search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எம்.எல்.ஏ.க்களை யாரும் அடைத்து வைக்கவில்லை, சுதந்திரமாக இருக்கின்றனர்:  கூவத்தூரில் சசிகலா பேட்டி
    X

    எம்.எல்.ஏ.க்களை யாரும் அடைத்து வைக்கவில்லை, சுதந்திரமாக இருக்கின்றனர்: கூவத்தூரில் சசிகலா பேட்டி

    கூவத்தூரில் தங்க வைக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சுதந்திரமாக இருப்பதாகவும், அதை நீங்களே பார்க்கலாம் என்றும் சசிகலா கூறினார்.
    சென்னை:

    கூவத்தூரில் தங்க வைக்கப்பட்டுள்ள அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுடன் இரண்டாவது நாளாக இன்றும் சசிகலா ஆலோசனை நடத்தினார். ஒவ்வொரு எம்.எல்.ஏ.க்களையும் தனித்தனியாக சந்தித்து பேசி, அவர்களின் கருத்துக்களை கேட்டுக்கொண்ட சசிகலா பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சுதந்திரமாக உள்ளனர். யாரையும் அடைத்து வைக்கவில்லை. அரசுக்கு எந்தவித பங்கமும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக ஒற்றுமையுடன் உள்ளனர். கட்சியில் இருந்து வெளியே சென்றவர்கள் வேண்டுமென்றே ஊடகங்களில் சில தவறான தகவல்களை பரப்புகிறார்கள்.

    அது இல்லை என்பது இப்போது புரிந்திருக்கும். அனைவரும் இங்கே ஒன்றாக இருக்கிறார்கள். அவர்கள் இல்லங்களுக்கு தொலைபேசி வாயிலாக பேசி வருகின்றனர். அவர்களின் குடும்பத்தினரை மிரட்டி வருவதாக என்னிடம் சொன்னார்கள். இருந்தாலும் இந்த இயக்கத்திற்காக உறவினர்களிடம் சொல்லி குழந்தைகளை பார்க்கச் சொல்லிருப்பதாக என்னிடம் கூறியபோது, அவர்கள் இந்த இயக்கத்தின் மீது எவ்வாறு பற்றாக இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து என் கண்களில் கண்ணீர் வந்தது.

    இப்போது அனைவரும் சுதந்திரமாக பேசியதையும், சுதந்திரமாக இருப்பதையும் பார்த்திருப்பீர்கள். எங்களுக்கு எத்தனை உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்பதை நீங்களே எண்ணிப் பார்த்துக்கொள்ளுங்கள்.

    ஆளுநர் கால தாமதம் செய்வதற்கு என்ன காரணம் என்று உங்களைப் போன்று நானும் கேட்டுக்கொண்டிருக்கிறேன். உங்களுக்கு காரணம் தெரிந்திருக்கும். அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதை பொறுத்திருந்து பாருங்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு பற்றி கேட்டபோது, ‘வழக்கில் தீர்ப்பு வரட்டும் பார்க்கலாம், அதற்கு முன்பே நாம் ஏன் ஒரு முடிவுக்கு வர வேண்டும்? என்றார் சசிகலா.
    Next Story
    ×