என் மலர்

  செய்திகள்

  அரசு காலி பணி இடங்களை உடனே நிரப்ப வேண்டும்: ராமதாஸ் அறிக்கை
  X

  அரசு காலி பணி இடங்களை உடனே நிரப்ப வேண்டும்: ராமதாஸ் அறிக்கை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அரசு துறைகளில் காலியாக உள்ள பணி இடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்று ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
  சென்னை:

  பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

  இயந்திரங்கள் இயங்குவதற்கு உதிரி பாகங்கள் அவசியம் என்பதைப் போல அரசு இயந்திரம் இயங்க அதிகாரிகள் அவசியம் ஆவர். ஆனால், தமிழக அரசின் முக்கியத் துறைகள் மற்றும் ஆலோசனை வழங்கும் அமைப்புகள் தலைமையின்றி தடுமாறிக் கொண்டிருப்பதால் அரசு நிர்வாகம் முடங்கியுள்ளது.

  தமிழக அரசின் உயிர் நாடியாக விளங்கும் முக்கியத்துறைகள் உட்பட 10-க்கும் மேற்பட்ட அரசுத் துறைகளுக்கு செயலாளர்கள் நியமிக்கப்படவில்லை. அரசு நிர்வாகங்களை கவனித்துக் கொள்வதற்கான பொதுத்துறை, பல்கலைக் கழகம் மற்றும் கல்லூரிகளை முறைப்படுத்த வேண்டிய உயர்கல்வித்துறை, கட்டமைப்புத் துறைகளில் மிகவும் முக்கியமானதாக கருதப்படும் மின்சாரத்துறை, அரசுக்கு அதிக வருவாய் ஈட்டித்தரும் துறைகளில் ஒன்றான வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை ஆகியவற்றின் செயலாளர் பதவிகள் காலியாகவே கிடக்கின்றன.

  இவை தவிர, கால்நடைப் பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை, சுற்றுலா, பண்பாடு மற்றும் இந்துசமய அறநிலையங்கள் துறை, சட்டத்துறை, சிறப்பு முயற்சிகள் துறை, சமூக சீர்திருத்தத் துறை, சிறப்புத் திட்ட அமலாக்கத்துறை ஆகியவற்றுக்கும் செயலாளர்கள் நியமிக்கப்படவில்லை.

  இந்த அனைத்துத் துறைகளும் வேறு துறை செயலாளர்களிடம் கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன. ஒரு செயலாளர் ஒன்றுக்கும் மேற்பட்ட துறைகளை கவனிக்க வேண்டியிருப்பதால் அவர்களிடமுள்ள அனைத்துத் துறைகளிலும் பணிகள் முடங்குகின்றன.

  குறிப்பாக மின்சாரம், உயர்கல்வி உள்ளிட்ட துறைகளின் செயலாளர் பதவிகள் கடந்த 6 மாதங்களாக காலியாக உள்ளன. அவற்றுக்கு அதிகாரிகளை நியமிப்பதற்கு கூட தமிழக அரசு ஆர்வம் காட்டவில்லை.

  தமிழகத்திற்கான திட்டங்களை வகுத்து செயல்படுத்த வேண்டிய முக்கிய அமைப்பு மாநில திட்டக்குழு ஆகும். இதன் தலைவராக முதலமைச்சர் உள்ள நிலையில், இதன் செயல்பாடுகளை துணைத் தலைவரும், உறுப்பினர்களும் தான் கவனித்துக் கொள்வார்கள். ஆனால், இந்த பதவிகள் அனைத்தும் காலியாக உள்ளன. திட்டக்குழுவின் துணைத்தலைவர் சாந்தா ஷீலா நாயர், பகுதிநேர உறுப்பினர்களான அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர் சாந்தா, பிளாஸ்டிக் சர்ஜரி வல்லுனர் மருத்துவர் ஸ்ரீதர், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் ராமசாமி ஆகியோரின் பதவிக்காலம் கடந்த ஜூலை மாதம் காலாவதியாகிவிட்டது. அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் பாலகுருசாமி, தொழிலதிபர் ஏ.சி. முத்தையா ஆகியோர் முன்பே பதவி விலகி விட்டனர்.

  திட்டக்குழுவின் முழு நேர உறுப்பினர்கள் நீண்ட காலமாகவே நியமிக்கப்படவில்லை. இன்றைய நிலையில், திட்டக்குழுவின் தலைவராக முதலமைச்சரும், செயலாளராக அனில் மேஷ்ராம் என்ற இ.ஆ.ப அதிகாரியும் மட்டுமே உள்ளனர். இதனால் தமிழகத்திற்கான வளர்ச்சித் திட்டங்களை உருவாக்க முடியவில்லை.

  தமிழ்நாடு மகளிர் ஆணையம், தமிழ்நாடு குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம், தமிழ்நாடு மாநில நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையம் ஆகியவற்றின் தலைவர் பதவிகளும் காலியாகவே உள்ளன.

  இந்தியாவில் எந்த மாநிலத்திலும் மக்களின் நலனுடன் சம்பந்தப்பட்ட இத்தனை பதவிகள் காலியாக இருப்பதைப் பார்க்க முடியாது. ஒருபுறம் ஆட்சியாளர்களின் ஊழலுக்கு உடந்தையாக இருந்தவர்களுக்கு பணி நீட்டிப்பும், ஆலோசகர் பதவியும் வழங்கி, தேவையில்லாத புதிய அதிகார மையங்களை உருவாக்கும் தமிழக அரசு, அவசியமான பணிகளுக்கு அதிகாரிகளை நியமிப்பதில் அலட்சியம் காட்டுவது முரண்பாடுகளின் உச்சம் ஆகும்.

  எனவே, கடந்த காலம் எப்படிப்பட்டதாக இருந்தாலும் நிகழ்காலம் சிறப்பாக இருக்க வேண்டும் என்ற தத்துவத்தின் அடிப்படையில் இந்த காலியிடங்கள் அனைத்தையும் தமிழக அரசு உடனடியாக நிரப்ப வேண்டும். அதன்மூலம் தமிழ்நாட்டின் வளர்ச்சியை புதிய அரசு உறுதி செய்ய வேண்டும்.

  இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
  Next Story
  ×