search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொதுச் செயலாளர் பதவி ஏற்க சசிகலாவுக்கு அழைப்பு: அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுடன் ஓ.பன்னீர்செல்வம் செல்கிறார்
    X

    பொதுச் செயலாளர் பதவி ஏற்க சசிகலாவுக்கு அழைப்பு: அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுடன் ஓ.பன்னீர்செல்வம் செல்கிறார்

    அ.தி.மு.க. பொதுச்செயலாளராக பதவி ஏற்குமாறு சசிகலாவுக்கு அழைப்பு விடுக்க, அக்கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் ஓ.பன்னீர்செல்வம் செல்ல இருக்கிறார். 20-ந்தேதி இந்த சந்திப்பு நடக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
    சென்னை:

    தமிழகத்தின் முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு, அக்கட்சியை தொடர்ந்து வழிநடத்தப்போவது யார்? என்ற கேள்வி எழுந்தது.

    ஆனால், கட்சியின் மூத்த, முன்னணி நிர்வாகிகள், ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவே கட்சியின் பொதுச்செயலாளராக பதவியேற்று தொடர்ந்து வழிநடத்த வேண்டும் என்று அவரை சந்தித்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    கடந்த 13-ந்தேதி அ.தி.மு.க. எம்.பி.க்களில் சசிகலா புஷ்பாவை தவிர ஏனைய 49 எம்.பி.க்களும் சசிகலாவை சந்தித்து கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்க வலியுறுத்தினர். 25 மாவட்ட செயலாளர்களும், நிர்வாகிகளும் ஆதரவு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றி கடிதம் கொடுத்துள்ளனர்.

    இந்த நிலையில், முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 135 பேரும் விரைவில் சசிகலாவை சந்தித்து பொதுச் செயலாளர் பதவியேற்க அழைப்பு விடுக்க இருக்கின்றனர். இது தொடர்பாக, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களிடம் ஆதரவு திரட்டப்பட்டு வருகிறது.

    இந்தப் பணி முடிந்ததும், சசிகலாவை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களோடு சந்திப்பார் என தெரிகிறது. அனேகமாக, 20-ந்தேதி இந்த சந்திப்பு நடைபெறும் என்று தெரிகிறது.

    இந்த சந்திப்புக்கு பிறகு, அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட இருக்கிறது. இந்தக் கூட்டத்தில், ஏகமனதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார். அதன்பிறகு, கட்சி பொறுப்புகளையும் அவர் தொடர இருக்கிறார்.
    Next Story
    ×