என் மலர்

  சிறப்புக் கட்டுரைகள்

  மூளைக்கு வலுசேர்க்கும் சீதாப்பழம்
  X
  மூளைக்கு வலுசேர்க்கும் சீதாப்பழம்

  இயற்கைத் தரும் இனிய வாழ்வு - மூளைக்கு வலுசேர்க்கும் சீதாப்பழம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இயற்கைத் தரும் இனிய வாழ்வு எனும் தலைப்பில் மூளைக்கு வலுசேர்க்கும் சீதாப்பழம் குறித்து போப்பு அவர்கள் ‘மாலைமலர்’ வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.
  காட்டு விளைச்சலாகக் கிடைப்பது மட்டுமின்றி எவ்வித எதிர்பார்ப்புகளும் அற்ற எந்த உழைப்பையும் கோராத பழம் சீதா.ஆங்கிலத்தில் இதனை கஸ்டர்ட் ஆப்பிள் என்பார்கள். அதாவது குளிர்வுக் கேக் என்று நாம் பொருள் கொள்ளலாம்.கேக் போன்ற மிருதுத் தன்மையும், குளிர்ச்சியான தன்மையும் உடையது.சுவையும் இதமான இனிப்புடன் இருப்பதோடு வாசமும் இனிமையாக இருக்கிறது.ஆனால் இதன் புறத்தோற்றம் முற்றிலும் கரடு முரடாக எந்த வடிவத்திற்கும் பொருந்தாத ஒன்றாக இருக்கிறது.

  உள்ளே பளீரென்ற வெள்ளை நிறத்தில் சுளைகள் போன்று ஒன்றுடன் ஒன்று நெருக்கியடித்துக் கொண்டிருக்கும் சீதாப்பழத்தின் விதைகள் பளபளப்பான கருமை நிறத்தில் துப்பாக்கிக் குண்டின் புல்லட் வடிவத்தில் இருக்கிறது. மூளைப் புற்றுநோயில் இருந்து அடிவயிற்றில் பெருங்குடல் முடிவில் கோலோனில் தோன்றும் புற்றுநோய் வரை அனைத்து வகையான புற்றுநோய்களுக்கும் அரு மருந்தாக இருக்கிறது என்பதை சமீபத்தில் கண்டுபிடித்துள்ளனர் மருத்துவ ஆய்வாளர்கள். இதன் எந்த அம்சம் அத்தகைய சிறப்புக் குணத்தை அளிக்கிறது என்ற கோணத்தில் மிக விரிவான ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன.

  அந்தளவிற்குச் சிறப்புக் குணம் மிக்க சீதாப்பழம் காட்டில் விளைவதோடு பெரியளவிற்கு மழைப் பொழிவைக் கூட எதிர்பார்ப்பதில்லை.வெறும் குளிர்க்காற்றிலேயே விளைந்து விடுகிறது.இதனை விளைவிப்பது மரம் என்றும் சொல்ல முடியாது, செடியென்றும் சொல்ல முடியாத ஒருவகையான புதர்த் தாவரம் ஆகும்.சில வகையான சீதாப்பழம் மேல் புள்ளிகளில் மென்மையான முற்களையும் கொண்டிருப்பதைப் பார்த்திருக்கலாம்.

  ஆப்பிரிக்கா போன்ற அதி வெப்ப மண்டலப் பகுதிகளில் கொடிச் சீதாவும் உண்டு.அரக்கு நிறத்திலும், சிவப்பு நிறத்திலும் பழங்கள் உண்டு என்றாலும் அனைத்துப் பழங்களும் ஒரே குணத்தைக் கொண்டுள்ளன. இதன் அடிப்படையான இனிப்பும் குளிர்வுமான தன்மையினால் தொண்டை மற்றும் உணவுக் குழல் பகுதியை இதமாக்க விருந்தின் முடிவில் விதை நீக்கிய சீதாப் பழக் கூழினை நிறைவுப் பண்டமாக அளிக்கிறார்கள். விருந்துணவினால் ஏற்படும் எரிச்சல் வறட்சி போன்ற உணர்வுகளைத் தணிப்பதோடு செரிமானத்தையும் எளிதாக்குகிறது சீதாப்பழம்.

  மாவுத் தன்மையும் இல்லாமல் நார்த் தன்மையும் இல்லாமல் கூழ்த் தன்மையோடும், இனிப்பாகவும் இருப்பதால் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான இருக்கிறது சீதாப்பழம்.

  இதன் வழுவழுப்பான நெகிழ்வுத் தன்மை குடலைத் தூய்மையாக்கி மலச்சிக்கலை எளிதில் நீக்குகிறது.ஆஸ்த்மா, மூச்சிரைப்பு உள்ள சிலருக்கு குடல் வறண்டு மலச்சிக்கலும் இருக்கும்.இவர்களுக்கு சீதா அருமருந்தாக இருக்கும்.அதன் குளிர்வுத் தன்மையால் சீதாப்பழம் சளிப் பிடிக்குமோ என்று அச்சப்படலாம். ஆனால் வயிற்றில் உணவே இல்லாமல் நன்றாகப் பசித்திருக்கும் பொழுது சீதாப்பழங்கள் இரண்டை நிதானமாகச் சுவைத்துச் சாப்பிட்டால் மலச்சிக்கல் நீங்குவதோடு சுவாசம் தொடர்பான சிக்கலுக்கும் தீர்வு கிடைக்கும். நீர்த் தன்மை உடைய பழங்களை அனைத்தையும் நாம் சுவாசத்திற்கு எதிரானதாகவும், சளியை அதிகரிக்கும் என்றும் நம்புகிறோம்.

  உண்மையில் வைட்டமின் சி, தேவைப்படும் சளி தொடர்பான பிரச்சனைக்குப் பழங்களே சரியான தீர்வாக இருக்கும்.ஆனால் பழங்களை எந்த நேரத்தில் எடுப்பது என்பதில் நமக்கு மிகவும் கவனம் தேவையாகும். உடலின் உணவுத் தேவையை முழுமையான நிலைக்குக் கொண்டு வந்து அதாவது வயிற்றைத் தீவிரமான பசிக்கு உள்ளாக்கிய பின்னர் நீர்த் தன்மையான பழங்கள் எத்தகைய உதவி செய்கின்றன என்பதை நம்மால் நன்றாக உணர முடியும்.

  கொழ கொழப்பாகவும் மென் நரம்புகளுடனும் இருக்கிற நம்முடைய மூளையே நமது உடலின் ஆற்றலில் பெரும் பகுதியை எடுத்துக் கொள்கிறது.அதற்குரிய ஆற்றலில் பற்றாக்குறை ஏற்படுகிற பொழுது சோர்வு, தலைவலி, மயக்கம், கண் பார்வை மங்குதல் போன்ற பலவகையான தொல்லைகள் தனித்தனியாகவோ, ஒரே நேரத்திலோ ஏற்படலாம்.சிலருக்கு இத்தொல்லைகள் அடிக்கடியும் ஏற்படக்கூடும்.இதற்கு மிக நல்ல நிவாரணம் தரக்கூடியது சீதாபழம் ஆகும்.

  ஏனென்றால் தற்கால உணவுகளில் நச்சுத்தன்மை மிகுந்துள்ளது என்பதை இங்கே சொல்லித் தெரிய வேண்டியதில்லை.உரம், பூச்சி மருந்து பயன்படுத்தாமல் எந்த உணவுப் பொருளும் விளைவிடத்தை விட்டு வெளியே வருவதில்லை.உணவுப் பொருட்கள் சந்தைக்கு வந்த பின்னரும் அவைக் கெட்டுப் போகாமல் இருக்க அல்லது விரைவில் பழுக்க வைக்க என இரசாயன மருந்துகள் தெளிக்கப்படுவது கண்கூடு. நாம் எந்த உணவுப் பொருளை உண்டாலும் அவற்றில் உள்ள நச்சுக்கள் உடனடியாக நமது கல்லீரலால் ஈர்க்கப்படும் என்பது ஒருபுறம் இருந்தாலும் கல்லீரலின் ஈர்ப்புத் திறனையும் தாண்டிய அளவிற்குப் போகிற பொழுது மேற்படி நச்சுக்கள் நமது மென் நரம்புகளில் பரவி மூளை வரைக்கும் போவது தவிர்க்க முடியாத ஒன்று. அந்த நிலையில் மிகச் சிறந்த நச்சு நீக்கியாகச் செயல்படுகிறது சீதாப்பழம்.

  மற்றெல்லாப் பழங்களிலும் குறிப்பாக வைட்டமின் சி நிறைந்த பழங்களுக்கு உண்டு என்றாலும் சீதாப்பழத்திற்கு இந்தப் பண்பு மிகவும் அதிகமாக இருக்கிறது.எனவே வளர்கிற பிள்ளைகள் படிக்கிற பிள்ளைகளோடு மூளை உழைப்பு சார்ந்தவர்களும் சீதாப் பழத்தை வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

  பொதுவாக இளவேனிற் காலத்தில் தொடங்கி முதுவேனிற் காலத்தின் தொடக்கம் வரையிலும் அதாவது மார்ச் தொடங்கி மே மாதம் வரையிலும் பின்னர் கார்காலத்தில் அதாவது ஆகஸ்ட் செப்டம்பர் மாதங்களிலும் கிடைக்கிறது. முற்றிய காயாக அறுவடை செய்த மூன்று நான்கு நாட்களுக்குள் பழுத்து விடும் என்பதால் அதிக நாட்கள் பாதுகாத்து வைத்திருக்க முடிவதில்லை.பொதுவாகக் காயாக வாங்கி வந்து அரிசி மூட்டைக்குள் வைத்திருந்து பழுக்க வைத்து உண்பது நம்மவர்கள் பழக்கம்.

  சீதாப்பழத்தின் பிறப்பிடம் தென்னமெரிக்கா வட அமெரிக்காவின் தென்பகுதி என்று சொல்லப்படுகிறது.கிழக்கு இந்தோனேசியத் தீவான திமோரிலும், பிலிப்பைன்சிலும் பன்னெடுங்காலமாக விளைகிறது என்றும் சொல்லப்படுகிறது.ஸ்பானியர்கள் மூலமாக உலகின் பல நாடுகளுக்கும் பரவி போர்ச்சுக்கீசியர் மூலமாக இந்தியாவிற்குள் கொண்டுவரப்பட்டது என்று ஒரு குறிப்புக் கூறுகிறது.சுமார் எழுநூறு ஆண்டுகளுக்கு முன்னர் அரேபியர்களால் கொண்டு வரப்பட்டது என்றும் கூறப்படுகிறது.எது எப்படியானாலும் இந்தியாவில் காட்டு விளைச்சலாக விளைந்து நல்ல அறுவடை தரும் பழமாக இருக்கிறது சீதாப்பழம்.

  போப்பு

  இந்தியாவில் அதிக வெப்பம் காணப்படும் இராஜஸ்த்தான், ஒரிசா, தெலுங்கான மாநிலங்களில் அதிகம் விளைகிறது என்றாலும் மேற்சொன்னது போல எவ்விதப் பராமரிப்பும் இல்லாமல் நாம் நட்டு வைக்காமல் கூட வீட்டுத் தோட்டத்தில் தானாகவே முளைத்து பலன் தரக்கூடியதாகவும் இருக்கிறது சீதாப் பழம். குன்றுகளிலும், குண்டுப் பாறைகளிலும் வெறும் ஈரக் காற்றைச் செரித்து வளரும் சீதாச் செடிக்கு வெறும் சரளை மண் இருந்தால் போதுமானது.அந்தளவிற்கு அப்பாவித் தாவரமாக இருக்கிறது சீதா.

  மேலே சொன்னது போல மென்னரம்புகளுக்குத் தேவையான நுண் ஆற்றல்களை சீதாப்பழம் வழங்குவதால் மூளையைச் சுறுசுறுப்பாக ஆக்குவதுடன் மன நெருக்கடி மிகுந்த நேரத்தில் இரத்த அழுத்தத்தைத் தணித்து மன அமைதி தரக்கூடியதாகவும் இருக்கிறது. மென் நரம்பு என்று சொல்கிற பொழுது மூளைக்கு அடுத்தபடியாக அதிக ஆற்றலைப் பெறும் கண் நரம்புகளுக்கும் நல்ல சக்தியைத் தருகிறது சீதாப்பழம்.

  பார்வைக் குறைபாடு, கண் புரை போன்றவற்றிற்கும் நல்ல தீர்வினைத் தரக்கூடியது சீதாப்பழம். அதேபோல தொடர் மருந்து மாத்திரைகளால் பலருக்குப் பாதம் மரத்துப் போதல் பிரச்சனைத் தற்காலத்தில் சர்வ சாதாரணமாகக் காணப்படும் ஒன்று. அவர்களும் சீதாப்பழத்தினை உண்டு பலன் பெறலாம்.எவ்வளவு தான் நல்ல பலனைத் தரக்கூடியப் பழம் என்றாலும் ஒருநாளைக்கு சுமார் 150 முதல் 200 கிராம் வரை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.அதையும் நிதானமாக சுவைத்து உண்ண வேண்டும்.

  பொதுவாக நல்லது என்று சொல்லக்கூடிய அனைத்துப் பொருட்களையும் உரிய உடல் பிரச்சனைத் தீரும் வரை ஒரே நேரத்தில் நிறைய எடுத்துக் கொள்ளும் பழக்கம் தற்காலத்தில் அதிகரித்து வருகிறது. இத்தகையோர் நினைவில் கொள்ள வேண்டிய பழமொழி ”அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு”

  நம் உடலில் எந்த விதமான உபாதைகள் என்றாலும் அது ஒரு நாளில் தோன்றி நம்மை இம்சிப்பதில்லை. ஒவ்வொரு நாளும் மைக்ரான் அளவிற்கு உள்ளுக்குள் சேர்ந்து கொண்டே வந்து இனிமேல் இதற்கு மேல் தாங்க முடியாத நிலையை எட்டும் பொழுது தான் நம்மை எச்சரிக்கும் விதமாக ஒரு வலியோ உபாதையோ தோன்றுகிறது. அந்த உபாதை நம்மில் சேருவதற்குக் காரணம் நம்மையறியாமல் நாம் உடலுக்கு இழைக்கும் தீங்குதான் என்பதை உணர்ந்தால் போதும், அவ்வுபாதைகள் நீங்குவதற்கும் நாம் போதிய அவகாசத்தைக் கொடுக்கும் பக்குவத்தை அடைந்து விடுவோம்.

  நம் உடலில் தோன்றும் மிகச் சாதாரணத் தலைவலி முதல் புற்றுக் கட்டிகள் வரை ஒருநாளில் தோன்றக்கூடிய ஒன்றே அல்ல. நம்முடைய பழக்க வழக்கங்களில் ஏதோ ஒன்றைத் தொடர்ந்து கடைப்பிடிப்பதால் வருவதாகும். ஒரு உபாதை சிறிய அளவில் தோன்றும் போது அதனைப் பொருட்படுத்தாமல் அந்த நேரத்திற்குச் சமாளிக்க மருந்து மாத்திரைகளைப் போட்டு ஒப்பேற்றிக் கொண்டே போவதே இன்றைய பழக்கம். இவ்வாறு அமுக்கப்பட்ட வலியானது பின்னர் ஒருநாள் பெருந்தொல்லையாக மாறி விடுகிறது. இந்த எளிய உண்மையை நாம் உணர்வதே இல்லை.

  சாதாரணமாக உருவாகும் வாயுத்தேக்கம் வாயுப்பிடிப்பாகவும் பின்னர் செரிமானத் தொல்லையாகவும் மாறி விடுகிறது.அதுவே காலப்போக்கில் நீரிழிவு நோயாகவும், ரத்த அழுத்த நோயாகவும் மாற வாய்ப்பு உண்டு.வாயுத் தேக்கம் நீர்த்தேக்கமாகவும் மாறக்கூடும்.இது தான் நாற்பது வயதைக் கடந்த பலருக்கும் முட்டி வலியாகவும் இடுப்பு வலியாகவும் கால் வீக்கமாகவும் மாறுகிறது.

  நாம் தொடர்ந்து எடுத்து வரும் இரசாயனம் கலந்த உணவுப் பொருட்கள் அல்லது காற்று நீர் வழியாகச் சேரும் நச்சுக்கள் உடலில் அதிகம் பயன்படுத்தப்படாத இடங்களில் தேங்குகிறது.ஆண்டுக்கணக்காக இரசாயனக் கழிவுகள் தேங்குகிற பொழுது தேக்கம் இறுக்கமடைந்து அதீத இரசாயனக் கழிவாகப் புற்றுக் கட்டியாக மாறுகிறது.

  மன இறுக்கம், மாதாந்திர உதிரப்போக்கில் ஏற்படும் பிரச்சனை போன்றவற்றால் பெண்களுக்கு முட்டி வலி தோன்றுவது போல பெண்களுக்கு மார்பகப் புற்று நோய் தற்காலத்தில் சர்வ இயல்பான ஒன்றாகி விட்டது. ஆரம்ப நிலையில் இந்தப் புற்று நோயைத் தீர்ப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது சீதாப்பழம்.குறைந்தபட்சம் தொடர்ந்து சீதாப்பழம் எடுத்து வருவோர்க்கு புற்றுநோய்க் காரணிகள் பெருமளவு தடுக்கப்படும் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை.

  வெப்பப் பகுதிகளில் விளையும் பல பழங்கள் அதிக ஆற்றல்களைக் கொண்டுள்ளன. முற்றிலும் வெப்பத்தை உண்டு வளரும் சீதாப்பழம் நமது உடலின் திசுக்களை அழிக்கும் நச்சுக்களை நீக்கும் தனித்துவமான ஆற்றலைக் கொண்டுள்ளது.எனவே வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் விலை மலிவான சீதாப் பழத்தை எடுத்து உடல் நலனை மேம்படுத்திக் கொள்வோம்.சீதாவைப் போலவே புதர்ச் செடியில் விளையக்கூடிய உடலுக்கு நற்பலனைத் தரக்கூடிய எலந்தப் பழம் என்று பரவலாக அறியப்படுகிற இலந்தைப் பழம் குறித்துப் பார்க்கலாம்.
  Next Story
  ×