search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரங்களை அப்புறப்படுத்தும் பணியாளர்களுக்கு முதல்வர் பாராட்டு
    X

    மரங்களை அப்புறப்படுத்தும் பணியாளர்களுக்கு முதல்வர் பாராட்டு

    சென்னையில் புயலில் சாய்ந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணியாளர்களை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சென்று பாராட்டு தெரிவித்தார்.
    சென்னை:

    இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    ‘வார்தா’ புயல் கடந்த 12-ந் தேதியன்று சென்னை அருகே கரையை கடந்தது. இதன் காரணமாக சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து பலத்த சேதங்கள் ஏற்பட்டன.

    புயலால் பாதிக்கப்பட்டு எண்ணூர் கத்திவாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்ட மக்களையும், திருவள்ளூர் மாவட்டம், மாத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்ட மக்களையும், பொன்னேரி தீபம் கல்யாண மண்டபத்தில் உள்ள நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்ட மக்களையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார்.

    காஞ்சீபுரம் மாவட்டம், வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் ஏற்பட்ட சேதங்களை அவர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், மாம்பாக்கத்தில் நடைபெற்று வரும் மின்மாற்றி மற்றும் மின்பாதை சீரமைப்பு பணிகளை பார்வையிட்டு, மாமல்லபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

    இந்த நிலையில் 15-ந் தேதி (நேற்று) சென்னையில் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, சி.பி. ராமசாமி சாலை, செயின்ட் மேரீஸ் சாலை, சேமியர்ஸ் சாலை, டர்ன்புல்ஸ் சாலை, ஆர்ச் பிஷப் மாதியாஸ் அவென்யூ ஆகிய இடங்களுக்கு நேரில் சென்று, புயலில் வீழ்ந்து கிடக்கும் மரங்கள் அப்புறப்படுத்தப்படும் பணிகளை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அங்கு பணியில் ஈடுபட்டிருக்கும் பணியாளர்களுக்கு ரொட்டி, குடி தண்ணீர் ஆகியவற்றை வழங்கியதுடன், அவர்களது பணியை பாராட்டி அவர்களை ஊக்கப்படுத்தினார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
    Next Story
    ×