என் மலர்tooltip icon

    செய்திகள்

    தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் முடக்கப்பட்ட மின் திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படும்: கனிமொழி பிரசாரம்
    X

    தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் முடக்கப்பட்ட மின் திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படும்: கனிமொழி பிரசாரம்

    தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் முடக்கப்பட்ட மின் திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று கனிமொழி எம்.பி. தேர்தல் பிரசாரம் செய்தார்.
    கடலூர்:

    கடலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் இள.புகழேந்தி, புவனகிரி தி.மு.க. வேட்பாளர் ஆகியோரை ஆதரித்து கனிமொழி எம்.பி. கடலூர், புவனகிரி பகுதியில் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:–

    மக்களுக்காக உழைக்கிற தலைவர் கருணாநிதி. 5 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா உங்களை வந்து சந்தித்தாரா? செய்வீர்களா, செய்வீர்களா? என்று கேட்ட முதல்–அமைச்சர் மறுபடியும் வந்தாரா?

    வெள்ளம் வந்து பாதிப்பு ஏற்பட்ட அந்த நேரத்தில் இந்த ஆட்சியில் உதவிக்கரம் நீட்டினார்களா? நிவாரணம் தான் வழங்கப்பட்டதா? சென்னை, கடலூரில் வெள்ள பாதிப்புக்கு அ.தி.மு.க. ஆட்சி தான் காரணம். கடலூர் ஆறுகள் கடலில் கலக்கும் இடம். உப்பனாறு, கெடிலம் ஆற்றின் முகத்துவாரத்தை தூர்வாராததால் தான் இங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இள.புகழேந்தி, எம்.எல்.ஏ.வாக இருந்த போது முகத்துவாரங்கள் தூர்வாரப்பட்டது. அதன்பிறகு தூர்வாரப்படவில்லை. அ.தி.மு.க. ஆட்சியின் அக்கறையின்மை. வெள்ளத்தில் மக்களை காப்பாற்ற, மக்களின் பிரச்சினைகளை கூட தீர்க்கவில்லை. பல பேரிடர்கள் ஒன்றன்பின் ஒன்றாக தாக்குதல் நடத்தியும், இந்த ஆட்சியில் நிரந்தர தீர்வு காண முயற்சி எடுக்கவில்லை.

    இங்கு வெள்ளம் வந்த போது முதலில் வந்து ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை மேற்கொண்டது தி.மு.க.வினர். அ.தி.மு.க. ஆட்சியில் என்ன செய்தார்கள், தொண்டு நிறுவனங்கள் கொண்டு வந்த வாகனங்களை பிடித்து அதில் ஸ்டிக்கர் ஒட்டினார்கள்.

    தமிழ்நாட்டில் எவ்வித வளர்ச்சியும் இல்லை. சட்டம்–ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. மின் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. 5 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தில் ஒரு யூனிட் மின்சாரம் கூட உற்பத்தி செய்யவில்லை. நிலக்கரி வாங்கியதில் ஊழல் நடந்துள்ளது. இவர்கள் செய்யும் ஊழலுக்கு மின்கட்டணம் மூலம் மக்கள் விலை கொடுக்க வேண்டியதிருக்கிறது.

    தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் முடக்கப்பட்டுள்ள மின்திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, கல்விக்கடன் ரத்து செய்யப்படும். மதுவிலக்கு கொண்டு வரப்படும். கடலூர் துறைமுகம் ஆழப்படுத்தி விரிவாக்கம் செய்யப்படும். சிப்காட் ரசாயன தொழிற்சாலைகளில் இருந்து வெளிவரும் கழிவுகள் சுத்திகரிக்கப்படும். கடலூரில் அரசு மருத்துவக்கல்லூரி செயல்படுத்தப்படும்.

    தி.மு.க. தலைவர் கருணாநிதி சொன்னதை செய்வார். கடந்த தி.மு.க. ஆட்சியில் முதல்–அமைச்சராக கருணாநிதி பொறுப்பேற்றதும் தேர்தல் அறிக்கையில் கூறியபடி, விவசாயிகளின் ரூ.7 ஆயிரம் கோடி வங்கிக்கடனை தள்ளுபடி செய்தார். ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் முதல்–அமைச்சர் மற்றும் அமைச்சர்களை பார்க்க முடியவில்லை.

    தமிழகத்தில் தொழிற்சாலைகள் மூடப்படுவதால் வேலையில்லாமல் இளைஞர்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் புவனகிரி வெள்ளாற்றில் தடுப்பணை கட்டப்படும். புவனகிரியில் உள்ள நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும். கரும்பு விவசாயிகளுக்கு நிலுவை தொகை வழங்கப்படும்.

    சிதம்பரம் நகரில் நடராஜர்கோவில் தேர் ஓடுவதற்கு சிமெண்ட் சாலை அமைக்கப்படும். சிதம்பரம் நகர மக்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்கப்படும். மழைக்காலங்களில் ஆற்றில் இருந்து வெளியேறும் முதலைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    அ.தி.மு.க. இன்னும் தேர்தல் அறிக்கையை வெளியிடவில்லை. தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையைப் பார்த்து, அதற்கு மாறாக முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெளியிட இருக்கும் பொய்யான தேர்தல் அறிக்கையை கண்டு மக்கள் ஏமாறாமல் தி.மு.க.விற்கு வாக்களியுங்கள்.

    இவ்வாறு கனிமொழி எம்.பி. பேசினார்.
    Next Story
    ×