search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்ககோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு: திருமாவளவன்
    X

    போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்ககோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு: திருமாவளவன்

    மாணவர்கள் மீது தடியடி நடத்திய போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்ககோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய உள்ளதாக திருமாவளவன் கூறியுள்ளார்.
    கோவை:

    ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடிய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய போலீசாரை கண்டித்து மக்கள் நல கூட்டு இயக்கம் சார்பில் கோவை சிவானந்தா காலனியில் இன்று தர்ணா போராட்டம் நடந்தது.

    இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார். முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது,

    ஜல்லிக்கட்டுக்கு நிரந்த சட்டம் இயற்ற கோரி மாணவர்கள் நடத்திய போராட்டம் மகத்தான வெற்றி பெற்று இருக்கிறது. இந்த போராட்டத்தை நசுக்கும் வகையில் தமிழக அரசு காவல் துறையை ஏவி வன்முறை நடத்தி இருக்கிறார்கள்.

    குறிப்பாக சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட இடங்களில் போராட்டம் நடத்தியவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஏராளமான பேர் படுகாயம் அடைந்து உள்ளனர். பலர் மீது பொய் வழக்குகள் போடப்பட்டு கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    இதனை மக்கள் நல கூட்டு இயக்கம் வன்மையாக கண்டிக்கிறது. சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும். பணியில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமி‌ஷன் அமைத்து விசாரிக்க வேண்டும்.

    பாதிக்கப்பட்ட இடங்களை மக்கள் நல கூட்டு இயக்க தலைவர்கள் நேரில் ஆய்வு செய்தோம். குறிப்பாக கடலோர பகுதிகள் மற்றும் தலித்துகள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் காவல்துறையினர் பெண்களிடம் ஆபாசமாக பேசி காட்டு மிராண்டிதனமாக தாக்கியிருக்கிறார்கள். இது கண்டிக்கத்தக்கது.

    6 நாள் அமைதியாக போராட்டம் நடந்தது, 7-வது நாளில் ஒரு மணி நேரத்தில் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த வேண்டும் என திட்டமிட்டு வன்முறையை நடத்தியுள்ளனர். மாணவர்கள் கேட்ட 2 மணி நேர அவகாசத்தை வழங்காமல் அவர்கள் மீது கண்ணீர்புகை குண்டுகளை வீசியிருக்கிறார்கள். காவல்துறையை சேர்ந்தவர்களே ஆட்டோக்களுக்கு தீ வைக்கிறார்கள். வாகனங்களை சேதப்படுத்துகிறார்கள். இது தானாக நடந்த வன்முறையல்ல. திட்டமிட்டு நடந்த வன்முறை. இது தமிழக அரசின் வரலாற்றில் நீங்காத கறையாக அமைந்து விட்டது.

    மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களை சமூக விரோதிகள் என முத்திரை குத்துவது கண்டிக்கத்தக்கது. காயம் பட்டவர்களுக்கு முதல் உதவி சிகிச்சையோ, மருத்துவ சிகிச்சையோ அளிக்கவில்லை. இது வேதனையானது. அப்பாவி இளைஞர்கள், வேலைக்கு செல்பவர்களையும் காவல் துறையினர் தாக்கியிருக்கிறார்கள். பொய் வழக்குகளில் கைது செய்து இருக்கிறார்கள்.

    இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து புகார் மனுக்களை பெற்று வருகிறோம். ஓரிரு நாளில் சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனரை சந்தித்து அதனை வழங்குவோம். பாதிக்கப்பட்டவர்கள் அளிக்கும் புகார்களை உள்ளூர் போலீஸ் நிலையங்களில் வாங்க மறுப்பதால் புகார் கொடுக்க உள்ளோம்.

    அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும் மக்கள் நல கூட்டு இயக்கம் சார்பில் வன்முறைக்கு காரணமான கமி‌ஷனர் உள்பட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×