search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சட்டசபையை கூட்டினால் உண்மை தெரிந்துவிடும்: திருநாவுக்கரசர்
    X

    சட்டசபையை கூட்டினால் உண்மை தெரிந்துவிடும்: திருநாவுக்கரசர்

    எம்.எல்.ஏ.க்கள் விருப்பத்துடன் போயிருக்கிறார்களா, மிரட்டி கொண்டு போய் வைக்கப்பட்டார்களா? என்பதெல்லாம் சட்டசபையை கூட்டினால் தெரிந்துவிடும் என பெரம்பலூரில் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி, தமிழகத்தை சேர்ந்த 11 முன்னணி காங்கிரஸ் தலைவர்களை அழைத்து தமிழகத்தின் அரசியல் நிலவரம் குறித்து கேட்டறிந்தார்.

    தமிழகத்தில் தற்காலிக காபந்து சர்க்கார் இருக்கிறது. ஒரு தற்காலிக முதல்வர் இருக்கிறார். தமிழகத்தில் நீட் தேர்வு, வறட்சியால் குடிநீர் பிரச்சனை மற்றும் விவசாயிகள் தற்கொலை, கடனால் விவசாயிகள் பாதிப்பு உள்ளிட்ட ஏராளமான பிரச்சனைகள் தற்போது உள்ளது. ஒரு நிரந்தர அரசாங்கம் தமிழ்நாட்டில் உடனடியாக ஏற்படுத்தப்பட வேண்டும். முழுமையான அரசு, முழுமையான முதல்வரை ஆளுநர் ஏற்படுத்த வேண்டும்.

    ஜனநாயக ரீதியாக, சட்ட ரீதியாக அரசியல் சட்டப்படி ஆளுநர் செயல்பட வேண்டும். மத்திய மோடி அரசு அருணாசலப்பிரசேதம் போன்ற மற்ற மாநிலங்களில் தலையிட்டு, தந்திரமாக ஆட்சியை கலைத்துவிட்டு பா.ஜ.க., பலனடைய முயற்சித்ததோ, அது மாதிரி தமிழகத்திலும் செயல்படுத்த அந்த கட்சி முயற்சிக்கிறது என்ற சந்தேகம் வருகிறது.

    குறுக்கு வழியிலே, கொல்லைப்புற வழியிலே மத்திய அரசு ஆதிக்கம் செலுத்த நினைக்கிறது. குழம்பிய குட்டையிலே பா.ஜ.க., மீன் பிடிக்க பார்க்கிறது. ஆளுநர் நடுநிலையோடு உடனடியாக ஒரு அரசை ஏற்படுத்த முன் வர வேண்டும். நாங்கள் யாரையும் ஆதரிக்கவில்லை. யார் வேண்டுமானாலும் முதல்வராக வரட்டும்.

    பெரும்பான்மையை நிரூபிக்கும் வகையில் சட்டசபையை உடனடியாக கூட்ட ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியல் சட்டப்படி நடவடிக்கைகளை எடுக்காமல் செயல்படாத ஆளுநராக இருக்ககூடாது என்பது தான் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு. மற்றப்படி அ.தி.மு.க., உட்கட்சி விவகாரத்தில் காங்கிரஸ் தலையிட விரும்பவில்லை. எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் தங்க வைக்கப்படும் சம்பவம் அரசியலுக்கு புதிதல்ல, இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் நடந்து வருவதே. அவர்கள் விருப்பத்துடன் போயிருக்கிறார்களா, மிரட்டி கொண்டு போய் வைக்கப்பட்டார்களா? என்பதெல்லாம் சட்டசபையை கூட்டினால் தெரிந்துவிடும்.

    சட்டசபைக்குள் யாரையும் மிரட்ட முடியாது. சட்ட சபைக்குள் வாக்கெடுப்பு நடத்தினால் எம்.எல்.ஏ.க்களின் நிலைப்பாடு தெரிந்து விடும். நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரசின் நிலைப்பாடு குறித்து கட்சி தலைமையிடம் பேசி முடிவு செய்யப்படும். சுப்ரமணிய சாமி எந்த கட்சியில் இருந்தாலும் சுதந்திரமாக பேசக் கூடியவர். அவர் போல நம்மால் பேசமுடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×