search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அலங்காநல்லூரில் தடியடி: டாக்டர் ராமதாஸ் கண்டனம்
    X

    அலங்காநல்லூரில் தடியடி: டாக்டர் ராமதாஸ் கண்டனம்

    அலங்காநல்லூரில் மக்கள் நடத்திய அறவழிப் போராட்டத்தை ஒடுக்க தமிழக அரசும், காவல்துறையும் கடைபிடித்த வழிமுறை கண்டிக்கத்தக்கது என்று டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த அனுமதி கோரி போராட்டம் நடத்திய இளைஞர்கள் மீது காவல்துறையினர் மிக மோசமான அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். அறவழியில் போராடிய இளைஞர்களையும், பொதுமக்களையும் தமிழக காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தமிழக காவல்துறையினரின் மனிதநேயமற்ற இந்த நடவடிக்கை கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும்.

    அலங்காநல்லூரில் மக்கள் நடத்திய அறவழிப் போராட்டத்தை ஒடுக்க தமிழக அரசும், காவல்துறையும் கடைபிடித்த வழிமுறை மிகவும் அநாகரீகமானது; கண்டிக்கத்தக்கது ஆகும். இலங்கைப் போரின் இறுதிக் கட்டத்தில் முல்லைத் தீவு மாவட்டத்தில் சிக்கித் தவித்த தமிழ் மக்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் வழங்கலை சிங்கள அரசு தடை செய்ததைப் போல, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்காக போராடிய இளைஞர்களுக்கு உள்ளூர் மக்கள் உணவு, குடிநீர், மருந்து ஆகியவற்றை வழங்க முன்வந்த போது, அவற்றை காவல்துறையினர் தடுத்து திருப்பி அனுப்பியுள்ளனர். அதுமட்டுமின்றி, உணவு தர முன்வந்த உள்ளூர் பெண்களையும், போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களையும் தொடர்புபடுத்தி கொச்சையான வார்த்தைகளை காவல்துறையினர் உதிர்த்துள்ளனர்.

    தமிழர் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை பின்பற்றும் எவரும் இதுபோன்ற இழிசெயலில் ஈடுபட மாட்டார்கள். இத்தகைய செயல்களில் ஈடுபட்டதன் மூலம் சிங்கள வெறியர்களை விட மிகவும் மோசமாக தமிழக காவல் துறை நடந்து கொண்டிருக்கிறது.

    அதுமட்டுமின்றி, நேற்று காலை தொடங்கி இன்று அதிகாலை வரை தொடர்ந்து 21 மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களை காவல்துறையினர் இன்று காலை கைது செய்திருக்கின்றனர். கைது செய்யப்பட்ட இளைஞர்களை விடுதலை செய்ய வேண்டும், பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும், ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி மதுரை மாவட்டம் வாடிப்பட்டியிலும், சென்னை மெரினா கடற்கரையிலும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இப்போராட்டங்களை ஒடுக்குவதற்காக மிரட்டல் மற்றும் ஒடுக்குமுறையை காவல்துறையினர் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. இத்தகைய அணுகுமுறையை கைவிட வேண்டும்.

    ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த வேண்டும் என்ற தமிழர்களின் உணர்வுகளுக்கு ஆதரவளிக்க வேண்டிய தமிழக அரசு பீட்டா அமைப்பின் கையாளாக மாறி ஒடுக்குமுறையில் ஈடுபடுவது முறையல்ல. இதே ஜல்லிக்கட்டு சிக்கலில் ஆந்திர அரசு அம்மாநில மக்களின் உணர்வுகளுக்கு எவ்வாறு மதிப்பு அளித்தது என்பதை பார்த்தாவது தமிழக ஆட்சியாளர்கள் திருந்த வேண்டும்.

    கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்கள் அனைவரையும் தமிழக ஆட்சியாளர்கள் விடுதலை செய்ய வேண்டும்; அவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தும் திரும்பப்பெற வேண்டும். இதற்கெல்லாம் மேலாக மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த மத்திய, மாநில அரசுகள் உடனடியாக அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

    Next Story
    ×