என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருநாவுக்கரசர் விரைவில் அ.தி.மு.க.வில் சேருவார்: எச்.ராஜா
    X

    திருநாவுக்கரசர் விரைவில் அ.தி.மு.க.வில் சேருவார்: எச்.ராஜா

    தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் அ.தி.மு.க.வில் இணைந்தார் என்ற செய்தி வரும் என்று பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் நடைபெற்ற பா.ஜ.க. பொதுக்கூட்டத்திற்கு வந்த அக்கட்சியின் தேசியச் செயலாளர் எச். ராஜா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவில் கருப்பு பணத்தை ஒழிப்பதற்காகவே பண மதிப்பு நீக்க நடவடிக்கையை எடுத்துள்ளார். அவர் கூறிய படி இந்த 50 நாட்களில் பணத்தட்டுப்பாடு நீங்காவிட்டாலும் அடுத்து வரும் 40 நாட்களில் கண்டிப்பாக பணத்தட்டுப்பாடு நீங்கி விடும்.

    முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் பெரிய அளவில் ஊழல் செய்து பணத்தை சேர்த்துள்ளனர். அந்த பணம் பறிபோய் விடுமோ என்ற எண்ணத்திலும் அவர்கள் செய்துள்ள தவறை மறைப்பதற்காகவே தற்போது மத்திய அரசு எடுத்துள்ள கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையை விமர்சித்து வருகிறார்.

    தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், தான் அ.தி.மு.க.வில் இருந்திருந்தால், தமிழக முதல்-அமைச்சராவேன் எனக் கூறிவருகிறார். மேலும் அவர் அ.தி.மு.க.விற்கு ஆதரவான நிலைப்பாட்டையே எடுத்து வருகிறார். இதிலிருந்து கூடிய விரைவில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் அ.தி.மு.க.வில் இணைந்தார் என்ற செய்தி வரும்.

    ஜல்லிக்கட்டு நடைபெறாமல் போனதற்கு காங்கிரஸ் கட்சியே காரணம். பா.ஜ.க. ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு கடுமையாக போராடி வருகி றது. பிறப்பு முதல் இறப்பு சான்றிதழ் பெறுவது வரை அனைத்திலும் லஞ்சம் தலை விரித்தாடுகிறது. அதை ஒழிப்பதற்காகவே பிரதமர் மோடி அனைத்தையும் டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை எடுத்து வருகிறார். டிஜிட்டல் மயமாகி விட்டால் நாட்டில் லஞ்சம் முற்றிலும் ஒழிந்து விடும்.

    தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகனராவ் மனநிலை பாதிக்கப்பட்டவர் போல பேசியுள்ளார். அவர் செய்த தவறை மறைக்கவே நாடகமாடியுள்ளார். அவர்மீது விரைவில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×