search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு 7-க்கு மேல் தாண்டாது: ஓ.எஸ்.மணியன்
    X

    ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு 7-க்கு மேல் தாண்டாது: ஓ.எஸ்.மணியன்

    ஓ.பன்னீர்செல்வத்துக்கான ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 7-ஐத் தாண்டாது என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திட்டவட்டமாகக் கூறினார்.
    சென்னை:

    தமிழகத்தில் ஆட்சியமைப்பது யார் என்பதில் குழப்ப நிலை நீடிக்கும் நிலையில், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சென்னை அருகே உள்ள கூவத்தூரில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை சசிகலா நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். இன்றும் கூவத்தூர் சென்று ஆலோசனை நடத்தினார். முன்னதாக, கூவத்தூரில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அது பற்றிய விவரம் வருமாறு:-

    கேள்வி: எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கடிதம் கொடுத்து இவ்வளவு நாள் ஆகிறதே? எப்போது ஆட்சியமைப்பீர்கள்?

    பதில்: கவர்னர் அழைத்தால் அடுத்த நிமிடமே ஆட்சியமைக்கப்படும்.

    கேள்வி: எப்போது கவர்னர் அழைப்பார்?

    பதில்: அதை அவரிடம்தான் கேட்க வேண்டும்?

    கேள்வி: உங்களிடம் உள்ள எம்.எல்.ஏ.க்களில் பாதிபேர் கையெழுத்து போடவில்லை என்று தகவவல் வந்ததே?

    பதில்: அப்படி எதுவும் இல்லை.

    கேள்வி: ஓ.பன்னீர்செல்வம் பக்கம் 7 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். இன்னும் பலர் செல்வார்கள் என்று கூறப்படுகிறதே?

    பதில்: சிங்கிள் டிஜிட் தான். 7-க்கு மேல் போகாது

    கேள்வி: இன்னும் சில அமைச்சர்கள் அங்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகிறதே?

    பதில்: அப்படி எதுவும் இல்லை. அனைவரும் எங்களுடன் உள்ளனர்.

    கேள்வி: அமைச்சர் ஜெயக்குமாரை காணவில்லையே? அவர் எங்கே சென்றார்?

    பதில்: அவர் உள்ளூர்காரர். அவருக்கு நிறைய வேலைகள் இருக்கின்றன.

    கேள்வி: சசிகலா நேற்று வந்து ஆலோசனை நடத்தினார். இன்றும் வருகிறாரே?

    பதில்: சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லாம் இங்கே இருக்கிறோம். அவர் இங்கே வந்து எங்களுக்கு நல்ல கருத்துக்களை பேசி விட்டு சென்றார். அதேபோல் இன்றும் எங்களுக்கு கருத்து சொல்வார். ஒரு பயிற்சி அளிக்கிறார். அது எங்களுக்கு உந்துதலை தருகிறது. இது தவறா?

    கேள்வி: சென்னையில் எத்தனையோ விடுதிகள் உள்ளபோது, சென்னையை விட்டு இவ்வளவு தூரம் வந்து தங்கியிருப்பது ஏன்?

    பதில்: நல்ல சுற்றுச்சூழல், காற்றோட்டம் என அனைத்து வசதிகளும் உள்ளது. அதனால் இங்கே இருக்கிறோம்.

    கேள்வி: ஆளுநர் மாளிகையை முற்றுகையிடப் போவதாக தகவல் வந்ததே?

    பதில்: அப்படி எதுவும் இல்லை.

    கேள்வி: எத்தனை எம்.எல்.ஏ.க்கள் உங்கள் வசம் உள்ளனர்?

    பதில்: அ.தி.மு.க.வின் மொத்த உறுப்பினர்கள் 135 பேர். 127 பேர் சின்னம்மாவை (சசிகலா) ஆதரிக்கிறார்கள். இவர்கள் 127 பேரும் ஆட்சி அமைத்தே தீர வேண்டும் என்பதற்காக காத்திருக்கிறார்கள். இப்போது ஓ.பன்னீர்செல்வம் 7 உறுப்பினர்களை வைத்துக்கொண்டிருக்கிறார். அவர் எப்படி ஆட்சி அமைக்க முடியும்? யாரை நம்பி ஆட்சி அமைக்கப்போகிறார்? ஆட்சியையும், கட்சியையும் கெடுக்க முடியுமே தவிர ஆட்சி அமைக்க முடியாது. நிறைவேற்ற வேண்டிய மக்கள் பணிகள் எவ்வளவோ உள்ளன. அதற்கு அதிகாரம் பெற்ற முதல்வர் வேண்டும். இதற்கு விரைவில் சின்னம்மா (சசிகலா) முதலமைச்சராகி தமிழ்நாட்டின் தேவைகளையும் இயக்கத்தின் பணிகளையும் விரைவில் தொடர்வார் என்ற நம்பிக்கை உள்ளது.
    Next Story
    ×