search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    மகிழ்ச்சி பொங்க சிவாஜி குடும்பத்தினருடன் லதா மங்கேஷ்கர்
    X
    மகிழ்ச்சி பொங்க சிவாஜி குடும்பத்தினருடன் லதா மங்கேஷ்கர்

    பாசமலர் தங்கையாக வாழ்ந்த லதா மங்கேஷ்கர்- அன்பு மழை பொழிந்த சிவாஜிகணேசன்

    ஒவ்வொரு தீபாவளிக்கும் சிவாஜி குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் புத்தாடைகள், இனிப்புகளை மும்பையில் இருந்தபடியே லதா மங்கேஷ்கர் அனுப்பி வைப்பதை வழக்கமாகவே வைத்து இருந்தார்.
    இந்திய திரை உலகில் ‘இசைக்குயிலாக’ திகழ்ந்த லதா மங்கேஷ்கரின் மரணம் திரை உலக பிரபலங்களை கண்ணீர் சிந்த வைத்துள்ளது. தமிழில் சில பாடல்களை மட்டுமே அவர் பாடியிருந்த போதிலும், என்றென்றும் அவை மனதில் நிற்பவையாகவே உள்ளன.

    இளையராஜா இசையில் கமல் நடிப்பில் வெளியான சத்யா படத்தில் இடம்பெற்ற ‘வளையோசை கலகல கலவென’ என்ற பாடல் இப்போதும் காதலர்களின் சங்கீத கீதமாகவே ஒலித்துக்கொண்டு இருக்கிறது. இப்படி தனது பாடல்கள் மூலம் லட்சக்கணக்கான ரசிகர்களை கட்டிப்போட்டு இருந்த லதா மங்கேஷ்கர், தமிழ் திரை உலகின் அரசனாக வாழ்ந்து மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் குடும்பத்தில் ஒருவராக வாழ்ந்துள்ளார்.

    சிவாஜி கணேசனும், லதா மங்கேஷ்கரும் அண்ணன்-தங்கையாகவே பாசமழை பொழிந்து இருக்கிறார்கள். சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான ‘பாசமலர்’ திரைப்படம் இப்போதும் அண்ணன்-தங்கை பாசத்தை பிரதிபலிக்கும் மிகச்சிறந்த காவியமாகவே திகழ்கிறது.

    அந்த படத்தில் இடம் பெற்றது போன்ற பாசமலர் தங்கையாகவே லதா மங்கேஷ்கர் வாழ்ந்து இருக்கிறார். சிவாஜி கணேசனும், அவர் மீது உடன் பிறந்த சகோதரியை போன்று அளவுகடந்த பாசத்தை காட்டி உள்ளார்.

    1960-ம் ஆண்டு சிவாஜி கணேசன் நடிப்பை பார்த்து வியந்த லதா மங்கேஷ்கர், தனது சகோதரிகளுடன் சென்னை வந்து அன்னை இல்லத்திற்கு சென்றுள்ளார். அப்போதுதான் முதல்முறையாக சிவாஜியை நேரில் பார்த்து பேசி நட்பு பாராட்டி இருக்கிறார். முதல் சந்திப்பிலேயே இருவரும் அன்பை பொழிந்து பேசி இருக்கிறார்கள்.

    அப்போது லதா மங்கேஷ்கர், சிவாஜியிடம் ‘‘என்னை உங்கள் தங்கையாக ஏற்றுக்கொள்ள வேண்டும்’’ என்று கூறி இருக்கிறார். அதனை சிவாஜியும் ஏற்றுக்கொண்டு அன்புத்தங்கையாகவே அவரை உபசரித்து இருக்கிறார்.

    இந்த அண்ணன்-தங்கை பாசம் சிவாஜி மரணம் அடையும் வரையில் தொடர்ந்துள்ளது. சிவாஜியின் மரணத்திற்கு பிறகும் அவரது அன்னை இல்ல குடும்பத்தினரோடு லதா மங்கேஷ்கர் தொடர்பிலேயே இருந்துள்ளார்.

    சிரித்து பேசிக்கொண்டிருக்கும் சிவாஜி கணேசன் - லதா மங்கேஷ்கர்

    ஒவ்வொரு தீபாவளிக்கும் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் புத்தாடைகள், இனிப்புகளை மும்பையில் இருந்தபடியே லதா மங்கேஷ்கர் அனுப்பி வைப்பதை வழக்கமாகவே வைத்து இருந்தார். லதா மங்கேஷ்கர்-சிவாஜிக்கு இடையேயான இந்த உறவு மாநிலம், மொழியை கடந்து நட்புக்கு இலக்கணம் வகுத்துள்ளது என்று கூறினால் அது மிகையாகாது.

    சிவாஜி கணேசனின் குடும்பத்தில் ஒருவரான பிறகு லதா மங்கேஷ்கர் சென்னைக்கு வரும் போதெல்லாம் அன்னை இல்லத்துக்கு தவறாமல் சென்று வந்துள்ளார். ஆரம்பத்தில் சென்னை வந்தபோது ஓட்டல்களிலேயே லதா மங்கேஷ்கர் தங்கி உள்ளார்.

    ஆனால் ஓட்டல் உணவு அவருக்கு பிடிக்காமல் போனது. இதுபற்றி சிவாஜியிடம் ஒருமுறை அவர் கூறி இருக்கிறார். உடனே சிவாஜி, ‘‘அதற்கு என்னம்மா? நான் வீட்டில் இருந்து சாப்பாடு கொடுத்து விடுகிறேன்’’ என்று கூறி உள்ளார்.

    இதையடுத்து லதா மங்கேஷ்கர் சென்னை வரும்போதெல்லாம் சாப்பாடு பற்றிய கவலையின்றி வந்து சென்றுள்ளார். சிவாஜி கணேசன் வீட்டில் இருந்து விதவிதமான உணவு அவர் இருக்கும் இடத்திற்கு சென்றுள்ளது. ஒரு கட்டத்தில் லதா மங்கேஷ்கரிடம் சிவாஜி, ‘‘சென்னை வரும்போதெல்லாம் ஏன் வெளியில் தங்குகிறாய்? இனி எனது வீட்டில்தான் தங்கவேண்டும்’’ என கூறி உள்ளார்.

    இதற்கு தயங்காமல் லதா மங்கேஷ்கரும் ‘‘சரி அண்ணா’’ என்று ஏற்றுக்கொண்டிருக்கிறார்.

    இதனை தொடர்ந்து அன்பு தங்கைக்காக அன்னை இல்லத்திலேயே சிறிய பங்களா ஒன்றையும் சிவாஜி கணேசன் கட்டி உள்ளார். இதன் பிறகு லதா மங்கேஷ்கர் சென்னை வந்த போதெல்லாம் அன்னை இல்லத்துக்கு சென்று அண்ணின் அன்புக் கட்டளையை ஏற்று அந்த பங்களா வீட்டிலேயே தங்குவதை வழக்கப்படுத்திக் கொண்டார்.

    இந்த பங்களா வீட்டை 2 மாதத்தில் சிவாஜி கட்டி இருக்கிறார். லதா மங்கேஷ்கர் அங்கு தங்கி இருந்த போதெல்லாம் சிவாஜியின் குடும்பத்தினருக்காக சமைக்கப்பட்ட உணவுகள் லதா மங்கேஷ்கருக்கும் பரிமாறப்பட்டுள்ளன.

    சிவாஜி கணேசனின் மகனான பிரபு திரை உலகில் நடித்துக் கொண்டிருந்தபோது, ‘‘தனது மகனுக்காக நீ ஒரு பாடல் பாட வேண்டும்’’ என சிவாஜி கணேசன் லதா மங்கேஷ்கரிடம் கேட்டுள்ளார். அதற்கு தயங்காமல் ‘‘கண்டிப்பாக நான் பாடுகிறேன் அண்ணா’’ என்று லதா மங்கேஷ்கர் தெரிவித்துள்ளார். இதன்படி பிரபு நடிப்பில் வெளியான ‘ஆனந்த்’ திரைப்படத்தில் ‘‘ஆராரோ ஆராரோ.. நீ வேறோ நான் வேறோ’’ என்கிற பாடலை இளையராஜா இசையில் லதா மங்கேஷ்கர் பாடி உள்ளார். அப்போது பட்டிதொட்டி எங்கும் இந்த பாடல் ‘ஹிட்’ அடித்து இருந்தது. இப்போதும் இந்த பாடலை பெரியவர்கள் முதல் இளைஞர்கள் வரை முணுமுணுத்துக் கொண்டே இருக்கிறார்கள். இந்த பாடலை பாடி முடித்த பிறகு அதற்காக லதா மங்கேஷ்கர் சம்பளம் வாங்கவில்லை.

    சிவாஜி கணேசன் - லதா மங்கேஷ்கர்

    ‘‘என் பிள்ளைக்காக நான் பாடி இருக்கிறேன். எனக்கு இந்த பாட்டுக்கு பணம் எதுவும் வேண்டாம்’’ என்று கூறி உள்ளார். இதனை கேட்டு சிவாஜி கணேசன் மற்றும் அவரது குடும்பத்தினர் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    லதா மங்கேஷ்கர், சிவாஜி கணேசன் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் வைத்து இருந்த அளவு கடந்த பாசத்தை இப்படி அடுக்கிக்கொண்டே செல்லலாம்.

    சிவாஜி கணேசனின் மரணத்துக்கு பிறகும் லதா மங்கேஷ்கர், அவரது குடும்பத்தினரோடு வாட்ஸ் அப்பில் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார்.

    கடவுள்களின் புகைப்படங்களை சிவாஜி கணேசனின் குடும்ப உறுப்பினர்களின் செல்போன்களுக்கு தொடர்ந்து அனுப்பி வந்துள்ளார். இப்படி கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு வரையில் கூட லதா மங்கேஷ்கரின் செல்போனில் இருந்து அன்பான வார்த்தைகளுடன் ஆண்டவனின் புகைப்படங்கள் வந்து விழுந்துள்ளன.
    இப்படி தனது கடைசி மூச்சு இருக்கும் வரையில் சிவாஜி கணேசனின் குடும்பத்தினரோடு நெருங்கிய தொடர்பில் இருந்து அவர்களுடன் அனுதினமும் பேசிக் கொண்டே இருந்துள்ளார் லதா மங்கேஷ்கர். ஒட்டுமொத்த திரை உலகினரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ள அவரது மரணம், சிவாஜி கணேசன் குடும்பத்தினரையும் சொல்லொண்ணா துயரத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

    சிவாஜி கணேசன்-லதா மங்கேஷ்கரின் அண்ணன்-தங்கை பாசப்பிணைப்பு காலத்தை கடந்தும் நம் அனைவரின் நெஞ்சங்களிலும் நிலைத்து இருக்கும் என்றால் அது மிகையாகாது.
    Next Story
    ×