search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேள்வி கேட்கும் பொதுமக்கள்
    X
    கேள்வி கேட்கும் பொதுமக்கள்

    ஆர்.கே.நகரில் போட்டியிடும் இளைஞர் கட்சி வேட்பாளரை பொதுமக்களே தேர்வு செய்தனர்

    இளைஞர்களின் என்தேசம் என் உரிமை கட்சியின் சார்பில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை பொதுமக்களே தேர்வு செய்தனர்.
    சென்னை:

    ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஜல்லிக்கட்டு இளைஞர்களின் என்தேசம் என் உரிமை கட்சி போட்டியிடுகிறது.

    இந்த கட்சியின் வேட்பாளர் பொதுமக்கள் முன்னிலையில் தேர்வு செய்யப்படுவார் என்று கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்து இருந்தனர்.

    கவுன்சிலர் பதவிக்கு 25 முதல் 35 வயது, எம்.எல்.ஏ. தேர்தலுக்கு 25 முதல் 55 வயது, எம்.பி. தேர்தலுக்கு 35 வயது முதல் 60 வயது என்று வரம்பு நிர்ணயித்துள்ளார்கள்.

    அதன்படி 55 வயதுக்குட்பட்ட தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் இளைஞர் கட்சியில் மனு கொடுத்து இருந்தனர்.

    அவர்களை தேர்வு செய்யும் பணி தண்டையார்பேட்டையில் இன்று நடந்தது. இதற்காக அப்பல்லோ ஆஸ்பத்திரி எதிரில் உள்ள மண்டபத்தில் ஏற்பாடு செய்து இருந்தார்கள்.

    வேட்பாளரை தேர்வு செய்ய பொதுமக்கள் தரப்பில் 10 பேர் கொண்ட குழு தேர்வு செய்யப்பட்டிருந்தது. அதில் ஒரு ஐ.டி. ஊழியர், மாணவர், இளைஞர், திருநங்கை, குடும்பத் தலைவி, மீனவர், ஆட்டோடிரைவர், இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

    இந்த குழுவினர் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து இருந்தவர்களிடம் 10 கேள்விகள் கேட்டனர். அந்த கேள்விகள் வருமாறு:-

    * தேர்தலில் போட்டியிட ஏன் விரும்புகிறீர்கள்?

    * மற்ற அரசியல் கட்சிகளில் இருந்து நீங்கள் எப்படி வேறுபடுவீர்கள்?

    * இந்த தொகுதியின் முக்கிய பிரச்சனைகள் என்னென்ன?

    * குடிநீர் பிரச்சனைக்கு எப்படி தீர்வு காண்பீர்கள்?

    * நீங்கள் எம்.எல்.ஏ.வானால் எந்தவிதமான மாற்றங்களை கொண்டு வருவீர்கள்?

    * இளைஞர்களின் வேலை வாய்ப்புக்கு ஏதாவது திட்டம் வைத்துள்ளீர்களா?

    * வெற்றி பெற்ற பிறகு அரசு ஒத்துழைக்க மறுத்தால் எப்படி போராடுவீர்கள்?

    * எங்களை எப்போது சந்திப்பீர்கள்? சுலபமாக தொடர்பு கொள்ள வழி என்ன?

    * எங்களில் ஒருவராக எப்படி இருப்பீர்கள்? விளக்குங்கள்!

    ஒவ்வொரு கேள்விக்கும் 10 மதிப்பெண் வீதம் வழங்கப்படுகிறது. மாலை வரை தேர்வு நடைபெறுகிறது. 100 மார்க்கில் யார் அதிகம் மார்க் வாங்கினார்களோ அவர்களில் முதல் 5 பேர் தேர்வு செய்யப்படுவார்கள்.

    தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து வந்திருந்தவர்களில் சிலர்.

    அவர்களில் வழக்குகள் எதிலும் சம்பந்தப்படாதவர் தேர்வு செய்யப்படுவார். வேட்பாளராக தேர்வு செய்யப்படுவரிடம் ‘நான் வெற்றி பெற்றால் மாதம் ஒருமுறை மக்களை தவறாமல் சந்திப்பேன். லஞ்சம், ஊழல் எதிலும் ஈடுபடமாட்டேன். இதில் இருந்து தவறினால் எனது பதவியை ராஜினாமா செய்கிறேன்’ என்று ராஜினாமா கடிதத்திலும் கையெழுத்து வாங்கி கொள்கிறார்கள்.

    வேட்பாளர் தேர்வை கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் எபிநேசர், கார்த்திக், பிரசாத், ஜெயப்பிரகாஷ், சீனிவாசன், கார்த்திகேயன் ஆகியோர் மேற்பார்வையிட்டனர்.
    Next Story
    ×