search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மது இல்லாத தமிழகம் அமைப்பது தான் பா.ம.க.வின் நோக்கம்: ராமதாஸ்
    X

    மது இல்லாத தமிழகம் அமைப்பது தான் பா.ம.க.வின் நோக்கம்: ராமதாஸ்

    மதுக்கடைகளை அகற்றுவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு பா.ம.க.வுக்கு கிடைத்த வெற்றி என்றும், மது இல்லாத தமிழகம் அமைப்பது தான் பா.ம.க.வின் நோக்கம் என்றும் ராமதாஸ் கூறியுள்ளார்.
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்தியா முழுவதும் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளையும், குடிப்பகங்களையும் வரும் மார்ச் 31-ந் தேதிக்குள் அகற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. ஏப்ரல் 1-ந் தேதிக்கு பிறகு புதிய மதுக்கடைகளை திறக்க அனுமதிக்கக்கூடாது என்றும் மாநில அரசுகளுக்கு நீதிபதிகள் ஆணையிட்டுள்ளனர். இந்தத் தீர்ப்பு நாடு போற்றும் நல்ல நடவடிக்கையாகும். பா.ம.க.விற்கு கிடைத்த வெற்றி.

    என்னால் தோற்றுவிக்கப்பட்ட வழக்கறிஞர்கள் சமூகநீதி பேரவை சார்பில், தமிழகத்தில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட ஆணையிட வேண்டும் என்று கோரி அதன் தலைவர் பாலு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

    அவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும் என்று கடந்த 2013-ம் ஆண்டில் ஆணையிட்டது. அதை எதிர்த்து தமிழக அரசு செய்த மேல்முறையீட்டை விசாரித்த உச்சநீதிமன்றம், முதற்கட்டமாக தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மட்டும் மூட ஆணையிட்டது. அதன்படி தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் இருந்த 504 மதுக்கடைகள் அப்புறப்படுத்தப்பட்டன.

    அதன் தொடர்ச்சியாகத் தான் நாடு முழுவதும் மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் திறக்கப்பட்டுள்ள மதுக்கடைகளை மார்ச் 31-ந் தேதிக்குள் அகற்ற வேண்டும் என்றும், அதற்குப் பிறகு புதிய மதுக்கடைகளை திறக்க அனுமதிக்கக் கூடாது என்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்திருக்கிறது. ஆனால், இதை ஏற்க மறுத்து விட்ட நீதிபதிகள், நகர்ப்புறம், கிராமப்புறம் வித்தியாசமின்றி மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர் தொலைவுக்குள் மதுக்கடைகள் இருக்கக் கூடாது; நெடுஞ்சாலைகளில் இருந்து கண்ணுக்கெட்டும் தொலைவில் மதுக்கடைகளே இருக்கக்கூடாது என்று தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

    தேசிய அளவில் ஆண்டுக்கு 18 லட்சம் பேரின் உயிரையும், தமிழகத்தில் ஆண்டு 2 லட்சம் பேரின் உயிரையும் பறிக்கும் மதுவை முழுமையாக ஒழித்து மதுஇல்லாத தமிழகம் அமைப்பது தான் பா.ம.க.வின் நோக்கம். இந்த லட்சியத்தை எட்டி, மக்களைக் காப்பதற்காக பா.ம.க. தொடர்ந்து பாடுபடும்.

    இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் இறுதிச் சடங்குகள் நிறைவடைந்து 10 நாட்களாகிவிட்ட நிலையில், அ.தி.மு.க. தொண்டர்களிடையே ஏற்பட்ட சோகமும், வேதனையும் இன்னும் மறையவில்லை. அதுமட்டுமின்றி, ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த சந்தேகங்கள் அதிகரித்து வருகின்றன.

    ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதற்கு அடுத்த நாளே அவர் குணமடைந்து விட்டதாகவும், அடுத்த சில நாட்களில் இல்லம் திரும்புவார் என்றும் மருத்துவமனை சார்பில் அறிவிக்கப்பட்டது. 75 நாட்கள் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று முழுமையாக உடல்நலம் தேறி விட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக அறிவித்ததன் பின்னணியில் பெரும் மர்மம் இருப்பதாக அ.தி.மு.க. தொண்டர்களும், பொதுமக்களும் கருதுகின்றனர். அவர்களின் இந்த சந்தேகம் தீர்க்கப்பட வேண்டும். ஜெயலலிதாவின் உடல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த போது பதப்படுத்தப்பட்டிருந்ததாக புகார்கள் எழுந்துள்ள நிலையில் அவற்றுக்கு பதில் அளிக்கப்பட வேண்டும். ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த விவரங்கள் அடங்கிய வெள்ளை அறிக்கையை தமிழக அரசு உடனடியாக வெளியிடவேண்டும்.

    இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார். 
    Next Story
    ×