என் மலர்
செய்திகள்

பணம் கொடுக்கும் கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டாம்: வைகோ வேண்டுகோள்
சிதம்பரம்:
சிதம்பரம் சட்டசபை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளரை ஆதரித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சிதம்பரத்தில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:–
டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று கூறி சசிபெருமாள் கடும் போராட்டம் நடத்தினார். அந்த போராட்டத்தில் அவர் இறந்தார். அவரது மரணத்துக்கு முதல்–அமைச்சரோ, அன்புமணி ராமதாசோ அனுதாபம் கூட வெளியிடவில்லை.
டாஸ்மாக் கடைகளை மூடினால்தான் மக்கள் நலமுடன் வாழ முடியும். தமிழகத்தில் மதுவை ஒழிக்கும் சக்தி எங்களிடம் மட்டுமே உள்ளது. பணம் கொடுக்கும் கட்சிக்கு வாக்களிக்காதீர்கள்.
மக்கள் ஆதரவு எங்களுக்கு உள்ளதால், நாங்கள் ஆட்சிக்கு வருவது உறுதி. விஜயகாந்த் முதல்–அமைச்சரானால், அவர் நல்லாட்சி தருவார். ம.தி.மு.க. நிர்வாகிகள் பூத் செலவுக்கு பணம் கேட்டால் என்னிடம் தகவல் சொல்லுங்கள். அவர்களை கட்சியை விட்டு நீக்கிவிடுகிறேன்.
ராணுவத்தில் பணிபுரியும் இஸ்லாமியர்கள் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை தொழுகைக்கு செல்வதற்காக விடுமுறை விட காரணமாக இருந்தவன் நான்தான்.
பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்றவுடன் அரசாங்க ஊழியர்களுக்கு ஆர்.எஸ்.எஸ். பயிற்சி அளிக்க வேண்டும் என்று கூறினார். இது குறித்து அவரிடம் நான் பேசி தடுத்தேன். இவையெல்லாம் வாக்குக்காக அல்ல.
அ.தி.மு.க., தி.மு.க. கட்சி கள் ஆகிய 2 கட்சிகளும் மது மற்றும் ஊழலால் தமிழ்நாட்டை பாழ்படுத்தி விட்டனர். இதை மாற்ற வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டது தான் விஜயகாந்த் தலைமையில் தே.மு.தி.க.–த.மா.கா. மக்கள் நல கூட்டணி.
சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பாக இருப்போம் என்பதை பற்றி எங்கள் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளோம். இதேபோல் அனைத்து தரப்பு மக்களுக்கும் பாதுகாப்பாக இருப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.






