என் மலர்
செய்திகள்

தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் இலவசங்களை வழங்கி மக்களை கையேந்த வைத்து விட்டனர்: பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சு
கந்தர்வக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை தொகுதியில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்றிரவு பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:–
50 ஆண்டுகளாக ஆட்சி செய்த திராவிட கட்சிகள் தமிழகத்தை சீர்குலைத்து விட்டது. தமிழகத்தில் மதுக் கடைகளை கொண்டு வந்ததே தி.மு.க. அரசுதான்.ஆனால் இப்போது மதுக்கடைகளை மூடுவோம் என்று பொய்யான வாக்குறுதிகளை அளித்து தமிழக மக்களை ஏமாற்றி வருகிறது. லாட்டரி சீட்டுகளை தமிழகத்திற்குள் கொண்டு வந்ததும் தி.மு. க.தான்.
பாலைவனப் பகுதியாக இருந்த குஜராத்தை பசுமையாக்கியவர் பிரதமர் நரேந்திரமோடி. நீர்வளத்தை பெருக்கி விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் திட்டங்களை அங்கு கொண்டு வந்தனர். ஆனால் தமிழகத்தில் அ.தி.மு.க., தி.மு.க. ஆட்சிகளில் எந்த ஒரு பெரிய அணையும் கட்டப்படவில்லை. இதனால் இன்று தமிழகம் பாலைவனமாக மாறி வருகிறது.
தி.மு.க., அ.தி.மு.க. இரண்டும் இலவசம் என்ற பெயரில் டி.வி.மிக்சி, கிரைண்டர் என்று வழங்கி தமிழக மக்களை கையேந்த வைத்து விட்டனர். திராவிட கட்சிகளின் தலைவர்களை யாரும் எளிதில் சந்தித்து பேச வாய்ப்பும் இல்லை. இந்த நிலை மாற பா.ஜனதாவை வெற்றி பெற செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.






