search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மக்கள் நலக்கூட்டணியில் இருந்து பா.ஜனதா கூட்டணியில் சேர வைகோ விலகினாரா? திருமாளவன்
    X

    மக்கள் நலக்கூட்டணியில் இருந்து பா.ஜனதா கூட்டணியில் சேர வைகோ விலகினாரா? திருமாளவன்

    மக்கள் நலக்கூட்டணியில் இருந்து பா.ஜனதா கூட்டணியில் சேர வைகோ விலகினாரா என்று கேள்விக்கு விடுதலைசிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மாலை மலருக்கு அளித்த சிறப்பு பேட்டியில் பதில் அளித்துள்ளார்.

    சென்னை:

    விடுதலைசிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மாலை மலருக்கு அளித்த சிறப்பு பேட்டி வருமாறு:-

    கே:-வைகோவின் இந்த முடிவை நீங்கள் எதிர்பார்த்தீர்களா?

    ப:- நான் எதிர்பார்க்க வில்லை. இது அதிர்ச்சியளிக்கும் முடிவு.

    அதே வேளையில் விடுதலை சிறுத்தையினர் மற்றும் இடதுசாரிகளுடன் நட்பு தொடரும் என்று அறிவித்து இருப்பது சற்று ஆறுதல் அளிக்கிறது.

    கே:- புதுச்சேரியில் நடக்கும் மாநாட்டில் அவரை நீங்கள் அழைக்காதது தான் காரணமா?

    ப:- அப்படி இருக்க வாய்ப்பு இல்லை. இந்த மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என்று நான் அழைப்பு விடுத்தேன். ஆனால் இந்த மாநாடு பிரதமர் மோடி பொருளாதார நடவடிக்கையினை எதிர்த்து நடைபெறுவதால் ம.தி.மு.க பங்கேற்க வாய்ப்பு இல்லை என்று வெளிப்படையாகவே வைகோ கூறினார்.

    அதன் பின்னர் தான் இடது சாரிகள் தலைவர்களை அழைப்பது என்று முடிவு செய்தோம். எனவே இந்த மாநாட்டில் அவரை அழைக்காமல் புறக்கணிக்க வில்லை. ம.தி.மு.க இந்த முடிவு எடுப்பதற்கு இது ஒரு காரணமாக இருக்க வாய்ப்பு இல்லை.

    கே:- வைகோ வெளியேறுவதற்கு வேறு என்ன தான் காரணம்?

    ப:- ம.தி.மு.க வின் உயர்நிலைக்குழுவில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக வைகோ கூறியிருக்கிறார். அதற்கான காரணத்தை அவர் வெளிப்படையாக கூறவில்லை.

    கே:- இதற்கு வேறு எதுவும் அரசியல் காரணம் உள்ளதா?

    ப:- 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் அறிவித்ததை அவர் வரவேற்கிறார். மற்ற 3 கட்சிகள் எதிர்க்கிறோம். இது ஒரு வெளிப்படையான முரண்பாடாகும். இதுவே இப்போது நமக்கு தெரிகிற வெளிப்படையான அரசியல் காரணமாக உள்ளது.

    கே:- அவர் பா.ஜனதா வோடு அணி சேர முயற்சிக்கிறாரா?

    ப:- ரூபாய் நோட்டு பிரச்சினையில் பிரதமரை அவர் ஆதரிப்பதனால் மட்டுமே அவர் பா.ஜனதா அணி பக்கம் செல்வார் என்று கூறிவிட முடியாது.

    மக்கள் நலக்கூட்டணியில் இடம் பெற்றுள்ள 3 கட்சிகள் ரூபாய் நோட்டு பிரச்சினையில் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கிற நிலையில் ம.தி.மு.க மட்டும் ஆதரிப்பது என்ற முடிவை எடுத்திருப்பது ஒரே அணியில் தொடர்ந்து பயணிப்பது சங்கடத்தை ஏற்படுத்தும்.

    விடுதலை சிறுத்தைகளும் இடது சாரிகளும் மோடி அரசுக்கு எதிராக கடுமையாக போராடி வருகிற போது ம.தி.மு.க மட்டும் எப்படி எங்களோடு இருந்து கொண்டு ஒரே மேடையில் ஆதரிக்க முடியும், ஒரே அணியில் தொடர முடியும். இது தான் அவர் வெளியேறுவதற்கு உடனடி அரசியல காரணம் என்ற கருதுகிறேன்.

    நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 3 ஆண்டுகள் உள்ளன. இந்த நிலையில் பா.ஜனதாவிற்கு போவதற்காகத்தான் இந்த முடிவை எடுத்தார் என்று என்னால் யூகிக்க முடியவில்லை.

    கே:- வேறு ஏதேனும் உங்களுக்கிடையில் சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு சங்கடங்கள் உருவானதா?

    ப:- என்ன சங்கடங்கள் உருவானாலும் எங்களுக்குள் நாங்கள் மனம் விட்டு பேசி தோழமையை வளர்த்து கொள்வோம்.

    அது மாதிரியான சங்கடங்கள் ஏற்பட்டு அதன் அடிப்படையில் இந்த முடிவை எடுத்திருக்கிறார் என்று சொல்ல முடியாது.

    கே:- மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் பங்கேற்க முயற்சி செய்ததும் ஒரு காரணமா?

    ப:- நாங்கள் எந்த உள்நோக்கத்தோடும் அந்த கருத்தை சொல்ல வில்லை. காவிரி பிரச்சினைக்காக தி.மு.க கூட்டும் ஆலோசனை கூட்டத்தில் மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் அனைவரும் பங்கேற்கலாம் என்று ஒரு கருத்தை கூறினேன். அதற்கு இடதுசாரிகளும், ம.தி.மு.கவும் ஒப்புதல் அளிக்க வில்லை. எனவே விடுதலை சிறுத்தைகள் அந்த கூட்டத்தில் பங்கேற்க வில்லை. ஆகவே இது ஒரு காரணமாக இருக்குமா? என்று எனக்கு தெரிய வில்லை.

    கே:- புதுச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளர் நாராயண சாமியை ஆதரித்தது வைகோவிற்கு வருத்தமா?

    ப:- வருத்தம் ஏற்பட்டு இருக்கும் ஆனால் அவர் அதை பெரிது படுத்தவில்லை. ஏனென்றால் புதுச்சேரியில் மக்கள் நலக்கூட்டணி சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு இயங்கவில்லை. அங்கே மக்கள் நலக் கூட்டணிக்கு தனி ஒருங்கிணைப்பாளர் உண்டு. அவரிடத்தில் விடுதலை சிறுத்தைகள் பேசிவிட்டு தான் நாராயணசாமியை ஆதரிப்பது என்ற முடிவுக்கு வந்தார்கள். எனவே அதுவும் ஒரு காரணமாக இருக்காது என நான் கருதுகிறேன்.

    கே:- வைகோ ஒருங்கிணைப்பாளர் இல்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தொடர்ந்து சொல்லி வந்தது ஒரு காரணமாக இருக்கலாமா?

    ப:- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சொன்னது உண்மைதான் ஆனால் அதை அவர் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை ஆனால் அவருக்கு மனவலியை ஏற்படுத்தி இருக்கலாம்.

    கே:- காவேரி மருத்துவ மனையில் கலைஞரை சந்திக்க சென்ற அவரை தி.மு.க.வினர் கூச்சலிட்டுஅவமதித்த போது கூட்டணியில் உள்ள நீங்கள் மூவரும் அதை கண்டிக்க வில்லை என்று சொல்லப்படுகிறதே?

    ப:- தி.மு.க வினர் அப்படி நடந்து கொண்டது நாகரீகம் இல்லாத செயல் என்பதை என்னுடைய முக நூலில் நான் பதிவு செய்தேன். அடுத்தடுத்து நடந்த பல செய்தியாளர்கள் சந்திப்பில் அதை கண்டித்து இருக்கிறேன். ஜி. ராமகிருஷ்ணன், முத்தரசன் ஆகியோரும் தி.மு.க வினரை கண்டித்தார்கள்.

    கே:- வைகோ வெளியேறியதால் மக்கள் நலக்கூட்டணி செயல் இழந்து விடுமா?

    ப:- மற்ற 3 கட்சிகளும் சேர்ந்து மக்கள் நலக்கூட்டியக்கத்தை தொடர்ந்து முன் எடுத்து செல்வோம் மக்கள் பிரச்சினை அடிப்படையில் விடுதலை சிறுத்தைகள், இடது சாரிகள் இணைந்தே செயல்படும்.

    கே:- இந்த கூட்டியக்கத்தில் புதிதாக வேறு கட்சிகளை சேர்க்க வாய்ப்புள்ளதா?

    ப:- அது பற்றி மூன்று கட்சி தலைவர்களும் கலந்து பேசி விரைவில் முடிவை அறிவிப்போம்.

    கே:- நீங்கள் தி.மு.க, காங்கிரசை நோக்கி நகர்வதாக ம.தி.மு.க வட்டாரத்தில் கூறப்படுகிறதே?

    ப:- இது வெறும் யூகம் தான் தி.மு.க தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்கலாம் என்று நான் கருத்து சொன்னது, பொது சிவில் சட்ட எதிர்ப்பு மாநாட்டில் கவிஞர் கனிமொழி கலந்து கொண்டது இப்படி யூகம் செய்வதற்கு காரணமாக இருந்திருக்கலாம்.

    ஆனால் தேர்தல் தொடர்பாக தி.மு.க, காங்கிரசோடு அணி சேர்வதற்கு நாங்கள் எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை.

    இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

    Next Story
    ×