என் மலர்
செய்திகள்

உள்ளாட்சி தேர்தலை நடத்த மேலும் கால அவகாசம் கேட்க கூடாது: ஐகோர்ட்டு உத்தரவு
சென்னை:
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இரு கட்டங்களாக நடத்துவது தொடர்பான தேர்தல் அறிவிப்பை, சென்னை ஐகோர்ட்டு நீதிபதி கிருபாகரன் ரத்து செய்து உத்தரவிட்டார்.
அந்த உத்தரவில், ‘தமிழ் நாடு பஞ்சாயத்து சட்ட விதிகளை பின்பற்றி, புதிய தேர்தல் உத்தரவை பிறப்பித்து, டிசம்பர் 31-ந் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்’ என்று நீதிபதி கூறியிருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், தமிழ்நாடு மாநில தேர்தல் மேல்முறையீடு அரசும் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘உள்ளாட்சி தேர்தலை மே 14-ந் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும்’ என்று கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டனர்.
இந்த நிலையில், உள்ளாட்சி தேர்தலை மே 14-ந்தேதிக்குள் நடத்த முடியாது என்று சென்னை ஐகோர்ட்டில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் செயலாளர் ராஜசேகர் கூடுதல் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் 12 மாநகராட்சிகள், 124 நகராட்சிகள், 528 பேரூராட்சிகள், 388 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் 12 ஆயிரத்து 528 ஊராட்சிகளுக்கு உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும். கடந்த ஜனவரி மாதம் வெளியான புதிய வாக்காளர் பட்டியல்படி, தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தேர்தலுக்காக புதிய வாக்காளர் பட்டியலை தயாரிக்க வேண்டியுள்ளது.
அதன்படி இந்திய தேர்தல் ஆணையத்திடம் இருந்து ஒவ்வொரு தொகுதி வாரியாக வாக்காளர் பட்டியலைப் பெற்று, அதை வார்டு வாரியாக வாக்காளர்களை சேர்ப்பதற்கும், நீக்குவதற்கும் உரிய பணிகளை மேற் கொண்டு வருகிறோம்.
இதன்படி மாநிலம் முழுவதும் உள்ள 5.92 கோடி வாக்காளர்கள் குறித்த பட்டியல் விவரம் தேசிய தகவல் மையத்திடம் ஒப்படைக்கப்பட்டு, அதில் ஆன்லைன் மூலமாக பல்வேறு திருத்தங்கள் மேற் கொள்ளப்படுகிறது. இதற்காக தேசிய தகவல் மையத்தின் சர்வர்கள், உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைக்கப்பட்டு, அதை எப்படி கையாள்வது என்பது குறித்து உள்ளாட்சி தேர்தல் அதிகாரிகளுக்கு உரிய பயிற்சி அளிக்க வேண்டியுள்ளது.
ஏற்கனவே உள்ள சட்டப் பேரவை தொகுதி வாரியான வாக்காளர் பட்டியலையும், புதிதாக தயாரிக்கப்படும் உள்ளாட்சி வாக்காளர் பட்டியலையும் ஒப்பிட்டுப் பார்த்து, அதன்பிறகு வாக்கு சாவடி மையங்களையும், வாக்காளர் பட்டியலையும் இறுதி செய்ய மொத்தம் 95 நாட்கள் தேவைப்படுகிறது. இதில் ஏற்கனவே, 41 நாட்கள் பல்வேறு பணிகளை முடித்து விட்டோம். இன்னும் 54 நாட்களில் மீதமுள்ள பணிகள் முடிக்கப்படும்.
உள்ளாட்சி தேர்தலை நடத்துவது தொடர்பாக நீதிபதி கிருபாகரன் பிறப்பித்த உத்தரவுப்படி, அனைத்து நடவடிக்கைகளையும் மாநில தேர்தல் ஆணையம் எடுத்து வருகிறது. ஆனால், மே 14-ந்தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று இந்த ஐகோர்ட்டு உத்தர விட்டுள்ளது. மே 14-ந்தேதிக்குள் தேர்தல் நடத்துவது என்பது சாத்தியமில்லை. எனவே உள்ளாட்சி தேர்தலை வருகிற ஜூலை மாதம் இறுதிக்குள் நடத்தி முடிக்கும் விதமாக, கால அவகாசத்தை வழங்கவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதிகள் நூட்டி ராமமோகனராவ், சுப்பிரமணியம் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தி.மு.க. தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் வில்சன், ‘உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று எண்ணம் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்துக்கு இல்லை. ஐகோர்ட்டில் மேல் மனு போட்டு தேர்தலை நடத்தாமல் இழுத்தடிக்கின்றனர். தற்போது ஜூலை மாதத்துக்குள் தேர்தலை நடத்தி முடிக்க கால அவகாசம் வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தற்போது தான் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பதவி நிரப்பப்பட்டுள்ளது. அந்த புதிய ஆணையர், இதற்கு மேலும் தேர்தல் நடத்த கால அவகாசம் கேட்க மாட்டேன் என்று பிரமாண மனுவை தாக்கல் செய்யவேண்டும் என்று இந்த ஐகோர்ட்டு உத்தரவிட வேண்டும். இல்லையென்றால், தேர்தலை நடத்தாமல் மேலும் மேலும் கால அவகாசம் கேட்பார்கள்’ என்று வாதிட்டார்.
இவரது வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், ‘தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர், ஜூலை மாதத்துக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்கப்படும் என்றும் இதற்கு மேல் தேர்தலை நடத்த கால அவகாசம் கேட்கப்படாது என்றும் பிரமாண மனுவை தாக்கல் செய்யவேண்டும். இந்த வழக்கு விசாரணையை வருகிற திங்கட்கிழமைக்கு தள்ளிவைத்து உத்தரவிடுகிறோம்’ என்று உத்தரவிட்டனர்.