search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தனிக்கட்சி தொடங்கியதால் கடும் அதிர்ச்சி: கணவர் மீது தீபா பாய்ச்சல்
    X

    தனிக்கட்சி தொடங்கியதால் கடும் அதிர்ச்சி: கணவர் மீது தீபா பாய்ச்சல்

    பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தனிக்கட்சி தொடங்கிய கணவர் மாதவனின் திடீர் முடிவுக்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அதிருப்தி தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளராகவும், முதல்- அமைச்சராகவும் இருந்த ஜெயலலிதாவின் திடீர் மரணம் தமிழக அரசியல் களத்தில் அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கிறது.

    ஜெயலலிதாவின் மரணத்தை தொடர்ந்து அவரது அண்ணன் மகள் தீபா அரசியலில் குதித்தார். அ.தி.மு.க.வில் ஒரு பிரிவினர் தினமும் தி.நகரில் உள்ள தீபாவின் வீட்டு முன்பு திரண்டு அரசியலுக்கு வரவேண்டும் என்று தொடர்ந்து விடுத்த அழைப்பை ஏற்ற தீபா அரசியல் களத்தில் அடி எடுத்து வைத்தார்.

    இப்படி தீபாவை தேடி தினமும் வீட்டுக்கு வந்த அ.தி.மு.க. தொண்டர்களை அவரது கணவர் மாதவனே சந்தித்து ஆலோசனைகளை கேட்டு வந்தார்.

    தமிழகம் முழுவதிலும் இருந்து திரண்டு வந்த அ.தி.மு.க. தொண்டர்கள், தீபா அரசியலுக்கு வந்தால் நிச்சயமாக வெற்றி பெறுவார் என்று மாதவனிடம் கூறி வந்தனர்.

    இதுதொடர்பாக தீபாவுடன் மாதவன் நீண்ட நாட்களாக ஆலோசனையும் நடத்தினார். அதன் பின்னரே தீபாவின் அரசியல் பயணம் தொடங்கியது.

    ஜெயலலிதா பிறந்த நாளான பிப்ரவரி 24-ந்தேதி அன்று “எம்.ஜி.ஆர். -அம்மா -தீபா பேரவை” என்ற பெயரில் தனி அமைப்பை தீபா தொடங்கினார்.

    ஜெயலலிதா 2 முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அவர் போட்டியிடுகிறார். இது தொடர்பாக தீபாவின் கணவர் மாதவன் ஆர்.கே.நகர் தொகுதிக்கு சென்று மக்களை சந்தித்து பேசினார்.

    அதன்பின்னர் நேற்று முன்தினம் ஆர்.கே.நகரில் நடந்த கூட்டத்தில் தீபா கலந்து கொண்டார். இதில் மாதவனும் பங்கேற்றார்.

    ஜெயலலிதாவின் மீது ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் வைத்திருக்கும் பாசம் தீபாவை வெற்றி பெற வைக்கும் என்று அவரது ஆதரவாளர்கள் கூறி வந்தனர்.


    இந்நிலையில் தீபாவின் கணவர் மாதவன், திடீரென தீபாவின் அமைப்பில் இருந்து அதிரடியாக விலகியுள்ளார். நேற்று இரவு மெரீனாவில் உள்ள ஜெயலலிதா சமாதிக்கு சென்று வணங்கிய அவர் யாரும் எதிர்பார்க்காத வகையில் தனிக்கட்சி தொடங்கப்போவதாக அறிவித்தார். தீபா தொடங்கியிருப்பது அமைப்பு, நான் தொடங்க இருப்பது கட்சி என்று விளக்கம் அளித்த மாதவன், தீபா பேரவையில் தீய சக்திகள் புகுந்து விட்டதாகவும் கடுமையான குற்றச் சாட்டுகளை கூறினார்.

    இது அரசியல் களத்தில் புதிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

    கணவர் மாதவனின் தனிக்கட்சி அறிவிப்பால் தீபா கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார். தீபா பேரவையை தொடங்கியபோது அவரது கணவர் மாதவன் தீபாவின் அரசியல் பயணத்திற்கு நான் எப்போதும் உறுதுணையாக இருப்பேன் என்று தொடர்ந்து கூறி வந்தார். கணவர் தன்னுடன் இருந்து வழிநடத்தியதை தீபாவும் பெரும்பலமாகவே கருதினார். தீபா பேரவை நிர்வாகிகளுடன் மாதவனே தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு வந்தார்.

    அவர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை தீபாவிடம் தெளிவாக எடுத்துரைப்பதிலும் மாதவன் முக்கிய பங்காற்றினார். இப்படி தீபாவுக்கும் கட்சி நிர்வாகிகளுக்கும் இடையே பாலமாகவே மாதவன் விளங்கினார். இதுபோன்ற சூழலில் கணவர் மாதவனின் திடீர் முடிவு தீபாவை நிலை குலைய செய்து உள்ளது.

    இதனால் அரசியல் களத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை எப்படி எதிர் கொள்வது என்பது பற்றி தீபா தீவிர ஆலோசனையிலும் ஈடுபட்டுள்ளார்.


    நேற்று இரவு மாதவன் தனிக்கட்சி அறிவிப்பு வெளியிட்ட பின்னர் இரவு 9.30 மணியளவில் தீபா பேரவை நிர்வாகிகளுடன் தீபா தனது வீட்டில் வைத்து ஆலோசனை நடத்தினார்.

    ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக 9 பேர் கொண்ட பணிக்குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது. அக்குழுவினருடனும் தீபா ஆலோசனை நடத்தினார்.

    அப்போது அவர்கள் மத்தியில் பேசிய தீபா கணவர் மாதவனின் நடவடிக்கைகளை யாரும் கண்டுகொள்ள வேண்டாம். ஆர்.கே.நகரில் வெற்றி பெற போவது மட்டுமே நமது குறிக்கோளாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    ஆர்.கே.நகர் தொகுதியில் இளம் வாக்காளர்கள் அதிக அளவில் உள்ளனர். அவர்களது வாக்குகளை பெறும் வகையில் நீங்கள் செயல்பட வேண்டும் என்றும் தீபா நிர்வாகிகளிடம் அறிவுறுத்தினார்.

    ஓ.பி.எஸ். தனி அணியாக செயல்படத் தொடங்கிய போது தீபாவும், அவருடன் கைகோர்த்து செயல்பட போவதாக அறிவித்தார். ஆனால் தனது முடிவில் இருந்து பின்வாங்கி அவர் தனி அமைப்பை தொடங்கினார். இதனை அவரது ஆதரவாளர்கள் பலர் ஏற்றுக்கொள்ளாமல் விலகி சென்று தங்களை ஓ.பி.எஸ். அணியில் இணைத்துக் கொண்டனர்.

    இது தீபாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் கணவர் மாதவனும் தீபா பேரவையில் இருந்து விலகி இருப்பது தீபாவின் அரசியல் பயணத்தில் சறுக்கலையும், மேலும் பின்னடைவையும் ஏற்படுத்தி இருக்கிறது.
    Next Story
    ×