search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு: அரசியல் தலைவர்கள் கருத்து
    X

    சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு: அரசியல் தலைவர்கள் கருத்து

    சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா குற்றவாளி என்று சுப்ரீம் கோர்ட்டு அளித்துள்ள தீர்ப்பு குறித்து அரசியல் தலைவர்கள் அளித்த கருத்தை கீழே பார்க்கலாம்.
    சென்னை:

    சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா குற்றவாளி என்று சுப்ரீம்கோர்ட்டு அளித்துள்ள தீர்ப்பு குறித்து அரசியல் தலைவர்கள் கருத்து வருமாறு:-

    வரலாற்று சிறப்பு வாய்ந்த தீர்ப்பு. ஊழல் செய்ய அச்சப்பட வைக்கும் தீர்ப்பு.

    சட்டத்தின் பிடியில் இருந்து குற்றம் புரிந்தவர்கள் யாரும் தப்பிவிட முடியாது என்பதற்கான தீர்ப்பாக இது அமைந்திருக்கிறது. பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு இது ஒரு பாடமாகும்.

    தமிழக கவர்னர் தற்போது தமிழகத்தில் நிலவும் நிலையற்ற ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், நிலையான ஆட்சி ஏற்படவும், அரசியல் சாசனம் மற்றும் சட்ட விதிகளுக்கு உட்பட்டு, உரிய முடிவு எடுத்து உடனடியாக விரைவில் காலம் தாழ்த்தாமல் ஜனநாயக முறைப்படி தமிழகத்தில் நிலையான ஆட்சி அமைய வழி வகுக்க வேண்டும்.

    மார்க்சிஸ்டு கட்சி மாநில செயலாளர் ராமகிருஷ்ணன்:-

    பொதுவாழ்வில் நேர்மையற்ற நடைமுறை மற்றும் லஞ்ச ஊழலில் ஈடுபடுவோர் அனைவருக்குமான எச்சரிக்கையாக இத்தீர்ப்பு அமைந்துள்ளது என்று சுட்டிக்காட்டுவதுடன் ஊழலுக்கு எதிரான போராட்டத்துக்கு இது வலுசேர்க்கும் என்றும் கருதுகிறது. ஊழல் செய்து சேர்க்கப்பட்ட சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும்.

    கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன்:-

    சொத்து குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கி இருக்கின்ற தீர்ப்பு இந்தியாவில் ஊழல் அரசியல்வாதிகளுக்கு சம்மட்டி அடியாக விழுந்திருக்கிறது.

    பணமிருந்தால் எதையும் சாதிக்கலாம் என்று நினைப்பவர்களுக்கு மரண அடி விழுந்திருக்கிறது. எவ்வளவு பணம் இருந்தாலும் தீர்ப்பை விலைக்கு வாங்க முடியாது என்பதை நீதிபதிகள் நிரூபித்து இருக்கிறார்கள். ஊழல் செய்து சொத்துக்குவித்த குற்றவாளியின் கையில் தமிழக அரசை ஒப்படைக்க நினைத்தவர்கள் வெட்கப்பட வேண்டும்.

    அகில இந்திய தேசிய லீக் தலைவர் இனாயத்துல்லாஹ்:-

    உச்சநீதி மன்ற தீரப்பின் மூலம் தமிழக மக்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர். இந்த தீர்ப்பு தமிழக முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் தொடர்வதற்கு வழிவகையும் செய்துள்ளது.

    என்.ஆர்.தனபாலன்

    காலம் கடந்து கிடைக்கப் பெற்ற தீர்ப்பாக இருந்தாலும் வரவேற்று பாராட்டுக்குரியதாய் அமைந்துள்ளது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு. ஊழல் செய்யும் ஒவ்வொரு அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் சரியான பாடமாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

    மூவேந்தர் முன்னணி கழக தலைவர் சேதுராமன்:-

    ஒட்டு மொத்த தமிழக மக்களின் உள் மனது நினைத்ததை இன்றைக்கு உச்சநீதிமன்றம் எதிரொலித்துள்ளது. ஊழல் செய்கிற அரசியல்வாதிகளை எச்சரிக்கை செய்கிற வகையில் உச்சநீதிமன்றம் தர்மத்தை நியாயத்தை நிலைநாட்டி உள்ளது.

    நாடக அரசியல் நடத்துபவர்கள், ஜெயலலிதாவுக்கு அரசியல் கற்றுக் கொடுத்தவள் நான் என்று பொய்யாக பேசுபவர் பின்னால் சென்று அ.தி.மு.க.வை இரண்டாக உடைத்து விடாதீர்கள். ஊழல் குடும்பத்தை ஒட்டுமொத்த அ.தி.மு.க.வினரும் ஒதுக்கித் தள்ளுவதுதான் உண்மையான ஜனநாயகத்தை பாதுகாக்கும்.

    தமிழருவி மணியன் கூறுகையில், “உச்சநீதிமன்றம் ஊழலுக்கு எதிராக வரலாற்றுச் சிறப்பு மிக்க நரகாசுரவதத்தை நடத்தி முடித்திருக்கிறது. தமிழக மக்கள் அனைவருக்கும் தீர்ப்பு வழங்கப்பட்ட நாள்தான் உண்மையான தீபாவளி திருநாள். கவர்னர் அவசரப்படாமல் பொறுமை காத்ததில் இருந்த நியாயத்தை அவரை விமர்சித்த அரசியல் தலைவர்களும் இப்போது உணர்ந்திருக்கக் கூடும்.

    Next Story
    ×