என் மலர்

  செய்திகள்

  தி.மு.க. கூட்டணியில் திருமாவளவன் - இந்திய கம்யூ. இணைய வாய்ப்பு
  X

  தி.மு.க. கூட்டணியில் திருமாவளவன் - இந்திய கம்யூ. இணைய வாய்ப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாக விடுதலை சிறுத்தையும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியும் தி.மு.க. அணியில் இணைய வாய்ப்பு உள்ளது. அதற்கான அச்சாரம் தான் அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்பதற்கான முடிவும் என்றும் கருதப்படுகிறது.
  சென்னை:

  தமிழக விவசாயிகள் டெல்லியில் ஒரு மாதத்துக்கு மேலாக போராடி வரும் நிலையில் அவர்களை சந்திக்க பிரதமர் மோடி ஆர்வம் காட்டவில்லை.

  விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்க்க முன் வராத மத்திய-மாநில அரசுகளை கண்டிக்கும் வகையில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளார்.

  சென்னையில் நாளை (16-ந் தேதி) நடக்கும் இந்த கூட்டத்தில் பங்கேற்க அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. தவிர மற்ற கட்சிகளுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.

  மு.க.ஸ்டாலின் அழைப்பை மக்கள் நலக்கூட்டியக்க தலைவர்கள் தொல்.திருமாவளவன், இரா.முத்தரசன் ஆகியோர் வரவேற்று அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்பதாக அறிவித்துள்ளனர்.

  இது ஆட்சி மாற்றத்திற்கான கூட்டமல்ல, விவசாயிகள் நலனுக்காக ஒன்று சேருகிற கூட்டம் என்று மு.க.ஸ்டாலின் தெளிவாக அறிவித்துள்ள நிலையில் விடுதலை சிறுத்தைகளும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியும் இதில் பங்கேற்கும் என்று கூறியுள்ளனர்.

  தி.மு.க.வின் கூட்டணி கட்சிகள் இக்கூட்டத்தில் கலந்து கொள்வதில் வியப்பேதும் இல்லை. ஆனால் கடந்த சட்டசபை மற்றும் பாராளுமன்ற தேர்தல்களை எதிர் அணியில் இருந்து சந்தித்த திருமாவளவன், இரா.முத்தரசன் ஆகியோர் இதற்கு ஆதரவு அளித்திருப்பது அரசியல் நோக்கர்களின் பார்வையில் ஒரு மாறுபட்ட கருத்தாகவே தெரிகிறது.

  2006 முதல் 2011 வரை தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்த விடுதலை சிறுத்தை பல்வேறு சம்பவங்களின் போது நடந்த மனக்கசப்பின் காரணமாக அக்கூட்டணியில் இருந்து வெளியேறியது. ஆனாலும் தி.மு.க. தலைவர் கருணாநிதி, மு.க. ஸ்டாலின் ஆகியோரின் பிறந்த நாள்களில் அரசியல் மாண்பை மதிக்கும் வகையில் திருமாவளவன் நேரில் சென்று வாழ்த்து கூறுவது உண்டு.

  கடந்த ஆண்டு டெல்டா விவசாயிகள் பிரச்சினைக்காக தி.மு.க. கூட்டிய அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று மக்கள் நலக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக இருந்த வைகோவின் கருத்தை கேட்காமலேயே திருமாவளவன் பங்கேற்போம் என்று அறிவித்தார்.

  மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராம கிருஷ்ணனும் அவரது கருத்தை ஏற்று 2 பேரும் அந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

  வைகோ, ஜி.ராம கிருஷ்ணன், திருமாவளவன், இரா.முத்தரசன் ஆகியோர் மக்கள் நலக்கூட்டணி அமைத்து கடந்த சட்டசபை தேர்தலை சந்தித்து பெரும் தோல்வியை தழுவினர்.

  மக்கள் நலக்கூட்டணியில் திருமாவளவன் இருந்தாலும் தி.மு.க. நடத்தும் போராட்டங்களுக்கு ஆதரவு அளித்து தனது சார்பில் பிரதிநிதிகளை அனுப்பி வைத்து தனது பங்களிப்பை நிறைவு செய்துள்ளார்.

  தி.மு.க.வுக்கு திருமாவளவன் அவ்வப்போது எதிர்பாராத வகையில் திடீரென ஆதரவு கருத்துக்களை கூறி வந்ததால் மக்கள் நலக்கூட்டணிக்குள் குழப்பம் ஏற்பட்டு விரிசலையும் ஏற்படுத்தியது.

  இது பல்வேறு சந்தர்ப்பங்களில் வைகோ - திருமாவளவன் இடையே மனக்கசப்பையும் உண்டாக்கியது.

  ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் கூட தி.மு.க.வுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்று திருமாவளவனும், முத்தரசனும் வலியுறுத்தினார்கள். ஆனால் ஜி.ராமகிருஷ்ணன் போட்டியிட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்ததால் அவர்கள் இருவரும் இடைத்தேர்தலை புறக்கணிக்கும் சூழல் ஏற்பட்டது.

  தி.மு.க. அணிக்கு மாறும் வகையில் திருமாவளவனின் அரசியல் நகர்வு தொடர்ந்து அமைந்துள்ளது. அது போலவே முத்தரசனும் தி.மு.க.வுடன் இணைந்து செயல்படுவதற்கான காய்களை நகர்த்தி வருகிறார்.

  உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாக விடுதலை சிறுத்தையும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியும் தி.மு.க. அணியில் இணைய வாய்ப்பு உள்ளது. அதற்கான அச்சாரம் தான் அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்பதற்கான முடிவும் என்றும் கருதப்படுகிறது.

  தி.மு.க. கூட்டணியில் தற்போது காங்கிரஸ் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட சில கட்சிகள் உள்ளன. அந்த வகையில் விடுதலை சிறுத்தையும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியும் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  Next Story
  ×