search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கவர்னரை சந்திக்க துரைமுருகன், ஆர்.எஸ்.பாரதி மும்பை பயணம்
    X

    கவர்னரை சந்திக்க துரைமுருகன், ஆர்.எஸ்.பாரதி மும்பை பயணம்

    ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடைபெற்ற பணப்பட்டுவாடா குறித்தும், முறைகேட்டில் ஈடுபட்டதாக முதல்-அமைச்சர், அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கவர்னரிடம் புகார் மனு கொடுக்க இருப்பதாக ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.
    சென்னை:

    ஆர்.கே.நகர் தேர்தலில் பணப்பட்டுவாடா நடந்ததாக கூறி நாளை (12-ந்தேதி) நடைபெற இருந்த தேர்தலை, தேர்தல் ஆணையம் ரத்து செய்து விட்டது.

    தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு தி.மு.க. உள்பட பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

    இதையொட்டி தமிழக கவர்னர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவை சந்தித்து புகார் மனு கொடுக்க தி.மு.க. செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேரம் ஒதுக்கி தருமாறு கேட்டிருந்தார்.

    ஆனால் கவர்னர் 17-ந் தேதிதான் சென்னை வருவதாக தெரிவிக்கப்பட்டது.

    இதனால் மும்பை சென்று கவர்னரை சந்தித்து புகார் மனு கொடுக்க தி.மு.க. முடிவு செய்தது.

    இதையொட்டி தி.மு.க. முதன்மைச் செயலாளர் துரைமுருகன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, திருச்சி சிவா ஆகியோர் இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் மும்பை புறப்பட்டு சென்றுள்ளனர்.

    நாளை காலை 11 மணிக்கு இவர்கள் 3 பேரும் கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து புகார் மனு கொடுக்க உள்ளனர்.

    ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடைபெற்ற பணப்பட்டுவாடா குறித்தும், முறைகேட்டில் ஈடுபட்டதாக முதல்-அமைச்சர், அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் மனுவில் தெரிவிக்க இருப்பதாக ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.

    இந்த சந்திப்பின் போது டெல்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகள் பிரச்சினை பற்றியும் பேச இருப்பதாக ஆர்.எஸ்.பாரதி கூறினார்.

    Next Story
    ×