search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எம்.எல்.ஏ.க்களிடம் இன்றும்  தனித்தனியாக ஆலோசனை நடத்திய சசிகலா
    X

    எம்.எல்.ஏ.க்களிடம் இன்றும் தனித்தனியாக ஆலோசனை நடத்திய சசிகலா

    கூவத்தூர் விடுதியில் உள்ள எம்.எல்.ஏ.க்களை சந்தித்த சசிகலா, அனைவரிடமும் தனித்தனியாக ஆலோசனை நடத்தி கருத்துக்களை கேட்டறிந்தார்.
    சென்னை:

    தமிழகத்தில் நிலவும் அசாதாரண சூழலில் அ.தி.மு.க.வினரின் ஒவ்வொரு அசைவும் அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. சசிகலா மற்றும் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இடையே யார் ஆட்சியை பிடிப்பது என்ற போட்டி ஏற்பட்டுள்ளது.

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலாவின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சென்னையை அடுத்த கூவத்தூரில் அமைந்துள்ள நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் என்ன மனநிலையில் இருக்கிறார்கள் என்பதை அறிவதற்காக சசிகலா நேற்று கூவத்தூர் சென்று சுமார் 3 மணி நேரம் ஆலோசனை நடத்தினார். அதேபோல் இன்றும் கூவத்தூர் சென்று எம்.எல்.ஏ.க்களை சந்தித்தார்.

    கூவத்தூர் புறப்படும் முன்பு போயஸ் கார்டனில் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, நிச்சயமாக அ.தி.மு.க. கட்சி தான் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என்றும், மிரட்டல் உருட்டல்களை கண்டு அஞ்சப்போவதில்லை என்றும் கூறினார்.

    இதற்கு முன்பு அம்மாவை (ஜெயலலிதா) எதிர்த்த கூட்டம் தான் இப்போது தங்களை எதிர்ப்பதாக கூறிய அவர், ஜனநாயகத்தின் மீது தங்களுக்கு நம்பிக்கை உள்ளது என்றும் குறிப்பிட்டார்.

    கூவத்தூர் சென்ற அவரை கட்சி தொண்டர்கள் வரவேற்றனர். அவருடன் அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் சென்றனர். எம்.எல்.ஏ.க்களின் மனநிலை, அவர்களின் கருத்துக்களை தனித்தனியாக கேட்டறிந்த சசிகலா, அவர்களை கட்டுக்கோப்புடன் ஒன்றுபட்டு இருக்கும்படி கூறியுள்ளார். பின்னர் அவர் தனது பயணத்தை முடித்துக்கொண்டு போயஸ் தோட்டத்திற்கு திரும்பினார்.
    Next Story
    ×