search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாணவர்கள், இளைஞர்கள் மீது தடியடி நடத்துவதா?: மு.க.ஸ்டாலின் கண்டனம்
    X

    மாணவர்கள், இளைஞர்கள் மீது தடியடி நடத்துவதா?: மு.க.ஸ்டாலின் கண்டனம்

    ஜல்லிக்கட்டுக்காக போராடிய மாணவர்கள், இளைஞர்கள் மீது தடியடி நடத்திய சம்பவத்துக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    தி.மு.க. செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்காக 21 மணி நேரத்திற்கும் மேலாக விடிய விடிய போராட்டம் நடத்திய இளைஞர்களையும், மாணவர்களையும் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்றும், இழுத்துச் சென்றும் காவல்துறை கைது செய்திருப்பதற்கு என் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

    அலங்காநல்லூரில் நடைபெற்றுள்ள இந்த “அதிகாலை அராஜகம்” தமிழக இளைஞர்களின் உரிமைக்குரல் மீதும், தமிழர்களின் பாரம்பரிய பண்பாடு மற்றும் கலாச்சாரத்தின் மீது தொடுக்கப்பட்ட மிகப்பெரிய தாக்குதல் என்றே நான் கருதுகிறேன். இந்த தாக்குதலை “மத்தியில் உள்ள பா.ஜக. அரசு” முன் மொழிய, இங்குள்ள அ.தி.மு.க. அரசு “வழி மொழிந்திருக்கிறது”.

    அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டை தடுக்க வேண்டும் என்பதற்காக “அத்தியாவசியப் பொருட்கள் விநியோகத்தை” தடை செய்தது மாபாதகச் செயல். தமிழுணர்வுடன் போராடியவர்களை பட்டினி போடவும், அவர்களுக்கு தண்ணீர் கொடுக்கும் அலங்காநல்லூர் மக்களைக் கூட தடுத்ததும் மனித நேயமற்ற செயல் மட்டுல்ல, முழுவதுமாக மனித உரிமை மீறிய செயல்.

    “விலங்குகள் வதையைத் தடுக்கிறோம்” என்று கூறி அலங்காநல்லூர் மக்களுக்கும், அங்கு போராடிய இளைஞர்களுக்கும் அ.தி.மு.க. அரசின் ஏவல் துறையாகச் செயல்படும் காவல்துறையும் சில தினங்களாக செய்த “வதை” மிக மோசமானது, கடுமையானது.

    எல்லாவற்றிற்கும் மேலாக திராவிட முன்னேற்றக் கழக அரசு இருந்தபோது ஜல்லிக்கட்டு நடத்த, எடுத்த நடவடிக்கைகளில் ஒன்றைக் கூட எடுக்காத அதிமுக, “காவல்துறையின் இளைஞர்கள் வதையை” மட்டும் வேடிக்கை பார்த்தது பேரதிர்ச்சியாக இருக்கிறது.

    ஒரு மாநிலத்தில் உள்ள அரசு, மாநில மக்களின் உணர்வுகளுக்கு எதிராக எவ்வளவு அராஜகமாக, படுமோசமாக, ஈவு இரக்கமின்றி செயல்பட முடியும் என்பதற்கு அதிமுக அரசு ஜல்லிக்கட்டுப் பிரச்சனையில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ஜல்லிக்கட்டுக்காக போராடிய இளைஞர்கள் மீது அராஜகத்தை அவிழ்த்து விட்டது அ.தி.மு.க. அரசு என்றால், தமிழக இளைஞர்களின் போராட்டத்தை துச்சமென மதித்து அமைதியாக இருந்தது மத்திய அரசு. பா.ஜ.க. ஆட்சியில் மிக முக்கிய அரசியல் சட்ட ரீதியான அமைப்புகள் எல்லாம் மத்திய அரசின் விருப்பம் போல் நடக்கின்ற இந்த வேளையில், ஏதோ இந்திய விலங்குகள் நல வாரியம் மட்டும் தன்னிச்சையாக, சுதந்திரமாக செயல்படுகிறது என்ற மாயத்தோற்றத்தை உருவாக்கி, அதில் குளிர் காய்ந்து விட்டது மத்திய அரசு.

    தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடைபெற்று விடக்கூடாது என்பதில் இறுதி வரை மத்திய அரசு உறுதியாக இருந்ததன் காரணமாகத்தான், ஒரேயொரு அவசரச் சட்டம் கொண்டு வந்து ஜல்லிக்கட்டை நடத்த மத்திய அரசு முன் வரவில்லை.

    தமிழர்களின் கலாச்சாரத்தை உதாசீனப்படுத்தும் தங்களின் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ள, “உச்சநீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது” “விலங்குகள் நல வாரியம் சுதந்திரமான அமைப்பு”, “பீட்டா வழக்கு போட்டிருக்கிறது” என்றெல்லாம் கூறி மத்திய அரசு வேடிக்கை பார்த்ததை தமிழர்கள் இக்காலம் மட்டுமின்றி எக்காலத்திலும் மன்னிக்கமாட்டார்கள்.

    அதிலும் குறிப்பாக, “கலாச்சார பெருமை” பேசும் மத்திய அரசு தமிழர்களின் கலாச்சாரத்தை கடைசிவரை மதிக்கவும் இல்லை, மதிக்க முயற்சிக்கவும் இல்லை என்பது மிகுந்த மன வேதனையளிக்கிறது.

    இன்றைக்கு ஜல்லிக்கட்டுக்காக போராடுகின்ற மாணவர்கள், இளைஞர்களை “கொடுங்குற்றம்” புரிந்தவர்கள் போல் சித்தரித்து குண்டுக்கட்டாக கைது செய்வதும், அவர் மீது தடியடி நடத்துவதும், அவர்களின் பசிக்குச் செல்லும் உணவு, குடிநீரை தடுப்பதும் “தமிழர்களின் கலாச்சார பெருமையை தடுக்கும்” கொடுங்கோல் ஆட்சி தமிழகத்தில் நடப்பதை எடுத்துக்காட்டுகிறது.

    ஆகவே அலங்காநல்லூரில் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட இளைஞர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். அலங்காநல்லூரை அறிவிக்கப்படாத “போர் பகுதி”யாக்கி, அங்குள்ள மக்களை சுற்றி வளைத்துக் கொண்டிருக்கும் காவல் துறையினர் திரும்பப் பெறப்பட்டு, தடுக்கப்பட்ட அத்தியாவசியப் பொருள்கள் உடனடியாக அப்பகுதியில் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

    “பொங்கல் முடிந்து விட்டது, ஜல்லிக்கட்டை மறந்து விடுவார்கள்” என்ற நினைப்பில் அ.தி.மு.க. அரசு அமைதி காக்காமல், இப்போதும் கூட ஜல்லிக்கட்டு நடத்துவதற்குத் தேவையான சட்ட வழிமுறைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் தை மாதம் முடிவதற்குள் ஜல்லிக்கட்டு விழாவினை நடத்த அவசரச் சட்டம் கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
    Next Story
    ×