search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுவது பற்றி நாளை முடிவு: ஜி.கே.வாசன் தகவல்
    X

    ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுவது பற்றி நாளை முடிவு: ஜி.கே.வாசன் தகவல்

    ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுவது பற்றி நாளை முடிவு செய்யப்படும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தகவல் கூறியுள்ளார்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் உள்ள பிரச்சினைகளை தீர்க்கக் கோரியும், மீனவர் பிரச்சினை, நீட் தேர்வு ஆகியவற்றில் நடவடிக்கை எடுக்க கோரியும் த.மா.கா. சார்பில் இன்று வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்துக்கு கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக பல்வேறு திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதை நிறைவேற்றக் கோரி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் த.மா.கா. சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

    தமிழக மாணவர்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள். மீனவர்கள் நிம்மதியாக தொழில் செய்ய முடியவில்லை. குடிநீருக்காக அலைய வேண்டி உள்ளது. கடும் வறட்சி நிலவி வருகிறது. அதே நேரத்தில் மக்கள் விரும்பாத திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு முயற்சி செய்கிறது.

    தமிழ்நாட்டை பாலை வனமாக்க அண்டை மாநிலங்கள் தடுப்பு அணைகள் கட்டுகின்றன. இதை மத்திய அரசு தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழக அரசு மக்களின் நம்பிக்கை இழந்த அரசாக இருக்கிறது.


    சட்டசபையில் ஜனநாயகத்தை கேலிக்குரியதாக ஆக்கி விட்டனர். இந்த அரசுக்கு மக்கள் பிரச்சினையை கவனிக்க நேரமில்லை. கட்சி பிரச்சினை, சொந்த பிரச்சினைக்கே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

    அ.தி.மு.க., பா.ஜனதா அரசுகள் மக்களுக்கு எதிரான அரசாக செயல்பட்டு வருகின்றன. த.மா.கா. மக்களின் எண்ணங்களை பிரதி பலிக்கும் கட்சியாக செயல் பட்டு கொண்டிருக்கிறது.

    மக்கள் பிரச்சினைக்கு குரல் கொடுக்கும் முதல் கட்சியாக உள்ளது.

    ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுவது குறித்து நாளை நடைபெறும் மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆர்ப்பாட்டத்தில் மூத்த துணைத்தலைவர்கள் ஞானதேசிகன், கோவை தங்கம், சக்திவடிவேல், பொதுச்செயலாளர் ஞானசேகரன், மாவட்ட தலைவர்கள் கொட்டிவாக்கம் முருகன், சைதை மனோகரன், பிஜுசாக்கோ, அருண்குமார், அண்ணா நகர் ராம்குமார், கோபால கிருஷ்ணன், தி.நகர் கோதண்டன், தலைமை நிலைய செயலாளர்கள் டி.எம். பிரபாகர், ஜி.ஆர். வெங்கடேஷ், டி.என். அசோ கன், சீனிவாசன், அனுராதா அபி, சைதை நாகராஜன், ஜெ.ராகவன், கோவில் பாஸ்கர், கே.ஆர்.டி.ரமேஷ், துறைமுகம் செல்வகுமார், எல்.கே.வெங்கட், நரேஷ் குமார், மால்மருகன், மயிலை இரா.மணி, மந்தவெளி இராம.அருண், வி.எம்.அரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×