search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆர்.கே.நகர் தொகுதியில் தீபா இன்று பிரசாரம்
    X

    ஆர்.கே.நகர் தொகுதியில் தீபா இன்று பிரசாரம்

    ஜெயலலிதாவின் வாரிசாக அரசியலில் குதித்துள்ள தீபா, ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தலில் முதல் முறையாக போட்டியிடுகிறார். இன்று அவர் தனது பிரசாரத்தை தொடங்குகிறார்.
    சென்னை:

    ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.

    அ.தி.மு.க. சார்பில் டி.டி.வி.தினகரன், போட்டியிடுகிறார். தி.மு.க. வேட்பாளராக பத்திரிகையாளரான ‘‘வக்கீல் மருது கணேஷ், நிறுத்தப்பட்டுள்ளார். எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை சார்பில் தீபா களமிறங்குகிறார்.



    ஜெயலலிதாவின் மரணத்துக்கு பிறகு அ.தி.மு.க. 3 ஆக பிளவுபட்டுள்ளது. சசிகலா தலைமையில் ஒரு அணியும், ஓ.பி.எஸ். தலைமையில் இன்னொரு அணியும் செயல்பட்டு வருகிறது. அ.தி.மு.க.வில் ஒரு பிரிவினரை ஒருங்கிணைத்தே தீபாவும் தனி அமைப்பை தொடங்கி இருக்கிறார்.

    இதனால் ஆர்.கே.நகர் தொகுதியில் அ.தி.மு.க. 3 அணியாக பிரிந்து களம் காண்கிறது.



    ஜெயலலிதாவின் வாரிசாக அரசியலில் குதித்துள்ள தீபா, ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தலில் முதல் முறையாக போட்டியிடுகிறார். இன்று அவர் தனது பிரசாரத்தை தொடங்குகிறார்.

    இன்று மாலையில் வண்ணாரப்பேட்டையில் நடக்கும் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் தீபா கலந்து கொள்கிறார். இதில் அவரது ஆதரவாளர்கள் பங்கேற்கிறார்கள். அப்போது ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை எதிர்கொள்வது எப்படி? என்பது பற்றி ஆலோசிக்கப்படுகிறது. பின்னர் ஆதரவாளர்கள் மத்தியில் தீபா உரையாற்றுகிறார்.

    ஜெயலலிதாவின் அண்ணன் மகள் என்ற முறையில், ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆர்.கே.நகர் தொகுதியில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கி இருக்கிறார் தீபா. ஜெயலலிதா மீது ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் வைத்திருக்கும் பாசம் நிச்சயம் ஓட்டுகளாக மாறும் என்று தீபா கணக்கு போட்டுள்ளார். இது தொடர்பாக வீதி வீதியாக சென்று வாக்காளர்களை சந்திக்க அவர் திட்டமிட்டுள்ளார்.

    இந்த பிரசாரத்தின் போது அ.தி.மு.க. தொண்டர்களின் ஓட்டுகளை குறிவைக்க தீபா முடிவு செய்துள்ளார். ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாகவும், சசிகலா குடும்பத்தின் பிடியில் அ.தி.மு.க. சிக்கி இருப்பது பற்றியும் தனது பிரசாரத்தின் போது தீபா விரிவாக விளக்கி பேசுகிறார்.

    தீபாவின் இந்த வியூகம் அவரை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லும் என்று அவரது ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அ.தி.மு.க.வில் சசிகலா அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி, ஆகிய இரண்டு அணிகளும் பலமாக மோதுகின்றன. தி.மு.க.வும் கடும் போட்டியை ஏற்படுத்தும். இந்த போட்டிகளை தீபா எப்படி சமாளிக்கப்போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    Next Story
    ×