search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம்: 50 மாவட்ட செயலாளர்கள் உள்பட 2770 பேருக்கு அழைப்பு
    X

    அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம்: 50 மாவட்ட செயலாளர்கள் உள்பட 2770 பேருக்கு அழைப்பு

    அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் 50 மாவட்ட செயலாளர்கள் உள்பட பொதுக்குழு உறுப்பினர்கள் 2770 பேர்கள் பங்கேற்க உள்ளனர்.
    சென்னை:

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவியையும் வகித்து வந்தார்.

    அவரது மறைவை தொடர்ந்து கட்சியின் பொதுச்செயலாளர் பதவி காலியாக உள்ளது.

    இந்த பொறுப்புக்கு ஜெயலலிதாவின் தோழி சசிகலா வரவேண்டும் என்று கட்சியின் மாவட்டச்செயலாளர்கள் வற்புறுத்தி வருகின்றனர்.

    இது தொடர்பாக மாவட்ட அளவில் நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டி தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.

    கட்சியின் தலைமை கழக நிர்வாகிகள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், அணி நிர்வாகிகள் போயஸ் கார்டன் சென்று சசிகலாவுக்கு ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.

    அ.தி.மு.க.வில் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க வேண்டுமானால் கட்சியின் செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றி அதற்கு பொதுக்குழுவில் ஒப்புதல் பெற வேண்டும்.

    இதற்காக அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வருகிற 29-ந்தேதி காலை 9.30 மணிக்கு சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.

    இந்த கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் 280 பேர்களும், 50 மாவட்ட செயலாளர்கள் உள்பட பொதுக்குழு உறுப்பினர்கள் 2770 பேர்கள் பங்கேற்க உள்ளனர்.

    செயற்குழு கூட்டத்தில் ஜெயலலிதா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படுவதுடன், சசிகலாவை பொதுச்செயலாளராக்கும் தீர்மானமும் கொண்டு வரப்படுகிறது.

    செயற்குழு கூட்டத்திற்கு பிறகு பொதுக்குழு கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் பெறப்பட உள்ளது.

    ஒவ்வொரு முறை செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெறும் போதும் சிறப்பு அழைப்பாளர்கள் பங்கேற்பது வழக்கம்.

    ஆனால் இந்த முறை சிறப்பு அழைப்பாளர்கள் யாருக்கும் அழைப்பு இல்லை.

    கட்சியின் தலைமை கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், அணிகளின் செயலாளர்கள், நகர, ஒன்றிய பேரூர் கழக செயலாளர்கள் ஆகியோர் மட்டுமே பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

    பொதுக்குழு உறுப்பினர்களுக்கான அழைப்பு கடிதங்கள் கடந்த வாரம் தலைமை கழகத்தில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஒவ்வொரு மாவட்டச் செயலாளரிடம் மொத்தமாக வழங்கப்பட்டு உள்ளது.

    அவர்கள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள பொதுக்குழு உறுப்பினர்களை நேரில் வரவழைத்து வழங்கி உள்ளனர்.

    பொதுக்குழு உறுப்பினர்களை சென்னைக்கு அழைத்து வர சொகுசு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    அவர்கள் தங்குவதற்கு சென்னையில் ஓட்டல்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைவரும் நாளை இரவே சென்னை வந்து சேருகிறார்கள்.
    Next Story
    ×