search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜி.கே.வாசனுடன் மக்கள் நல கூட்டணி தலைவர்கள் சந்திப்பு: கூட்டணியில் இணைவது உறுதி ஆனது
    X

    ஜி.கே.வாசனுடன் மக்கள் நல கூட்டணி தலைவர்கள் சந்திப்பு: கூட்டணியில் இணைவது உறுதி ஆனது

    மக்கள் நல கூட்டணி தலைவர்கள் இன்று பிற்பகல் வாசனை சந்தித்தனர். அப்போது கூட்டணி குறித்து இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையின் முடிவில் த.மா.கா., மக்கள் நல கூட்டணி-தே.மு.தி.க. அணியில் இணைவது உறுதியானது.
    சென்னை:

    தமிழக சட்டசபை தேர்தலில் 5 முனைப்போட்டி ஏற்பட்டுள்ள நிலையில் ஜி.கே.வாசன் தலைமையிலான த.மா.கா.வின் கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்ந்து இழுபறியாக இருந்தது. அ.தி.மு.க. கூட்டணியில் த.மா.கா. இடம்பெறும் என்று கடந்த சில மாதங்களாக எதிர்பார்க்கப்பட்டு வந்தது. ஆனால், இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என்று அ.தி.மு.க. தலைமை நிபந்தனை விதித்ததால் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

    இதேபோல் தி.மு.க., பா.ஜனதா, பா.ம.க. ஆகிய அணிகளிலும் இணைவதற்கான சாத்தியக்கூறுகள் இருந்தன. ஆனால், அதுவும் தடைபட்டது. எனவே, தே.மு.தி.க–மக்கள் நலக் கூட்டணியில் இணைவது தொடர்பான பேச்சுவார்த்தை தொடங்கியது. நேற்று மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் வைகோவுடன் த.மா.கா. தலைவர் வாசன் தொடர்பு கொண்டு பேசினார். தே.மு.தி.க. கூட்டணியில் சேர விரும்புவதாக வாசன் தெரிவித்தார். அப்போது அவர் த.மா.கா.வுக்கு 40 தொகுதிகள் வரை ஒதுக்கித்தர வேண்டும் என்ற கோரிக்கை விடுத்தார்.

    இதைத் தொடர்ந்து வைகோ உடனே விஜயகாந்தை சந்தித்து த.மா.கா.வும் கூட்டணிக்கு வர இருக்கும் தகவலை தெரிவித்தார். த.மா.கா.வுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கலாம்? அந்த தொகுதி பங்கீட்டை எப்படி மேற்கொள்வது என்று இருவரும் ஆலோசித்தனர்.

    இந்நிலையில் கூட்டணி குறித்து இறுதி செய்வதற்காக மக்கள் நல கூட்டணி தலைவர்கள் வைகோ, திருமாவளவன், ராமகிருஷ்ணன், முத்தரசன் ஆகியோர் இன்று பிற்பகல் வாசனை சந்தித்தனர். அப்போது கூட்டணி குறித்து இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் த.மா.கா., மக்கள் நல கூட்டணி-தே.மு.தி.க. அணியில் இணைவது உறுதியானது. இதையடுத்து 5 தலைவர்களும் விஜயகாந்தை சந்திப்பதற்காக புறப்பட்டனர். விஜயகாந்த்துடனான சந்திப்பில் கூட்டணி இறுதி செய்யப்பட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.

    Next Story
    ×