என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாட்ஸ்-அப்பில் என்னை சீண்டினால் பொறுத்து கொள்ள மாட்டேன்: கே.ஏ.செங்கோட்டையன் ஆவேசம்
    X

    வாட்ஸ்-அப்பில் என்னை சீண்டினால் பொறுத்து கொள்ள மாட்டேன்: கே.ஏ.செங்கோட்டையன் ஆவேசம்

    என்னைப் பற்றி வாட்ஸ் அப்பில் தவறான செய்திகளை பரப்பி வருகின்றனர். என்னை சீண்டினால் பொறுத்து கொள்ள மாட்டேன் என்று செங்கோட்டையன் பேசினார்.

    கோபி:

    கோபி பெரியார் திடலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத் திற்கு கூட்டுறவு சங்கத் தலைவர் காளியப்பன் தலைமை தாங்கினார். சிட்கோ வாரிய முன்னாள் தலைவர் சிந்து ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார்.

    இதில் கலந்து கொண்ட பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது:-

    நான் 1972-ம் ஆண்டு அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். துவக்கிய காலத்திலிருந்தே எதற்கும் மாறாமல் எனது வாழ்க்கையை அர்ப்பணித்து வாழ்ந்து வருகிறேன். நீங்கள் எனக்கு வாக்களித்து அங்கீகாரம் செய்ததால் தான் தற்போது பள்ளிகல்வித்துறை அமைச்சராக உங்கள் முன்னால் நின்று பேசிக் கொண்டிருக்கிறேன்.

    என்னைப் பற்றி வாட்ஸ் அப்பில் தவறான செய்திகளை பரப்பி வருகின்றனர். என்னை சீண்டாதீர்கள். நான் பாய்ந்தால், என்னவாகும் என்பது உங்களுக்குத் தெரியும். நான் அமைதியாக இருக்கிறேன்.

    முதல்வர் ஜெயலலிதா பலருக்கு எம்.பி., எம்.எல்.ஏ. மற்றும் கட்சியிலும் பல்வேறு பதவிகளை கொடுத்தார். ஆனால், அவர்கள் இன்றைய தினம் மாற்று அணிக்குச் சென்று அதிமுகவிற்கே துரோகம் செய்து விட்டார்கள். அவர்களைப் பற்றி பேசி நான் எனது தரத்தை தாழ்த்திக் கொள்ள விரும்ப வில்லை.

    பன்னீர்செல்வம் தி.மு.க. வோடு சேர்ந்து அ.தி.மு.க.வை அழிக்க திட்டமிட்டார். இதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை.


    மேலும், 2006-ம் ஆண்டு மு.க.அழகிரியோடு தொடர்பு வைத்திருந்ததை அறிந்து, பன்னீர்செல்வத்தின் கட்சி பொறுப்புகள், உறவினர்களுடைய பொறுப்புகளை ஜெயலலிதா பறித்தார்.

    முதல்வர் ஜெயலலிதா நன்றாக இருந்தபோது எனக்கும் அமைச்சர் பதவி வழங்குவதாக இருந்தது. ஆனால், எனக்கு எதிராக பலர் குளறுபடிகள் செய்தனர். அதை நான் சொல்ல விரும்பவில்லை. செங்கோட்டையனிடமிருந்து பதவியை பறித்துவிட்டேனே என ஜெயலலிதா வருத்தப்பட்டார். இதை நான் மூடிமறைக்கத் தேவையில்லை. எத்தனை சோதனைகள் வந்தாலும் அ.தி.மு.க.வை சரியான முறையில் வழிநடத்த நான் உறுதுணையாக இருப்பேன்.

    எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அவரே தனது சட்டையை கிழித்துக் கொண்டு மக்களிடம் அனுதாபம் தேடிக்கொள்ள முயல்கிறார். இது ஒருக் காலும் நடக்காது. சட்ட மன்றத்தில் தி.மு.க. ஆடிய ஆட்டம் பற்றி சொல்ல வேண்டுமா?

    தற்போதும் ஜெயலலிதாவின் ஆட்சிதான் நடக்கிறது. இன்னும் 4¼ ஆண்டு மட்டு மல்ல, தொடர்ந்து 100 ஆண்டுகள் தமிழகத்தை ஆளப்போவது அதிமுக தான். அனைத்து அமைச்சர்களும் மக்களுக்காக பாடுபடுவார்கள்,

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் நம்பியூர் ஒன்றிய செயலாளர் தம்பி சுப்பிரமணியம், மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. க்கள், அதிமுக நிர்வாகிகள், சார்பு அமைப்பினர் திரளாக கலந்து கொண்டனர்.

    Next Story
    ×