என் மலர்

  செய்திகள்

  ராமமோகன ராவ் மீது மேல்நடவடிக்கை இல்லாமல் தயங்கி நிற்பது ஏன்?: மு.க.ஸ்டாலின்
  X

  ராமமோகன ராவ் மீது மேல்நடவடிக்கை இல்லாமல் தயங்கி நிற்பது ஏன்?: மு.க.ஸ்டாலின்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ராமமோகன ராவ் பேட்டிக்கு பிறகு மேல் நடவடிக்கை இல்லாமல் தயங்கி நிற்பது ஏன் என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.  சென்னை:

  தமிழக எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. பொருளாளருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

  ‘குதிரையை விட்டு விட்டு லாயத்தை பூட்டுவது’ என்பது மத்திய அரசின் கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கைக்கு சரியான உதாரணமாக திகழ்கிறது. 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று, நவம்பர் 8-ந் தேதி இரவில் பிரதமர் நரேந்திர மோடி ஓர் அறிவிப்பை வெளியிட்டார். அந்த அறிவிப்பால் மக்களுக்கு, குறிப்பாக ஏழைகள், விவசாயிகள், சிறு வணிகர்கள், மீனவர்கள், தொழிலாளர்கள், மாத ஊதியம் பெறுவோர், நடுத்தர வர்க்கத்தினர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களுக்கும் ஏற்பட்ட மிக மோசமான பாதிப்புகள் இதுவரை தீரவில்லை என்பது மிகவும் வேதனையை ஏற்படுத்துகிறது.

  கருப்பு பண ஒழிப்பு வரவேற்கப்பட வேண்டியது தான். ஆனால் மத்திய அரசின் குளறுபடிகள் எல்லாம் கருப்பு பண முதலைகளுக்கு எந்த நெருக்கடியையும் தராமல், ஏழை-நடுத்தர மக்களுக்கு இமாலய துன்பத்தை கொடுத்திருப்பதை யாராலும் மறக்க முடியாது.

  ‘குறுகிய கால சிரமம், நீண்ட கால பயன்’ என்று பிரதமரும், மத்திய அரசும் திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருந்தாலும் இன்றைக்கு மக்களுக்கு எஞ்சியிருப்பதும், நிலைத்து நிற்பதும், ‘நீங்கா துயரம் மட்டுமே’ என்பதை பார்க்கும்போது, கருப்பு பணம் ஒழிப்பு என்ற ஒரு மிக முக்கியமான முடிவை மத்திய அரசு எந்த வித திட்டமிடலும் இன்றி எடுத்தேன் கவிழ்த்தேன் என்ற விதத்தில் அறிவித்து உள்ளது என்பது வெட்ட வெளிச்சம் ஆகியிருக்கிறது. முதலில் கருப்பு பணம் என்று தொடங்கிய மத்திய அரசு இப்போது ரொக்கமில்லா பண பரிவர்த்தனை என்ற அளவில் வந்து நிற்கிறது.

  இவை எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தது போன்ற கொடுமை என்னவென்றால், பாராளுமன்றத்தில் இது குறித்த முழு விவாதத்திற்கு, மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசோ, பிரதமரோ முன் வர பிடிவாதமாக மறுத்தது தான். பாராளுமன்ற ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்துள்ள எந்த அரசும் இது போன்ற விவாதத்திற்கு வழி விட மறுத்தது இல்லை. ஆனால் பா.ஜ.க. அரசு இந்த விஷயத்தில் பாராளுமன்றத்தில் 125 கோடி மக்களின் பிரச்சினையை விவாதிக்க மறுத்து இந்திய ஜனநாயகத்திற்கு ஏற்படுத்திய தலைகுனிவு, வரலாற்றில் கறை படிந்த பக்கங்களாகவே இருக்கும்.

  தமிழகத்தில் இருக்கும் அ.தி.மு.க. அரசு மக்களின் சிரமங்களைப் போக்க முயலாமல், வங்கி வரிசைகளில் பசியும் பட்டினியுமாக பல நாட்கள் நின்றதை கண்டு கொள்ளாமல் இருந்ததை மக்கள் நிச்சயம் மறக்கவும் மாட்டார்கள், மன்னிக்கவும் மாட்டார்கள்.

  இந்த உயர் மதிப்புடைய பண நீக்க நடவடிக்கையைத் தொடர்ந்து, தமிழகத்தில் வருமான வரித்துறையினர், தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் வீட்டில் ரெய்டு நடத்தினர். தமிழக நிர்வாகம் நடக்கும் தலைமைப் பீடமான தலைமைச் செயலகத்திற்குள் மத்திய துணை ராணுவத்தின் துணையுடன் ரெய்டு நடத்தப்பட்டது. அதற்கு முன்பு மணல் காண்டிராக்டர் சேகர் ரெட்டி வீடு மற்றும் அலுவலகத்தில் ரெய்டு செய்யப்பட்டது. சேலம் மற்றும் கடலூர் மத்திய கூட்டுறவு வங்கிகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனைகள் எல்லாம் கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கை மட்டுமா அல்லது ஊழலுக்கு எதிரான நடவடிக்கையா என்பது இதுவரை தெளிவுபடுத்தப்படவில்லை.

  தலைமைச் செயலாளராக இருந்த ராமமோகன ராவின் சவால் பேட்டிக்குப் பிறகும், மேல் நடவடிக்கை இல்லாமல் தயங்கி நிற்பது ஏன், யாரைக் காப்பாற்ற இந்த தயக்கம் என்பது எல்லாம் மூடி மறைக்கப்பட்டு, மூடு பனியாகவே இருக்கிறது.

  ‘எல்லாம் சரியாகி விடும். 50 நாட்கள் பொறுத்துக் கொள்ளுங்கள்’ என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டார். ஆனால் இன்று 50 நாட்கள் கழிந்தும் மக்களின் சிரமங்கள் குறையவில்லை. ஆகவே இதுவரை மக்கள் படும் இன்னல்களை கண்டுகொள்ளாமல் இருந்தது போல் இனியும் மத்திய அரசு வேடிக்கை பார்க்காமல், வங்கி செயல்பாடுகளை சீர் செய்ய வேண்டும்.

  வங்கிகளுக்கு தேவையான புதிய ரூபாய் நோட்டுகளை உடனடியாக வழங்கி பணம் எடுப்பது, திருமண செலவு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்கு மத்திய அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை தளர்த்தி சகஜமான வங்கி செயல்பாடுகள் திரும்பவும், உரிய நடவடிக்கைகளை உடனே எடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி இந்த திட்டத்தால் பொருளாதாரத்திற்கு என்ன பயன் கிடைத்துள்ளது, எத்தனை கருப்பு பண முதலைகள் பிடிபட்டுள்ளார்கள் என்பது குறித்தும் மக்களுக்கு தெரியப்படுத்த ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என மத்திய அரசை கேட்டு கொள்கிறேன்.

  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
  Next Story
  ×