என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆர்.கே.நகர் தேர்தலில் டி.டி.வி.தினகரனுக்கு கடைசி இடம்தான் கிடைக்கும்: மு.க.ஸ்டாலின்
    X

    ஆர்.கே.நகர் தேர்தலில் டி.டி.வி.தினகரனுக்கு கடைசி இடம்தான் கிடைக்கும்: மு.க.ஸ்டாலின்

    ஆர்.கே.நகர் தேர்தலில் டி.டி.வி.தினகரனுக்கு கடைசி இடம்தான் கிடைக்கும் என தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
    சென்னை:

    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை திருச்சி செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

    கேள்வி:- தேர்தல் ஆணையத்திடம் தி.மு.க. தொடர்ந்து தெரிவித்து வரும் புகார்கள் மீது நடவடிக்கை எடுத்திருப்பதாக நீங்கள் கருதுகிறீர்களா?

    பதில்:- ஏற்கனவே, சென்னை போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜை மாற்ற வேண்டும் என்று தெரிவித்திருந்தோம். கடந்த தேர்தலிலேயே அவர் மீது பல புகார்கள், பிரச்சினைகள் வந்தன.

    அதேமாதிரி இங்கே ரிட்டர்னிங் ஆபீசர் நியமிப்பதிலும் தவறு நடந்திருக்கிறது என ஆதாரங்களோடு, சில செய்திகளை தேர்தல் ஆணையத்திடம் புகாராகக் கொடுத்திருந்தோம். அந்தப் புகாரின் அடிப்படையில் இருந்த நியாயத்தை உணர்ந்து நடவடிக்கை எடுத்து அவர்களை மாற்றி இருக்கிறார்கள்.

    இப்பொழுது தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்க கூடிய நேரத்தில், இங்கு இருக்கக்கூடிய சில ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள், ஆளுங் கட்சியைச் சார்ந்த அமைச்சர்களின் துணையோடு, சில காவல்துறை அதிகாரிகள் தவறான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

    அதுகுறித்தும் சம்பத்தப்பட்ட அதிகாரிகளிடம் நேற்றைய தினம் நாங்கள் புகார் அளித்திருக்கிறோம். அதேபோல, தொடர்ந்து இதை நாங்கள் கண் காணித்துக் கொண்டு விழிப்போடு இருந்து அந்த பணிகளை நிறைவேற்றிக் கொண்டு இருக்கிறோம்.

    கே:- நீங்கள் தி.மு.க. செயல் தலைவராக பொறுப்பேற்ற பின் சந்திக்கும் இந்த முதல் இடைத் தேர்தல் எவ்வளவு முக்கியமானது என்று நினைக்கிறீர்கள்?

    ப:- நீங்கள் எப்படி நினைக்கிறீர்களோ அப்படி நினைக்கிறேன்.

    கே:- தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் எப்படி இருக்கிறது? ஆர்.கே.நகரில் தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பு குறித்தும், பணப்பட்டுவாடா மீதான அவர்களின் நடவடிக்கை குறித்தும் என்ன நினைக்கிறீர்கள்?

    ப:- தேர்தல் ஆணையத்தை பொறுத்தவரை நியாயமாக நடப்பதாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நாங்களும் நியாயமாக நடப்பார்கள் என்றுதான் நம்பிக்கொண்டு இருக்கிறோம்.

    கே:- தினகரனுக்கு வரிசையின் இரண்டாவது இடத்தில் சின்னம் கொடுத்துள்ளார்கள். அதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

    ப:- சின்னம் இருப்பது முதலிடமோ இரண்டாம் இடமோ, ஆனால் தேர்தலில் அவர் வரப்போவது கடைசி இடம்.

    கே:- விவசாயிகள் தொடர்ந்து டெல்லியில் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக சென்னையில் மாணவர்கள் போராட்டம் நடத்தினால் தடை விதிக்கப்படுகிறது. இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

    ப:- ஏற்கனவே விவசாயப் பெருங்குடி மக்கள் தமிழகத்திலே போராடி, போராடி அதைப்பற்றி இந்த அரசு கவலைப்படாத காரணத்தால் நேரடியாக இந்தியாவின் தலைநகரமாக இருக்கக்கூடிய டெல்லி மாநகரத்துக்கு சென்று மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கக்கூடிய வகையில் தொடர்ந்து இரண்டு வார காலத்திற்கும் மேலாக போராடிக் கொண்டிருக்கிறார்கள்.



    இதுவரை மத்திய அரசு கொஞ்சம் கூட கவலைப்படாத நிலையில்தான் இருந்து கொண்டிருக்கிறது. தி.மு.க.வை சார்ந்திருக்கக்கூடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து அவர்களைப் போய் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் சொல்வது மட்டுமல்ல, நேற்றைய தினம் எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர் சிவா அந்த விவசாயப் பெருங்குடி மக்களின் நிர்வாகிகளை அழைத்துக் கொண்டுச் சென்று, நிதியமைச்சர் அருண்ஜெட்லியை நேரடியாக சந்தித்து பிரச்சினைகளை எடுத்துச் சொல்லியிருக்கிறார்.

    ஆனால், மாநிலத்தில் இருக்கக்கூடிய முதல்- அமைச்சரோ இதுவரை போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிற அந்த விவசாயப் பெருங்குடி மக்களை நேரடியாக சென்று சந்திக்கவில்லை என்பது தான் வேதனைப்பட வேண்டிய ஒன்றாக இருக்கிறது.

    தற்கொலை செய்து கொண்டிருக்கக் கூடிய விவசாயப் பெருங்குடி மக்களுக்கு நிவாரண நிதியைக் கூட வழங்க முடியாத நிலையிலேதான் இன்றைக்கு இந்த அரசு இருந்து கொண்டிருக்கிறது.

    ஆக, பினாமி அரசாக இருக்கக்கூடிய இந்த அரசைப் பொறுத்தவரையில் ஆர்.கே.நகர் தொகுதியில் நடக்கக்கூடிய இடைத் தேர்தலில் எப்படியாவது தில்லுமுல்லு செய்து வெற்றிபெற முடியுமா என்பதற்கு திட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார்களே தவிர, மக்கள் படக்கூடிய வேதனைகளை, குறிப்பாக விவசாயப் பெருங்குடி மக்கள் படக்கூடிய வேதனைகளைப் பற்றி அவர்கள் கிஞ்சிற்றும் கவலைப்படவில்லை என்பது கண்டனத்திற்குரியது.

    கே:- ஹைட்ரோ கார்பன் திட்டம் வராது என்று தொடர்ந்து தமிழக அரசின் சார்பில் கூறி வந்தாலும், மத்திய அரசு ஒப்பந்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால், தமிழக அரசோ மவுனம் காத்து வருகிறதே?

    ப:- இந்தப் பிரச்சினை குறித்து கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டபோது நான் தெளிவாகவே இதுகுறித்து பேசியிருக்கிறேன். அப்போது முதல-அமைச்சரும், அந்தத் துறை சம்பத்தப்பட்ட அமைச்சரும் எழுந்து எனக்கு என்ன பதில் சொன்னார்கள் என்றால், நிச்சயமாக உறுதியாக இதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று ஒரு வாக்குறுதியை தந்தார்கள்.

    அப்போது கூட நான் கேட்டேன், எப்படி ஜல்லிக்கட்டு பிரச்சினைக்கு இந்த சட்டமன்றத்தில் ஏகமனதாக ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதோ, அதுபோல சிறப்பு தீர்மானம் ஒன்றை சட்டமன்றத்தில் நிறைவேற்றி அதை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று நான் கோரிக்கை வைத்தேன். அதற்கு எந்தவித பதிலும் சொல்லாமல் மவுனமாக இருந்து விட்டார்கள்.

    இதிலிருந்து என்ன தெரிகிறது என்று சொன்னால், எப்படி மத்திய அரசில் இருக்கக்கூடிய அமைச்சர் பெருமக்கள் எந்த காரணத்தைக் கொண்டு திட்டம் வராது, வராது, வராது, வராது என்று தொடர்ந்து அவர்கள் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

    ஆனால், இப்போது இரண்டு நாட்களுக்கு முன்னர் தனியார் நிறுவனங்களோடு மத்திய அரசு ஒப்பந்தம் கையெழுத்து போட்டிருக்கிறது என்ற செய்தியை பார்க்கிறபோது அதிர்ச்சியாக இருக்கிறது. எனவே மத்திய அரசு இரட்டை வேடம் போட்டுக் கொண்டிருக்கிறது. அதற்கு இங்கே இருக்கக்கூடிய மாநில அரசு துணை போய்க்கொண்டு இருக்கிறது என்பதுதான் உண்மை.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×