search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக அரசியலில் வெளிப்படை தன்மை இல்லை: டி.ராஜேந்தர் பேட்டி
    X

    தமிழக அரசியலில் வெளிப்படை தன்மை இல்லை: டி.ராஜேந்தர் பேட்டி

    தமிழக அரசியலில் வெளிப்படை தன்மை இல்லை என்று திருச்சியில் லட்சிய திராவிட முன்னேற்ற கழக தலைவர் டி.ராஜேந்தர் பேட்டியளித்துள்ளார்.
    திருச்சி:

    லட்சிய திராவிட முன்னேற்ற கழக தலைவர் டி.ராஜேந்தர் திருச்சியில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    நான் இதற்கு முன்பு சினிமாவில் கவனம் செலுத்தி வந்தேன். 2017-ம் ஆண்டில் இருந்து 35 சதவீதம் சினிமாவிலும், 65 சதவீதம் அரசியலிலும் செயல்பட உள்ளேன். 2017-ல் லட்சிய திராவிட முன்னேற்ற கழகம் அரசியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவதாக அமையும்.

    நான் தற்போது அ.தி. மு.க. அனுதாபியாக செயல்படுவதாக கூறுவது தவறு. முதல்வர் ஜெயலலிதா கடந்த 1989-ல் எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது அவர் சட்டசபையில் தாக்கப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் பேசியிருக்கேன். இதற்காக என்னுடைய வீடு, அலுவலகம் தாக்கப்பட்டது.

    காவிரி பிரச்சனை நடவடிக்கை, அம்மா உணவகம், அன்னதானம் போன்ற ஜெயலலிதாவின் திட்டங்களை பாராட்டியுள்ளேன். அவர் தற்போது முதல்வராக இருந்திருந்தால் காவிரி பிரச்சனையை தீர்த்திருப்பார். விவசாயிகள் தற்கொலை நடந்திருக்காது. தஞ்சை மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள்.

    அ.தி.முக. பொதுச்செயலாளராக சசிகலா வரவேண்டும் என்பது குறித்து நான் கருத்து தெரிவிக்க முடியாது. அது அவர்கள் முடிவெடுக்க வேண்டிய வி‌ஷயம். அ.தி. மு.க.வுடன் இணைந்து செயல்பட அழைத்தால் அப்போது முடிவெடுப்பேன்.

    முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் உள்ள சந்தேகங்கள் குறித்து விளக்குமாறு நான் கேள்வி கேட்க வேண்டும் என்பது தவறு. இதில் கேள்வி கேட்க வேண்டிய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினே, இப்பிரச்சனையை அரசியலாக்க விரும்பவில்லை என கூறியிருப்பது ஏற்கத்தக்கதல்ல. அரசியலில் இருந்து கொண்டு அரசியலாக்க விரும்பவில்லை என கூறுவது சரியல்ல.

    இந்த பிரச்சனை குறித்து கவுதமி, எஸ்.வி.சேகர், டாக்டர் ராமதாஸ் என பலர் கேள்வி எழுப்பியுள்ளனர். முன்னாள் தமிழக தலைமை செயலாளர் ராம மோகனராவ் அரசியல்வாதி போல் செயல்படுகிறார். 4 நாட்கள் ஆஸ்பத்திரியில் இருந்து விட்டு நேற்று பேசி கொண்டிருக்கிறார்.

    தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட என்னை அழைத்துள்ளனர். எனது அணியில் எஸ்.ஏ.சந்திரசேகர், கதிரேசன், அழகப்பன், ஏ.எம்.ரத்னம் என வலுவான அணி உருவாகியுள்ளது. விஷாலை எதிர்த்து நான் போட்டியிடுகிறேன் எனக்கூறுவது தவறு. எத்தனை முனை போட்டி என்றாலும் நான் களத்தில் இருப்பது உறுதி. வெற்றி தோல்வி பற்றி கவலைப்படுபவன் கிடையாது.

    ராமமோகனராவ் வீட்டில் வருமான வரி சோதனை நடந்தது பற்றி பா.ஜனதா மீது குற்றச்சாட்டு கூறுவது சரியல்ல. தமிழக அரசியலில் வெளிப்படை தன்மை இல்லை. அதனால் தான் தலைமை செயலகத்தில் துணை ராணுவப்படை நுழைந்துள்ளது.

    நான் புதிதாக விஜய் சேதுபதியுடன் ‘கவன்’ என்ற படத்தில் நடிக்கிறேன். அதில் என்னை தலையாக வைத்து பாடல் வருவதால் அஜித் ரசிகர்கள் கோபப்படமாட்டார்கள். நான் எப்போதும் விஜய், அஜித் ரசிகன். இவ்வளவு மாதங்கள் ஜல்லிக்கட்டுக்கு குரல் கொடுக்காமல் இப்போது குரல் கொடுத்து வருகிறார்கள். ஜல்லிக்கட்டு நடத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×