என் மலர்tooltip icon

    செய்திகள்

    போராட்ட களத்தில் இருந்து தமிழகம் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும்: தமிழிசை சவுந்தரராஜன்
    X

    போராட்ட களத்தில் இருந்து தமிழகம் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும்: தமிழிசை சவுந்தரராஜன்

    ஜல்லிக்கட்டு நடத்த மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து உள்ளது. போராட்ட களத்தில் இருந்து தமிழகம் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் என தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
    ஆலந்தூர்:

    தமிழக பா.ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடந்து இருந்தால் நன்றாக இருந்து இருக்கும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக நடக்கவில்லை. அங்கு அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. தமிழக அரசுக்கு பிரதமர் மோடி பக்கபலமாக இருந்து அவசர சட்டத்தை பிறப்பித்து உள்ளார். இதனால் ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக சென்றோம்.

    இளைஞர்களின் போராட்டத்தை செவி எடுத்து ஜல்லிக்கட்டு நடத்த மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து உள்ளது. போராட்டக்காரர்கள் 2 அரசுகளையும் மதித்து அவசர சட்டத்தை ஏற்று இருக்கவேண்டும். ஜல்லிக்கட்டுக்காக உண்மையாக போராடியவர்கள் அவசர சட்டத்தை ஏற்று இருக்கிறார்கள்.

    இது தற்காலிகமான சட்டம் என கூறுகின்றனர். இது நிரந்தரமான சட்டம்தான் என முதல்-அமைச்சர், சட்ட வல்லுனர்கள் கூறுகின்றனர். ஏதோ ஒரு சக்தி இந்த போராட்டங்களில் இருந்து மீள்வதை தடுக்கிறது. போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளவர்கள் ஜல்லிக்கட்டு வேண்டும் என போராடினார்கள். இப்போது ஜல்லிக்கட்டு கிடைத்து உள்ளது.

    எனவே போராட்டத்தை கைவிட்டு சுமுகமான நிலைக்கு திரும்பவேண்டும். புதுக்கோட்டையில் ஜல்லிக்கட்டு நடந்தபோது 80 பேர் காயமடைந்து, 2 பேர் பலியானதாக வந்த தகவல் வேதனை அளிக்கிறது. இது பாதுகாப்பான விளையாட்டாக இருக்கவேண்டும்.

    போராட்ட களத்தில் இருந்து தமிழகம் இயல்பு நிலைக்கு திரும்பவேண்டும். இனியும் போராட்ட களமாக இருந்தால் அதை யாராலும் தாங்கிக்கொள்ள முடியாது. இதை போராட்டம் நடத்துபவர்கள் உணரவேண்டும். மிருக வதையில் இருந்து ஜல்லிக்கட்டு, ரேக்ளா, மஞ்சுவிரட்டு விலக்கப்பட்டு சட்டம் இயற்றப்பட்டு உள்ளது.

    இந்த சட்டத்துக்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு வழங்கி உள்ளது. மிக வலுவான சட்டமாக உள்ளது. இதனால் பா.ஜனதா கட்சிக்கு பின்னடைவு கிடையாது. தமிழகத்தில் உள்ள கட்சிகளை விட பா.ஜனதா கட்சி தமிழ் உணர்வு கொண்டது.

    மாநிலங்களுக்கு திட்டங்களை கொண்டு வரும் தேசிய கட்சியாக பா.ஜனதா உள்ளது. தவறான உள்நோக்கத்துடன் பிரசாரம் செய்யப்படுவதை கண்டிக்கிறோம். போராட்டத்தை மதித்ததால்தான் அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது.

    தொடர்ந்து போராடுவது நியாயமா? என்பதை சிந்திக்க வேண்டும். உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு நிலுவையில் இருக்கிறது. சட்டரீதியாக வாய்ப்பு இல்லாததால் மத்திய அரசு சட்டம் கொண்டு வரவில்லை. ‘பீட்டா’ அமைப்பின் நோக்கம் வேறாக இருப்பதால் அதை தடை செய்யப்படவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×