட தொகுதி ஆகும். இங்கு தாழ்த்தப்பட்ட மக்கள் அதிகம் பேர் வசிக்கின்றனர். அடுத்தப்படியாக தேவர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் உள்ளனர். நாடார், யாதவர், செங்குந்த முதலியார் சமுதாயத்தினரும் பரவலாக உள்ளனர்.

    வாசுதேவநல்லூர் தொகுதி

    1967 முதல் 2016-ம் ஆண்டு வரை மொத்தம் 12 சட்டப்பேரவை தேர்தல்கள் நடந்துள்ளது. இதில் காங்கிரஸ் 3 முறையும், தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், த.மா.கா., அ.தி.மு.க. தலா 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன. இதுதவிர ம.தி.மு.க. ஒருமுறை வெற்றி பெற்றுள்ளது.

    கோரிக்கைகள்

    புளியங்குடி எலுமிச்சை சந்தை பகுதியில் எலுமிச்சை பதப்படுத்தும் குளிர்பதன கிட்டங்கி, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் கட்டமைப்பு வசதிகள், வறட்சி காலங்களில் பாதிக்கப்படும் எலுமிச்சை விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பது இப்பகுதி விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

    வாசுதேவநல்லூர் தொகுதி

    இந்த பகுதியில் நெற்பயிருக்கு அடுத்தப்படியாக அதிகபட்சமாக பயிரிடப்படுவது கரும்புதான். இந்த தொகுதியில் ஒரு கரும்பு ஆலை உள்ளது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே இந்த ஆலை, விவசாயிகளுக்கு உரிய பண பலன்கள் வழங்குவதில்லை என அப்பகுதியினர் புகார் கூறி வருகின்றனர்.

    இந்த தொகுதியில் விவசாயத்திற்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்குவது செண்பகவல்லி அணை. கேரள எல்லையில் இந்த செண்பகவல்லி அணை தற்போது சேதமடைந்து காணப்படுகிறது. இதனை சீரமைத்தால் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும். இந்த அணை கேரளா& தமிழகம் ஆகிய 2 மாநிலங்களுக்கும் பொதுவாக இருப்பதால் விரைவில் கேரளா அரசிடம் இதனை சீரமைப்பது குறித்து நடவடிக்கை எடுக்க எம்.எல்.ஏ. சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    வாசுதேவநல்லூர் தொகுதி

    வாசுதேவநல்லூர் தொகுதியில் உள்ள சிவகிரி தென்காசி மாவட்டத்தின் கடைசி ஊராகும். இங்குள்ள அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் மற்றும் மருத்துவ வசதிகள் குறைவாகவே உள்ளது. கர்ப்பிணி பெண்கள் ஸ்கேன் பரிசோதனை செய்வதற்கு சிவகிரி அருகே உள்ள தேவிப்பட்டினத்திற்கு தான் செல்ல வேண்டும். பெரிய அளவிலான சிகிச்சைகளுக்கு விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்திற்குதான் செல்ல வேண்டி உள்ளது. எனவே சிவகிரி மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    மேலும் தாமிரபரணி நீரை கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பாக இருந்தது. இங்குள்ள மக்கள் கிணற்று நீரையே குடிப்பதற்கு பயன்படுத்தியதால் உடல்நல கோளாறு ஏற்படுவதாக பொதுமக்கள் கூறி வந்தனர். தற்போது தொகுதி முழுவதும் தாமிரபரணி நீர் கிடைத்துள்ளது.

    இங்கு தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களோ, வேலைவாய்ப்புக்கான தொழிற்சாலைகளோ அதிகளவு இல்லை. இதனால் கல்வி கற்க தென்காசி அல்லது சங்கரன்கோவிலுக்கு தான் இப்பகுதி மாணவ&மாணவிகள் செல்ல வேண்டி உள்ளது. எனவே அரசு கல்லூரி அமைக்க வேண்டும் என்று பல தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    வாசுதேவநல்லூர் தொகுதி
    வாசுதேவநல்லூர் தொகுதி

    2016- அ. மனோகரன்- அ.தி.மு.க.
    2011- டாக்டர் எஸ். துரையப்பா- அ.தி.மு.க.
    2006- தி. சதன் திருமலை குமார்- ம.தி.மு.க.
    2001- ஆர். ஈசுவரன்- த.மா.கா
    1996- ஆர். ஈசுவரன்- த.மா.கா
    1991- ஆர். ஈசுவரன்- இ.தே.கா
    1989- ஆர். ஈசுவரன்- இ.தே.கா
    1984- ஆர். ஈசுவரன்- இ.தே.கா
    1980- ஆர். கிருஷ்ணன்- மார்க்.கம்யூ.
    1977- ஆர். கிருஷ்ணன்- மார்க்.கம்யூ.
    1971- வெள்ளதுரை- தி.மு.க.
    1967& வெள்ளதுரை- தி.மு.க.
    Next Story
    ×