search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நான் ஓய்வு பெற விரும்புகிறேன்: கருணாநிதி உருக்கமான பேச்சு
    X

    நான் ஓய்வு பெற விரும்புகிறேன்: கருணாநிதி உருக்கமான பேச்சு

    10 வயதில் இருந்து 92 வயது வரை உழைக்கிறேன் நான் ஓய்வு பெற விரும்புகிறேன் தஞ்சாவூர் கூட்டத்தில் கருணாநிதி பேசியுள்ளார்.

    தஞ்சாவூர்:

    தி.மு.க. தலைவர் கருணாநிதி திருவாரூர் தொகுதியில் தனக்கு ஆதரவு கேட்டு வேனில் பிரசாரம் செய்தார்.

    பின்னர் கருணாநிதி தஞ்சை திலகர் திடலில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:–

    தமிழ்நாடு இந்த 5 ஆண்டுகாலத்தில் எந்த அளவுக்கு சீரழிந்து போய் இருக்கிறது. தமிழகத்தை இன்று ஆள்கிறவர்கள் எந்த அளவுக்கு சீரழித்து இருக்கிறார்கள் என்பதை தயவு செய்து எண்ணிப்பார்க்க வேண்டும். கழக ஆட்சியில் விலைவாசி என்ன? இந்த ஆட்சியில் விலைவாசி எப்படி உள்ளது என்பதை தாய்மார்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.

    (அப்போது ஒவ்வொரு பொருட்களின் விலையையும் பட்டியலிட்டார்). ஏதோ, இந்த தேர்தலில் வெற்றி அடைந்தால் உயர்ந்த இடத்துக்கு போய் விடுவோம், உங்களை எல்லாம் மதிக்க மாட்டோம் என்று எண்ணுகிறவர்கள் அல்ல நாங்கள்.

    இந்த கூட்டத்தில் நாம் எடுத்துவைக்கிற எந்த கருத்துகளையும் அவர்கள் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதைப்போல ஒரு அறிக்கையை இனியாரும் வெளியிடப்போவது இல்லை. அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியிடாமல் மக்களை சந்திக்கிறார்கள். அவர்களுக்கு அறிக்கை தேவையில்லை. தி.மு.க. ஒவ்வொரு தேர்தலிலும் அறிக்கை வெளியிட்டு நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இதை செய்வோம் என்று கூறி அதை நிறைவேற்றி வருகிறோம்.

    இன்றைக்கு நாட்டில் பணம் தண்ணீரைப்போல இறைக்கப்படுகிறது. தண்ணீரைப்போல என்றால், தண்ணீர் கூட இன்று கிடைப்பது இல்லை. அதற்கு மேலாக வாரி இறைத்து இந்த தேர்தலை நடத்த அ.தி.மு.க.வினர் ஈடுபட்டு வருகிறார்கள்.

    பணத்தை தண்ணீர் போல செலவழித்து இந்த தேர்தலில் தாங்கள் வெற்றி பெற வேண்டும். மீண்டும் முதல்-அமைச்சராக இருக்க வேண்டும். தாங்கள் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நாட்டில் ஒரு கூட்டம் நடமாடுகிறது.

    இந்த நாட்டைப்பற்றி கவலைப்படாதவர்கள் கையில் ஆட்சி சிக்கி இருக்கிறது. சிக்கிய ஆட்சியை மீட்டு மக்களை காப்பாற்ற வேண்டும். என்னுடைய மக்களை காப்பாற்ற வேண்டும். திராவிட இயக்கத்தின் குறிக்கோளையே, திராவிட இயக்கம் ஏன் தோன்றியது என்ற நோக்கத்தை குழி தோண்டி புதைத்தவர்கள் இன்று ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு பாடம் கற்பிக்க இது தான் சரியான தருணம்.

    தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது சகஜம். வெற்றி பெற்றால் வீராப்பு கொள்வதும், தோல்வி அடைந்தால் முகத்தை கீழே தொங்கப்போடுவதும் அரசியல்வாதிகளுக்கு அழகல்ல. தி.மு.க.வை நடத்தி செல்கின்ற பெரும் பொறுப்பு வாய்ந்த பேரியக்கமாக நான் கருதுகிறேன். அதற்கு யாராவது ஊறு விளைவித்தால் அவர்களை நான் சும்மா விடமாட்டேன். அவர்களின் கருத்துகளை எதிர்த்து, எழுத்துக்கு, எழுத்து, பேச்சுக்கு பேச்சு என்று அந்த நாள் முதல் இந்த நாள் வரை போராடுகிறேன். அண்ணாவின் தம்பிகளான எங்களை யாரும் வீழ்த்த முடியாது. கடைசி மூச்சு இருக்கும்வரை இயக்கத்திற்காக பாடுபடுவேன்.

    இங்கு இளைஞர்கள் கூட்டத்தை பார்க்கிறேன். இளைஞர்கள் தான் இந்த சமுதாயத்தின் ஆணி வேர்கள். அவர்களால் தான் இந்த உலகத்தில் பல புரட்சிகள் நடைபெற்றன. இளைஞர்கள் தான் நாட்டை ஆள கூடியவர்கள்.

    என்னால் நடக்க கூட முடியவில்லை. அப்படி இருந்தாலும் கூட நீங்கள் காட்டுகிற உணர்வு, என் உள்ளத்தில் உள்ள அன்பு, ஆர்வம் இவைகளுக்கு ஈடு இணை கிடையாது. இவைகளையெல்லாம் பொக்கிஷமாக கருதுகிறேன். நாம் அனைவரும் ஒரே குறிக்கோளாடு வாழ வேண்டும். தமிழர்களை காப்பாற்ற, நம்மை விட்டால் யாரும் இல்லை.

    வேறு யார் வந்து காப்பாற்றப்போகிறார்கள். நாம்தான் தமிழர்களை காப்பாற்ற வேண்டும். நாம்தான் தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டும். எனவே எந்த தியாகத்துக்கும் தயாராகுங்கள். நான் உங்களை கேட்டுக்கொள்வது. நாம் எதற்கும் தயார், எதற்கும் ஈடுகொடுப்போம் என்ற சபதத்தை ஏற்று பணியாற்ற வேண்டும்.

    என்னைப்பொறுத்தவரை எனக்கு 92 வயதாகிறது. 10 வயது தொடங்கி அரசியல் பணிஆற்றுகிறேன். ஓய்வு இல்லாமல் உழைத்து கொண்டிருக்கிறேன். அந்த ஓய்வை விரும்புகிறேன். நீங்கள் தருவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அந்த ஓய்வு ஒன்று தான் நான் பட்டபாட்டுக்கு, நான் உழைத்த உழைப்புக்கு, நான் அடைந்த பயன் என்பதை உங்களுக்கு சொல்லிக்கொள்கிறேன்.

    நான் பேச முடியாது. தழுதழுத்து பேசுகிறேன். என்னால் சரியாக நடக்கக்கூட முடியாது. தள்ளாடி தள்ளாடி நடக்கிறேன். உங்கள் அன்பால் உதவியால் நான் கடைசி மூச்சை விட்டுக்கொண்டிருக்கிறேன். நீங்கள் ஆதரிப்பது தனிப்பட்ட கருணாநிதியை அல்ல. கருணாநிதி கொண்டிருக்கும் கொள்கை, உணர்ச்சி, வேகத்தை.

    தமிழர்களை காக்க என்னை விட்டால் வேறு கதியில்லை. நாம் தான் நம்மை காப்பாற்றிக்கொள்ள வேண்டும். எனவே உங்களை கேட்டுக்கொள்வது தியாகத்துக்கு தயாராக இருங்கள். எதற்கும் நாம் தயார், எதற்கும் ஈடுகொடுப்போம் என்ற சபதத்தை ஏற்று பணியாற்றுவோம்.

    இந்த தேர்தலில் எதிரிகள் வெற்றி பெற்று விட்டால் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் தமிழ்சமுதாயத்துக்கு விடுதலை, சுதந்திரம் கிடையாது. எனவே தேர்தலில் நாம் சீரோடும், சிறப்போடும் நடப்போம். உங்கள் அன்பால், உதவியால் தான் நான் கடைசி மூச்சை கூட விட்டு கொண்டு இருக்கிறேன். என்னை நீங்கள் ஆதரிப்பது என்பது தனிப்பட்ட கருணாநிதியை அல்ல. கருணாநிதி கொண்டிருக்கிற கொள்கை, அந்த உணர்ச்சியை, அந்த வேகத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

    தேர்தலில் வெற்றி, தோல்வி சகஜம். இந்த தேர்தலை பொறுத்த வரை தஞ்சையில் கூடி இருக்கிற தமிழ்ப்பெருங்குடி மக்கள், இளைஞர்கள், வாலிபபட்டாளங்களே இந்த தேர்தலில் எதிரிகள் வெற்றி பெற்று விட்டால் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் தமிழ் சமுதாயத்துக்கு விடுதலை கிடையாது.

    கடையை மூடினால் யாரும் மது அருந்த முடியாத அளவுக்கு என்னென்ன சட்டத்தை விதிக்க வேண்டுமோ? அதை எல்லாம் செய்து மதுவை ஒழித்தே தீருவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்

    Next Story
    ×