search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புயலால் பாதிக்கப்பட்டு 16 நாட்கள் ஆகியும் இடைக்கால நிவாரணம் அறிவிக்காதது ஏன்?: ப.சிதம்பரம்
    X

    புயலால் பாதிக்கப்பட்டு 16 நாட்கள் ஆகியும் இடைக்கால நிவாரணம் அறிவிக்காதது ஏன்?: ப.சிதம்பரம்

    வார்தா புயலால் பாதிக்கப்பட்டு 16 நாட்கள் ஆகியும் இடைக்கால நிவாரணம் அறிவிக்காதது ஏன் என்று மத்திய அரசுக்கு முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

    காரைக்குடி:

    காரைக்குடியில் இன்று முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவையொட்டி பேரணி நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் காரைக்குடி வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் மழை இல்லமல் வறட்சி நிலவுகிறது விவசாயம் பொய்த்து, விவசாயிகள் தற்கொலை செய்து வருகின்றனர்.

    டெல்டா பகுதிகளிலும் மழை இல்லாமல் வேளாண்மை பாதிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழகம் முழுவதையும் வறட்சி மாநிலமாக அறிவித்து, மத்திய அரசு உடனே இழப்பீடு வழங்க வேண்டும். இதற்கு மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    வார்தா புயலால் சென்னை பாதிக்கப்பட்டு 16 நாட்கள் ஆகிவிட்டது. ஆனால் மத்திய அரசு இப்போதுதான் குழுவை அனுப்பி வைத்துள்ளது. புயல் பாதிப்பு ஏற்பட்ட உடன் மத்திய அரசு உடனடியாக இடைக்கால நிவாரணமாக பெருந்தொகையை கொடுத்து, அதன்பின் குழுவை அனுப்பி பாதிப்பை கணக்கிட்டு மேற்கொண்டு தொகையை வழங்கும். ஆனால் தற்போது உள்ள மத்திய அரசு இடைக்கால நிவாரணத்தை வழங்கவில்லை. உடனடியாக குழுவை அனுப்பாமல் காலம் கடந்து அனுப்பியுள்ளது.

    எனவே உடனடியாக தமிழகத்துக்கு இடைக்கால நிவாரண தொகையை மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.

    ரூ. 1000, ரூ. 500 செல்லாது என்ற அறிவிப்பால் நாடு முழுவதும் பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சிறு தொழில்கள் முற்றிலும் நின்றுவிட்டது. காளையார் கோவிலில் உள்ள தேசிய பஞ்சாலை 30 நாட்களாக மூடிக்கிடக்கிறது. ரூ. 15 கோடி மதிப்புள்ள நூல்கள் தேங்கியுள்ளன. 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இது குறித்து மத்திய ஜவுளித் துறை செயலாளரிடம் கோரிக்கை வைத்துள்ளேன். அவர் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்.

    நாட்டில் தற்போது காய்கறிகள், பழங்களின் விலைகள் வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் பேரிழப்பை சந்தித்து வருகின்றனர். நெல் சாகுபடி செய்யாத காலங்களில் காய்கறி, பழங்கள் ஆகியவற்றை பயிரிட்டு அதன்மூலம் வருமானம் ஈட்டி வந்தவர்களுக்கு தற்போது அந்த வழியும் இல்லை.

    நாட்டில் பண நீக்க மதிப்பு அறிவிப்புக்கு முன்பு ரூ. 15 லட்சத்து 44 ஆயிரம் கோடி புழக்கத்தில் இருந்தது. மோடி பண நீக்க அறிவிப்பு செய்தால் கருப்பு பணம் ரூ. 5 லட்சம் கோடி வராது என்று எண்ணினார். ஆனால் எனக்கு நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வந்த செய்திப்படி தற்போது வரை ரூ. 14 லட்சத்து 32 ஆயிரம் கோடி வங்கிகளுக்கு வந்துள்ளது. மீதமுள்ள ஒரு லட்சம் கோடி ரூபாய் இன்னும் 3 நாட்களுக்குள் வங்கிகளுக்கு வந்துவிடும்.

    ரொக்கமற்ற பணப் பரிவர்த்தனையை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. ஆனால் குறிப்பிட்ட சிலரை திருப்திப்படுத்தத்தான் இந்த திட்டத்தை மோடி அரசு கொண்டு வந்துள்ளது.

    உதாரணமாக ஒருவர் 100 ரூபாயை ரொக்கமற்ற பணப்பரிவர்த்தனை செய்யும்போது குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு ரூ. 1.50 கமி‌ஷன் கிடைக்கிறது. அந்த 100 ரூபாய், 10 பேர் மாற்றும்போது, அந்த நிறுவனத்துக்கு 15 ரூபாய் கமி‌ஷன் கிடைக்கும்.

    24 மணி நேரமும் மின்சாரமும், இன்டர்நெட் வசதியும் இருக்கிற நாட்டில்கூட ரொக்கமற்ற பணப்பரிவர்த்தனை முழு அளவில் இல்லை. ஜெர்மனி, ஆஸ்திரியாவில் 80 சதவீதமும், ஆஸ்திரேலியாவில் 60 சதவீதமும், பிரான்சில் 56 சதவீதமும், அமெரிக்காவில் 46 சதவீதமும் ரொக்கப் பரிவர்த்தனைதான் நடந்து வருகிறது.

    எனவே நமது நாட்டில் ரொக்கமற்ற பணப்பரிவர்த்தனை முழு அளவில் நடப்பதற்கு சாத்தியமில்லை. மத்திய அரசுக்கு சரியான புரிதல், திட்டமிடுதல் சிந்தனை கிடையாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×