search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ம.தி.மு.க. உயர்நிலைக்குழு கூட்டம் வைகோ தலைமையில் இன்று நடந்தபோது எடுத்த படம்.
    X
    ம.தி.மு.க. உயர்நிலைக்குழு கூட்டம் வைகோ தலைமையில் இன்று நடந்தபோது எடுத்த படம்.

    மக்கள் நல கூட்டணியில் இருந்து ம.தி.மு.க. விலகியது: வைகோ அறிவிப்பு

    மக்கள் நலக் கூட்டணியிலிருந்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் விலகிக்கொள்கிறது என்று வைகோ தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலைக் கூட்டம் அவைத் தலைவர் திருப்பூர் சு.துரை சாமி தலைமையில் இன்று சென்னை அண்ணாநகரில் நடைபெற்றது.

    கூட்டத்தில் துணை பொதுச்செயலாளர்கள் மல்லை சத்யா, துரைபால கிருஷ்ணன், கணேசமூர்த்தி, தேவதாஸ் உள்பட 14 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    மக்கள் நலக் கூட்டணியிலிருந்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் விலகிக்கொள்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றுடன் தோழமையும், நட்பும் என்றும் தொடரும். அதற்கு ஒரு அடையாளமாகத்தான் வருகிற 30-ந்தேதி நல்லக்கண்ணு புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்கிறேன்.

    தமிழ்நாட்டில் பருவமழை பொய்த்ததாலும், காவிரியில் தண்ணீர்த் திறந்துவிடாமல், கர்நாடகம் வஞ்சித்ததாலும், காவிரி பாசனப்பகுதி உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களும் வறட்சியின் பிடியில் சிக்கி இருக்கின்றன.

    பயிர் சாகுபடி பாதிக்கப்பட்ட நிலங்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாய் இழப்பீட்டுத் தொகை அளிக்க வேண்டும். தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், தனியார் வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள கடனை எவ்வித நிபந்தனையும் இன்றித் தள்ளுபடி செய்ய வேண்டும். உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா 25 லட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும்.

    வேலை இழந்து வறுமையில் வாடும் விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் உதவித் தொகை வழங்க வேண்டும்.

    மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில், ஜனவரி 6-ந்தேதி மதுரையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×