என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

மருத்துவம் அறிவோம்: இயற்கையோடு இணைந்த வாழ்வே இன்பம்- 229
பலர் அடிக்கடி கூறும் வார்த்தை "எனக்கு யாருமே உதவுவதற்கு இல்லை. நான் எப்பொழுதுமே தனியாகத்தான் இருக்கின்றேன்" என்பதுதான். இவர்கள் ஒன்றினை உணரவில்லை. இந்த பிரபஞ்சமே இவர்களுடன் இருக்கின்றது என்பதனை அநேகர் உணரவில்லை. நம்முடன் இருக்கின்றது. நம் பக்கத்திலேயே இருக்கின்றது இந்த பிரபஞ்சம்..
இந்த பிரபஞ்சம் ஒவ்வொரு தனி மனிதனுடனும் ஏதோ ஒரு வகையில் பேசிக் கொண்டிருக்கின்றது. ஒவ்வொரு தனி மனிதனுக்கும் வழி காட்ட பல அறிகுறிகளைக் காட்டுகின்றது. ஆனால் மனிதன் அதனை சற்றும் கவனிப்பதில்லை. அதனாலேயே பல பிரச்சினைகளுக்கு நம்மால் தீர்வு காண முடிவதில்லை.
ஆனால் மனிதன் தனக்கு யாராவது எங்கிருந்தாவது உதவ மாட்டார்களா? என்று மனதில் ஏங்குகிறான்? புழுங்கி தவிக்கின்றான்? ஒன்றுமே கிடைக்கவில்லை என சுலங்கி விடுகின்றான்.
நமக்கென்று ஒரு உடல் இருக்கின்றது. அப்பப்பா இந்த உடலை பராமரித்து பாதுகாப்பதே இன்றைய காலத்தில் பெரிய வேலை ஆகி விட்டது. பாதுகாக்க பல எளிய, நல்ல, முறையான வழிகள் இருந்தாலும் முறையற்ற வழியில் சென்று உடம்பினை விதம் விதமாய் கெடுத்துக் கொள்கிறோம்.
பின்னர் அதற்காக வாழ்நாள் முழுவதும் மருத்துவம் பார்க்கின்றோம். மருத்துவ விஞ்ஞானம் எத்தனையோ கடும் நோய்களுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளது. இதனைக் கூட பிரபஞ்ச சக்தியின் உதவியே என்பர். ஆனால் மனிதன் இதற்கெல்லாம் சளைத்தவனா என்ன? முறையற்ற வகையில் வாழ்ந்து உலகம் முழுவதும் நோயை பரப்பும் திறமை, வல்லமை கொண்டவன் ஆயிற்றே. சரி, மனிதன் என்னதான் செய்ய வேண்டும்.
சிறிதளவாவது ஒவ்வொரு மனிதனும் தன் ஐம்புலன்களை கட்டுப்படுத்தினாலே போதும். ஐம்புலன்களை அடக்குங்கள் என இங்கு குறிப்பிடப்படுவது கடும் பட்டினி, தியானம், மவுனம் என பெரிதாக நினைத்துக் கொள்ள வேண்டாம். சாதாரண அடிப்படை ஒழுக்கங்களே போதும். உதாரணமாக- நேரத்திற்கு ஆரோக்கியமான உணவு, 7 மணி நேர தூக்கம், கடும் சொல் பேசாது இருத்தல் போன்றவை ஆகும். ஆனால் இவைகளை கடைபிடிப்பதே இன்று இமாலய சாதனை ஆகிவிட்டது. இந்த ஒழுக்கங்களை கடைபிடித்தாலே பிரபஞ்சம் சொல்வது ஒருவருககு புரிய ஆரம்பிக்கும்.
இந்த முயற்சியில் நம் பங்காகத்தான் சிந்தனை, சொல், செயல் இந்த மூன்றிலும் வேகத்தினைக் குறைக்க வேண்டும். நம் சிந்தனை நொடியில் ராக்கெட் வேகத்தில் செல்கின்றது. ஒரே நேரத்தில் பலவித சிந்தனை. எண்ணங்களால் கூட கவனம் சிதறுகின்றது. சிந்திப்பதற்குள் வாயில் சொற்கள் ஓட்டை பக்கெட் போல் கொட்டுகின்றன. அவற்றினால் பல தாக்கங்களும், விளைவுகளும் கூட ஏற்பட்டு விடுகின்றன. சில நேரங்களில் பேசும் வார்த்தைகளால் அணுகுண்டு வெடித்தது போல் காலத்திற்கும் இருக்கும் வகையில் பாதிப்புகள் ஏற்படுகின்றன.
இதே போல் தான் செயலிலும் இருக்கின்றனர். பைக் ஸ்டார்ட் செய்த அடுத்த நொடியில் கண்ணுக்கே தெரிவதில்லை. அப்படிப்பட்ட வீராதி வீரர்கள், சூராதி சூரர்கள் நம்மிடையே உள்ளனர். எந்த செயலிலும் வேகம் தான் இருக்கின்றது. பேச்சோ, செயலோ ஆரம்பிப்பதற்கு முன் ஒரு சில நொடிகள் நிறுத்தம் கொடுங்கள். உதாரணமாக எழுத வேண்டும் என்று நினைத்தால் பேனா, பேப்பர், நாற்காலி, மேஜை இருக்கின்றதா? என்று சரி பார்த்துக் கொள்ளுங்கள்.
எழுத்து வடிவமாக சிந்தனைகளை கொட்டுவதற்கு முன் ஒரு சில நொடி நிறுத்தம் கொடுத்தால் எழுத்து தரமானதாக இருக்கும். இது போலத்தான் கோபம் வரும் பொழுது பேசவே பேசாதீர்கள். அங்கிருந்து நகர்ந்து விடுங்கள். எதனையும் பேசும் முன்பு ஒரு சில நொடிகள் நிதானப்படுத்துங்கள். பேச்சு நாகரீகமானதாக, பண்பானதாக இருக்கும்.
'சரி இதையெல்லாம் ஏன் செய்ய வேண்டும்? வெட்டு ஒன்று துண்டு இரண்டு என நறுக்குத் தெறித்தாற்பபோல் பேச வேண்டாமா? அப்பொழுது தானே எதிராளி அடங்குவான் என நிறையபேரின் மைண்ட் வாய்ஸ் சத்தமாகவே கேட்கின்றது. இதே கேள்வியினை எந்த ஒரு பேச்சு, செயல் செய்வதற்கும் முன் சில நொடிகள் நிதானித்து செய்த பிறகு உங்களிடம் கேட்டுப் பாருங்கள். உண்மையில் கேட்க வேண்டிய அவசியமே இருக்காது. ஏனெனில் மிக சுமூகமாக உங்கள் வேலை முடிந்திருக்கும்.
அந்த சில நொடிகளை பிரபஞ்ச சக்தி உங்களை நல்வழியில் திருப்பிட உதவி செய்யும். இதனை இறை சக்தி எனலாம். நீங்கள் விரும்பி வணங்கும் தெய்வம் எனலாம். இயற்கை எனலாம். உங்கள் ஆன்மா எனலாம். ஒவ்வொரு மனிதனும் ஒரு பிரபஞ்சமே. ஒரு உயர் சக்தியே.
நீங்களும் உங்களுக்குச் சொந்தமான இந்த உயர் சக்தியுடன் இணைந்து சென்றால் வாழ்க்கை எளிதாய் இருக்கும் என்கின்றனர். இதற்காக ஒருவர் அண்ட சராசரங்களைத் தாண்டி செல்ல வேண்டியது இல்லை. மனதினை குழப்பமின்றி வைத்திருந்தாலே போதும். மனதில் ஏற்படும் கேள்விகளுக்கு உங்களுக்கே பதில் கிடைத்து விடும்.
* தினமும் சிறிது நேரம் சுமார் 20 நிமிடம் அமைதியாய் இருந்து பழக வேண்டும்.
* சற்று தனிமையில் ஆழ்ந்து சிந்தித்தாலே நம்முள்ளேயே பதில் உருவாகும்.
* தியானம், மூச்சுப் பயிற்சி, யோகா, முத்திரைகள் போன்றவைகள் பெரிதும் உதவும்.
நீங்கள் யோசிக்கும் செயலுக்கான பதிலை 'அசரீரீ' போல் யாரோ ஒருவர் பேசுவது காதில் விழலாம். ஒரு பாட்டு கூட பதிலாக அமையலாம்.
தியானத்திலோ, கனவிலோ தீர்வு கிடைக்கலாம். அதற்காக காலையில் எழுந்திருப்பதற்கும், காபி குடிப்பதற்கும் நான் பிரபஞ்ச சக்தியின் பதிலை எதிர்பார்த்தேன் என்று பேச வேண்டும் என்றால் இந்த முயற்சிகளை ஒதுக்கி விடலாம். இவை அனைத்தும் ஒரு தனி மனிதனின் நம்பிக்கை, நம்பிக்கை இன்மையைப் பொறுத்தது. எந்த நிர்பந்தமும் இல்லை. அநேகரின் ஆய்வுகளை, முயற்சிகளை, எழுத்துக்களை படித்ததனை பகிர்ந்து கொள்கிறோம். அவ்வளவே.
நம்மை நாம் மகிழ்ச்சியாய் வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு நாளில் எத்தனை நல்ல நிகழ்வுகள் நடந்தாலும் ஒரு சின்ன பாதிப்பு மனிதனை சோகத்தில் மூழ்க அடித்து விடுகின்றது. இப்படியே அன்றாடம் சோகத்திலேயே மூழ்கி இருந்தால் ஒரு மனிதன் எப்பொழுதுதான் தன் வாழ்நாளில் மகிழ்ச்சியாய் இருப்பது? ஆக தனி மனிதன் தான் தானே முயற்சித்து தன்னை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும். பல மன நல ஆய்வாளர்கள் மனிதன் தன்னை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள சில கருத்துக்களைக் கூறியுள்ளனர். முயற்சி செய்து பார்க்கலாமே.
* தினமும் ஏதாவது ஒரு சிறிய தர்மம் செய்யுங்கள். அதனை மனதாரச் செய்ய வேண்டும். இங்கு அளவு முக்கியமல்ல. ஒரு ரூபாயானாலும் சரி, ஒரு கோடி ரூபாய் ஆனாலும் சரி உடல் உழைப்பானாலும் (ஆஸ்பத்திரி அழைத்துச் செல்வது, உடனிருந்து பார்த்துக் கொள்வது போன்றவை) சரி முழு மனதோடு செய்யும் பொழுது மனம் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றதாம்.
* உங்கள் வாழ்வில் பல விஷயங்களுக்காக நீங்கள் யாருக்கோ இறைவனுக்கோ நன்றி உடையவராக இருப்பீர்கள் (அப்படித்தானே?) அந்த பல நல்ல விஷயங்களை பட்டியல் இட்டு எழுதிப் பார்த்தால் மனதில் ஒரு நிறைவு கிடைக்குமாம்.
* மனதில் பல எண்ண ஓட்டங்கள் இருக்கும். அவைகளை ஒன்று விடாது எழுதுங்கள். சற்று நேரம் சென்று அதனைப் படியுங்கள். பல எண்ணங்களை தேவையற்றவை என நீக்கி விடுவீர்கள். இப்படி எண்ணங்கள் குறையும் பொழுது மனச் சுமையும் குறைந்து விடுகின்றது என்று கூறப்படுகின்றது.
* உங்கள் வாழ்நாளிற்குள் எதையெல்லாம் சாதிக்க வேண்டும் என்று நினைக்கின்றீர்களோ அதையெல்லாம் ஏழுதுங்கள். நினைவில் கொள்ளுங்கள். எழுதுபவன் ஒரு பத்து வரிக்குள் இருக்கட்டும். அது ஒரு தெளிவினையும், உத்வேகத்தினையும் கொடுக்கும். மாறாக ஒரு குயர் பேப்பர் அளவு எழுதினீர்கள் என்றால் மன அழுத்தமும், உளைச்சலும் மிகவும் கூடி விடும்.
* அன்றாடம் நடைபயிற்சி செய்வதனை விடாது தொடருங்கள். வழியில் தெரிந்தவர்களைப் பார்த்து ஒரு புன்சிரிப்பு, நலம் விசாரித்தால் மனம் லேசாக இருக்கும்.
* பிடித்த உணவினை உடல் நலத்தினைப் பொறுத்து அவ்வப்போது ரசித்து உண்ணலாமே. இதில் மக்கள் பெறும் திருப்தி அதிகம் என கூறப்படுகின்றது.
* சிறிது நேரம் தியானம் செய்யலாம்.
* டி.வி.யில் சிரிப்பு நிகழ்ச்சிகளை பார்க்கலாம்.
* பாட்டு கேட்கலாம். நீங்களும் பாடலாம். (அருகில் உள்ளவர்கள் பத்திரம். கொடுமை தாங்காது ஏதாவது ஆகி விடப் போகின்றது).
* ஷவர் குளியல், நீச்சல் இரண்டுமே மன அமைதி தரும்.
* சமைக்கத் தெரியுமா? முயற்சி செய்யுங்கள். மற்றவர் உயிர் பத்திரம்- கொலை கேஸ் ஆகி விடக்கூடாது.
* வீட்டை சீர் செய்து அழகு பார்க்கலாமே.
''இதெல்லாம் சாதாரண விஷயங்கள் தானே" என்று நினைக்கலாம். 'ஹே' இதெல்லாம் நான் ஊதி விடுவேன் என்று மார்தட்டிக் கொள்ளலாம். ஆனால் தொடர்ந்து செய்கின்றீர்களா? என்பதில் நீங்களே உங்களை பரிசோதித்துக் கொள்ள வேண்டும். உங்கள் வாழ்வு எளிதாக, மகிழ்ச்சியானதாக மாறி விட்டது என்றால் வெற்றி மாலை உங்களுக்குத்தான்.
'You are what You Eat'-நீங்கள் என்ன உண்கிறீர்களோ அதுபோல் ஆகின்றீர்கள்.-மருத்துவ விஞ்ஞானம்.
'You are what You think'-நீங்கள் என்ன நினைக்கின்றீர்களோ அதுவாகவே ஆகின்றீர்கள்'-பிரபஞ்ச ரகசியம்.
ஆகையால் தான் நமது எண்ணங்கள் தெளிவாக இருக்க வேண்டும். அந்த எண்ண அலை அதிர்வுகளுக்கு ஏற்ப பிரபபஞ்ச சக்தி வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கும். நடத்தி வைக்கும். எப்படி ரேடியோ, டி.வி. என அனைத்திற்கும் சரியாக டி.யூன் செய்ய வேண்டுமோ அப்படித்தான் நம் எண்ண அலை அதிர்வுகள் நேர் மறையானதாய், உறுதியானதாய் இருக்க வேண்டும். அன்றாடம் சில நிமிடங்கள் அமைதியாய் மூச்சினை கவனியுங்கள். பின்னர் தனக்கு வேண்டியதனை தெளிவாய் பிரபஞ்ச சக்தியிடம் சொல்லுங்கள். மனதால் கூட பேசலாம். நம்பி செய்யுங்கள். சொன்னவுடன் 'ஜீ பூம்பா' போல் நொடியில் நடக்கும் என்ற ஆவேசம் வேண்டாம். தேவைகளுக்கேற்ற வாய்ப்புகள் உருவாகும்.
வழி பிறக்கும். அதனால்தான் நல்லதையே நினையுங்கள் என வலியுறுத்தப்படுகின்றது. சோகம், பயம் போன்றவற்றினால் எண்ணங்களை பலப்படுத்தி விடக்கூடாது. நிகழ்வுகளும் சோகமாகி விடும். எனவே ஆக்கப்பூர்வமான நல்ல எண்ணங்களை சிந்தியுங்கள். பேசுங்கள். ஆக்கப்பூர்வமான நிகழ்வுகளே நடக்கும்.






